வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (27/03/2018)

கடைசி தொடர்பு:15:21 (27/03/2018)

``எங்கள் கணவர்களை வெட்டாதீர்கள்..!” - மரங்களைத் திருமணம் செய்த மெக்ஸிகோ மனைவிகள்

நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த திருமண நாளும் வந்தது. அழகான வெள்ளை கவுன் அணிந்து காத்துக்கொண்டிருந்தார்கள் மணமகள்கள். கிறிஸ்தவ முறைப்படி கையில் பூச்செண்டு மற்றும் மெழுகுவத்தியுடன் தன் தந்தையின் கைகளைப் பிடித்தவாறு மணமகன்களை நோக்கிச் சென்றார்கள் அந்த மெக்ஸிகன் அழகிகள். வழியில், உறவினர்கள் அனைவரும் பாடல் பாடிக்கொண்டும், நடனம் ஆடிக்கொண்டும் ஆரவாரமாகக் கொண்டாடினர். மணமகன்களோ, எந்தவித ஆடம்பரமும் அலங்காரமுமின்றி நின்றுகொண்டிருந்தனர். சொல்லப்போனால், சிறு அசைவுகூட இல்லாமல் நின்றுகொண்டிருந்தனர். ஆசைப் பார்வையுடன், மணமகன்களை நெருங்கிய மணப்பெண்கள், தங்களின் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். திருமணம் இனிதே நிறைவேறியது.

திருமணம்


மோதிரம் மாற்றிக்கொள்ளவில்லை, எந்தவிதமான சடங்கும் இல்லை. `இது என்ன சுயமரியாதைத் திருமணமா?' என்று மனதில் எழும் கேள்விக்கு, பதிலும் இல்லை. காரணம், இது விழிப்புஉணர்வு திருமணம். எந்த ஓர் அசைவுமின்றி நின்றுகொண்டிருந்த மணமகன்கள் அனைவரும் - மரங்கள்! ஆம், நம்ம ஊர் கழுதைத் திருமணம்போல் மெக்ஸிகோவில் `மரம் திருமணம்.' ஆனால், இது மழைக்காக நடத்தப்படும் திருமணம் அல்ல; மரங்கள் வெட்டப்படுவதைத் தடுப்பதற்காக நடத்தப்பட்டப் போராட்ட திருமணம்.

2015-ம் ஆண்டில் `மெக்ஸிகோவின் பரப்பளவில் 33 சதவிகிதம் காடுகளால் சூழ்ந்திருந்தது. எனினும், சமூகவிரோதிகளால் மரங்கள் வெட்டப்பட்டு, சட்டத்துக்குப் புறம்பான தாவரப் பயிரிடுதலால் காடுகள் அழிந்துவருகின்றன' என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது உலக வங்கி. இதையடுத்து, அந்நாட்டு சமூக ஆர்வலரான ரிச்சர்டு டோர்ஸ், இதற்கான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும்விதமாக ஒரு மரத்தைத் திருமணம் செய்தார். பிறகு, மரத்துடன் திருமணமான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவுசெய்தார். தன் வாழ்க்கை  துணைவரைப்போல் மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். இது, பலரையும் சென்றடைந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

Wedding

திருமணம் என்றாலே, பெண்களுக்குக் கொண்டாட்டம்தான். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை பெண்களின் கனவுகளுக்கு எல்லையே இல்லை. அதிலும் சில மாடர்ன் பெண்கள், எவரெஸ்ட் சிகரம், கடல் அலையில் கல்யாணம் என வித்தியாசமான திருமண இடங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், சில மெக்ஸிகன் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்களோ, சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க, மரங்களை மணமகனாக்கினர். வேடிக்கையாக இருந்தாலும், இதன் ஆழமான நோக்கம் அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்று.

மெக்ஸிகோ நகரில் உள்ள `San Jacinto Amilpas' எனும் ஊரில் இந்த வித்தியாசமான திருமணம் நடைபெற்றது. இங்கு காடுகளையும் மரங்களையும் சிலர் சட்டவிரோதமாக அழித்துவருகின்றனர். இதைத் தடுப்பதற்கு `Bedani' எனும் சமூகநல அமைப்பு, இயற்கைத் தாய்க்கு நன்றி கூறும்விதமாக ரிச்சர்டு டோர்ஸின் `மரத்துடன் திருமணம்' கான்செப்டைப் பின்பற்றினர்.

இந்தத் திருமணத்தில் மணம் முடித்துகொண்ட டோலோரெஸ் லெஸிஜி என்பவர், ``மரத்தைத் திருமணம் செய்வது என்பது, ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு தினமும் மரத்தை அழித்துக்கொண்டிருப்பவர்களை எதிர்க்கும் உன்னதமான ஒரு போராட்டம்" என்று கூறி நெகிழ்ந்தார். இவ்வளவு கோலாகலமாக நடக்கும் இந்தத் திருமணம், எங்கும் எதிலும் பதிவாகாது. மாறாக, விழிப்புஉணர்வு மட்டுமே ஏற்படுத்தும்.

Tree Wedding

உண்மையான திருமணம்போல் நிகழும் இந்த விழாவில், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்துகொண்டு, இயற்கையைப் போற்றி ஆதரவளித்தனர். வழக்கமாக, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் முடிந்ததும், மணப்பெண் தன் கையில் வைத்திருக்கும் பூங்கொத்தை வீசி எறிவார். அதுவும் இதில் உண்டு. இப்படி சுவாரஸ்யமான பல நிகழ்வுகளுடன் இந்த வித்தியாசமான விழிப்புஉணர்வு திருமண நிகழ்வு முடிவடைகிறது.


டிரெண்டிங் @ விகடன்