வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (31/03/2018)

கடைசி தொடர்பு:14:03 (31/03/2018)

நெட்ஃபிலிக்ஸில் படமாக வெளிவந்திருக்கும் `ராப் பாடகி' ராக்சேன் பற்றி உங்களுக்குத் தெரியுமா?!#RoxanneShante

ஒருவரின் கரியர் என்பது பொதுவாக இருபதாம் வயதில் ஆரம்பிக்கிறது என்பார்கள். ஆனால், பதின்ம வயதிலேயே தனது துறையின் உச்சத்தைத் தொட்டு, இருபதுகளில் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, துறையைவிட்டே வெளியேறியவர், ராக்சேன் ஷான்டே (Roxanne Shante). திருமணம், கணவர் அல்லது குடும்ப ஆசைகளுக்காக என ஏதேனும் ஒரு காரணத்துக்காக எதிர்காலத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது பெண்களுக்கு எழுதப்படாத விதி. அதற்கான பரிசாக, அதிகபட்சம் கிடைப்பதென்னவோ ஒரு கப் காஃபி தான். அதையும் நாம் தான் செய்ய வேண்டும் என்பது தனி. ராக்சேனுக்கும் அதே பிரச்சனைதான்.


ராக்சேன் ஷாண்டே முதல் பெண் ராப் இசை பாடகர். ’ராக்சேன்’ எண்பதுகளின் ராப் இசை பிரியர்களால் மறக்க முடியாத பெயர். இவரது பாடல் எப்போது ஒலிபரப்பப்படும் என்பதை, நேரம் சொல்லி ஒலிபரப்பின ரேடியோக்கள். ராக்சேன் ஏரா முடிந்து இருபத்தி இரண்டு வருடங்கள் கழித்து, இன்றைக்கு மீண்டும் ’ராக்சேன் ராக்சேன்’ ஒளிக்கவும் தொடங்கியிருக்கிறது. ஆம்! Netflix நிறுவனம் ராக்சேனின் வாழ்க்கையைப் படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறது.


1969 நவம்பர் 9-ம் தேதி, லோலிடா ஷாண்டேவாக நியூயார்க்கில் பிறந்தவருக்கு, ரத்தத்திலேயே ராப் இசை ஓட ஆரம்பித்திருந்தது. ராப், ஜாஸ் இசைக்கலையின் தொடக்கப் புள்ளியான ஆப்பிரிக்காதான் இவரது பூர்விகமும்.
 

ராக்சேன் ஷாண்டே

10 வயதில் உள்ளூரில் நடந்த போட்டி ஒன்றில், 50 டாலர் பரிசு வென்றதில் தொடங்கியது ராக்சேன் இசைப் பயணம். எதிர்த்துப் போட்டியிடுபவர், ‘ஒரு பெண் குழந்தையுடன் நான் போட்டியிடுவதா?’ என்று எதிர் போட்டியாளர் கேட்க, ‘நீ குயின்ஸ்ப்ரிட்ஜின் சாம்பியனுடன் மோத வேண்டும் என்று கேட்டாய். இவள் தான் குயின்ஸ்ப்ரிட்ஜின் சாம்பியன்’ என்று DJ சொல்ல, ராக்சேன் பாடத்தொடங்குவதுதான் முதல் காட்சி. தற்போதும் பெரிய அளவில் பெண்கள் இல்லாத ஒரு துறையின் கதவுகளை 1980-ம் ஆண்டுகளிலேயே திறக்க, ஷாண்டே என்ன மாதிரியான சிக்கல்களைச் சந்தித்தார் என்பதைக் காட்டிய விதம் அருமை.

m
முதலில் வெறுமனே ராப் இசை மோதல்களில் பங்கெடுத்த ஷாண்டேவின் வாழ்க்கை, ராக்சேனாக மாறியது ஓர் எதிர்பாராத விபத்து.

ராக்சேன் ஷாண்டே - முதல் பெண் ராப் இசை கலைஞர்

ராக்சேனின் 15-வது வயதில், UTFO  என்கிற ஒரு பிரபல ராப் இசைக் குழுவின் 'ஹங்கிங் அவுட்' (Hanging out) என்ற பாடல் வெளியானது. ராக்சேன் என்கிற பெண்ணை மோசமாகச் சித்தரித்து, அந்தப் பெண்ணிடம் தங்களுக்கு இருக்கும் அனுகூலங்களை விவரித்தது அந்தப் பாடல். ஆனால், பாடல் அவ்வளவாக ஹிட் அடிக்கவில்லை. ஷான்டேவின் வீட்டுக்கு அருகில் வசித்த ராப் இசை பாடல்களை வெளியிடும் மார்லோன் வில்லியம்ஸ் என்பவர் அதே பீட்டில், அதற்கு எதிரான ஒரு பாடலை ராக்சேனை பாடவைத்து வெளியிட்டார். இந்தப் பாடல் ரேடியோவில் ஹிட். ‘Roxanne’s Revenge’ என்கிற ஆல்பம், ராக்சேன் ஷான்டே என்னும் பாடகர் பெயரில் வெளியிடப்பட, அது ஒரே இரவில் ஐயாயிரம் காப்பிகள் விற்றது. சில நாள்கள் இரண்டரை லட்சம் பிரதிகளைத் தாண்டியது. 


