வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (30/03/2018)

கடைசி தொடர்பு:14:48 (30/03/2018)

45000 சொற்கள்... 70 மைல் தூர கோடு... ஒரு பென்சில் என்னவெல்லாம் செய்யும்? #PencilDay

பென்சில்

' பென்சில் ' பள்ளிப்பருவத்து தொலைந்து போன ஞாபகம். குழந்தைகளாய் இருக்கும்போது பென்சிலை தான் பயன்படுத்தினோம். ஏனென்றால் தவற்றை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கொடுக்கப்பட்டது. வளர்ந்ததும் பேனாவில்தான் எழுதியாக வேண்டும். அப்பொழுது தவறு செய்தால் திருத்துவது சிரமம். அடிக்கமட்டும்தான் முடியும். நமது தவறும் தெளிவாகத் தெரியும். 'பென்சில் நமது  பயிற்சி பருவமும் கூட. எழுதுவதற்கும், வரைவதற்கும் பயன்படுத்தப்பட்ட பென்சில் பள்ளிப்பருவம் முடிந்ததும் தேவைப்படுவதில்லை. அதைப்பற்றி நினைப்பது கூட இல்லை.         

ஆண்டுதோறும் மார்ச் மாதம்  30 ஆம் தேதி தேசிய பென்சில்  தினமாக கொண்டாடப்படுகிறது.  கடந்த 150  வருடங்களுக்கும் மேலாக பென்சில் உற்பத்தி மற்றும் அதன் வடிவமைப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், 1858 - ல் ஹைமேன் லிப்மான் ( Hymen Lipman) பென்சிலின் அடியில் அழிப்பானை இணைத்து பென்சிலின் வடிவமைப்பைப் புதிதாக மாற்றினார். ஒரு மர  பென்சிலில் கிராபைட் நான்கில் மூன்று பங்கும், அழிப்பான் ( Eraser) நான்கில் ஒருபங்கும் சேர்த்து உருவாக்கினார். அன்றிலிருந்து மர பென்சிலின் ஒரு பக்கம் எழுதுவதற்கும், மற்றொரு பகுதி அழிப்பதற்கும் பயன்பட்டது. இவர் உருவாக்கிய பென்சிலின்  புதிய வடிவமைப்பை கௌரவிக்கும் விதமாக தேசிய பென்சில் தினம் கொண்டாடப்படுகிறது. 

பென்சில் - தோற்றம், வரலாறு :

 லத்தின் மொழியில் பெனிசிலஸ் ( penicilus) என்பதற்குச் சிறிய வால் ( Little tail) என்று பொருள். 500 வருடங்களுக்கு முன்பே கிராபைட் கண்டுபிடிக்கப்பட்டாலும், 200 வருடங்களுக்கு முன்பே பென்சில் உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் ஃபேபர் குடும்பம் ( Faber family) பென்சில் தயாரிப்பில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி வெற்றியடையவில்லை. பிறகு 1795-ல்   N.J. Conde என்பவர் பென்சிலை உருவாக்கினார். உலர்ந்த கிராபைட்டுடன், களிமண் மற்றும் நீரைச் சேர்த்து காயவைத்து பின்னர் பென்சிலின் நடுப்பகுதியில் உள்ள கருமைப்பகுதியை உருவாக்கினார். இவரின் பென்சில்கள் பிரபலமடைந்தது. இவர் பயன்படுத்திய முறையே இன்றளவும் பென்சில் தயாரிப்புக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. 

1890 - ஆம் ஆண்டு  L&C Hardmuth Company of Austria Hungary, கோஹினூர் ( Koh - I - Noor) எனும் பிராண்ட் பென்சிலை உருவாக்கினர். கோஹினூர் எனும் புகழ்மிக்க வைரத்தின் பெயரை,  இவர்கள் உருவாக்கிய பென்சிலுக்கு தேர்வு செய்தனர். இவர்களின் நோக்கம் இந்த பென்சில்கள் உலகின் விலையுயர்ந்த, சிறந்த பென்சிலாக இருக்க வேண்டும் என்பதே. உற்பத்தியாளர்கள் முதன்முதலில் உருவாக்கிய பென்சிலை மஞ்சள் நிறத்திலேயே செய்தனர். ஏனெனில் மஞ்சள் நிறமானது ராயல்டி மற்றும் மரியாதையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மற்ற நிறுவனங்களும் மஞ்சள் நிறத்தை தாங்கள் உருவாக்கும் பென்சில்களுக்கும் பயன்படுத்தி, இவையும் உயர்ந்த வகை பென்சில்கள்  எனக் காட்டிக்கொண்டனர். மக்களும் மஞ்சள் நிறத்தில் வரும் பென்சில்களையை சிறந்தது எனக் கருதி வாங்கினர். 

பென்சில்

பென்சில் குறித்த சுவாரஸ்யமான செய்திகள் :
ஒரே ஒரு மர பென்சிலால் 45,000 வார்த்தைகளை எழுத முடியும். 70 மைல் தூரம் வரை கோடு  வரைய  முடியும்.

பென்சிலால் நீரின் அடியிலும் எழுதலாம். ஜீரோ ஈர்ப்பு சக்தியுள்ள விண்வெளியிலும் பென்சிலால் எழுத முடியும். அமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் தங்கள் விண்வெளி பயணத்தின் போது பென்சிலை பயன்டுத்துகின்றனர். 

ஒரு நல்ல அளவுள்ள  மரத்தினால் கிட்டத்தட்ட 3,00,000 பென்சில்களை உருவாக்க முடியும்.

உலகளவில் ஒரே ஆண்டில் 14 பில்லியினுக்கும் மேற்பட்ட பென்சில்கள் உருவாக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 62 முறை உலகைச் சுற்ற முடியும். 

வளர்ந்து வரும் சூழ்நிலையில் எழுதுவதைக் கூட மறந்து விடுகிறோம். நமது கைகளை கைப்பேசிக்கும், கணினிக்குமே தானமாகத் தந்துவிட்டோம்


டிரெண்டிங் @ விகடன்