UTFO கோபம் எல்லையைக் கடந்தது. பதிலுக்கு ‘The Real Roxanne’ என்கிற ஆல்பத்தினை அவர்கள் வெளியிட்டனர். அதில், ராக்சேன் ஷான்டேவை மோசமாகத் திட்டி இருந்தனர். பிறகு, The Parents of Roxanne, Yo, My Little Sister (Roxanne's Brothers), Rappin' Roxy: Roxanne's Sister, Roxanne's Doctor – The Real Man, The Final Word – No More Roxanne (Please) என்று எக்கச்சக்க ராக்சேன் பாடல்கள், பல ராப் இசைக் கலைஞர்களால் வெளியிடப்பட்டன. இவற்றின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100. பலவும் ராக்சேனை திட்டியோ அல்லது வெவ்வேறு பார்வையில் ராக்சேன் என்கிற பெண்ணை உருவகப்படுத்துவதாகவோ இருந்தன. ஆனால், ராக்சேனுக்கும் UTFO-வுக்கும் பகை மட்டும் தீராமல் இருந்தது. ’Calling Her a Crab’ என்கிற பாடலில், ராக்சேனை ஒரு குரங்கு (Ape) என்றும், ராப் செய்வதை நிறுத்திவிட்டால் வாழைப்பழம் தருவதாகவும் பாடியிருந்தனர். இதற்கெல்லாம் ராக்சேன் அசரவில்லை. அதன்பின்பும் பல சிங்கிள்கள், ஆல்பங்களை வெளியிட்டார்.


இந்தத் தொழில் முறைப் பயணம் ஓரளவு எல்லோரும் அறிந்தது தான். ராக்சேன் ராக்சேன் படம், ஷாண்டேவின் குடும்ப வாழ்க்கையைச் சிரத்தை மேற்கொண்டு காட்ட முயற்சித்திருக்கிறது.


1980-ம் ஆண்டுகளில் ஒரு பெண்ணாக இவரது குரலில் ஒலித்த இசை, பல குட்டிக் குழந்தைகளை, கண்ணாடி முன்பு நின்று பாடத் தூண்டியது. பாடகராகும் ஆசையினை விதைத்தது. இசை ஒரு பக்கம் என்றால், குடும்பம் வேறொரு பக்கமாக இருந்தது. எனவே, 25 வயதில் பாடுவதை நிறுத்துவிட்டார். ”இந்தத் துறை எனக்குத் தேவையான பணத்தைத் தருவதாக அப்போது இருக்கவில்லை. எனவே, இந்தத் துறையிலிருந்தே விலகினேன்” என்கிறார்.


ராக்சேனின் கண்டிப்புமிக்க தாயார், தன்னைவிடப் பல மடங்கு வயது மூத்த காதலன், 15 வயதிலேயே ஒரு குழந்தை, தான் காப்பாற்றவேண்டிய பொறுப்பில் தங்கைகள் எனக் குடும்ப பொறுப்புகள் இவரது தலையில் மொத்தமாக படிப்படியாக இறங்குவதைக் காட்டும்படியாக திரைக்கதை நகர்கிறது. அதுவும், அவரது தாயாரின் காதலன், இவர்களை ஏமாற்றிவிட்டுப் போன பின், மொத்தக் குடும்பமும் ஒரு மோசமான நிலைக்குத் தள்ளப்படும் வலியைக் காட்டுவதோடு, அதனை நம்மாளும் உணர முடிகிறது. ஷாண்டேவின் தங்கைகள் அப்பாவைப் பார்ப்பதற்காக காத்திருக்கும் சீன் தொடங்கி நிறைய ஒன்ற வைக்கும் காட்சிகள் இருக்கின்றன. சூழ்நிலைக்கு ஏற்றார்போல பின்னணியில் ஒலிக்கும், எண்பதுகளின் பாடல்களினால், விஷுவலாக மட்டுமல்லாமல், நம்மை மொத்தமாகவே அந்த இடத்திற்கு கடத்திச் செல்கிறது. இவ்வளவு ப்ளஸ்கள் இருந்தாலும், படம் அவரின் முதல் ஆல்பம் வெளியிடப்படுவதற்கு சில நாள்கள் முன்பானதாகவே முடிந்துவிடுகிறது. ஆனால், இதன் பின் தான் ஷாண்டேவின் வாழ்க்கை, இன்னும் போராட்டத்திற்கு தள்ளப்பட்டது. அதைப் பதிவு செய்திராதது ஒரு பெரிய குறையாகவேத் தோன்றுகிறது. படத்தை நெகட்டிவாக முடிக்காமல், இன்ஸ்பையரிங்காக முடிக்க வேண்டி இப்படிச் செய்தார்களா என்றும் தெரியவில்லை. மேலும், ஷாண்டே மருத்துவமனையில் இருக்கும் காட்சி உள்ளிட்ட சில காட்சிகள் அவை உண்மையாகக் கடத்த வேண்டிய வலியைக் கடத்தாமல், சினிமாத்தனம் மேலொங்கி இருந்தது.


Cardi B, Nicki minaj என்று இன்றைக்குப் பல பெண்கள் அதே பாதையில் பயணிக்கிறார்கள். இன்றைக்கும், ஆண் பெண் விகிதத்தில் பெரிய அளவு வேறுபாடு இருக்கும் இசைத் துறையில், முதன்முதலில் இந்தப் பாதையில் சென்றவர் ராக்சேன், எத்தனை எத்தனை முட்களையும் கற்களையும் தாண்டியிருப்பார் என்பதை நம்மால் யூகிக்க மட்டுமே முடிகிறது. பெண்களுக்கு ராக்சேன் எல்லாக் காலத்துக்குமான இன்ஸ்பிரேஷன்! ராக்சேன் ராக்சேன் படமும் ஒரு நல்ல அனுபவத்தைத் தரும்.


டிரெண்டிங் @ விகடன்