தலையே இல்லாமல் 18 மாதங்கள் வாழ்ந்த சேவல் ‘மைக்’... வரலாற்று அதிசயம்! | A cock which lived for 18 months without head

வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (02/04/2018)

கடைசி தொடர்பு:17:11 (02/04/2018)

தலையே இல்லாமல் 18 மாதங்கள் வாழ்ந்த சேவல் ‘மைக்’... வரலாற்று அதிசயம்!

தலையில்லா சேவலை விற்க பல இடங்களுக்குக் கொண்டு சென்றும் யாரும் வாங்கவில்லை. ஆனால் மைக்கைப் பற்றிய பேச்சு வைரஸ் நோயாய்ப் பரவ அதைப் பற்றி உள்ளூர் பத்திரிக்கை ஒன்றில் சிறு கட்டுரையும் பிரசுரிக்கப்பட்டது.

தலையே இல்லாமல் 18 மாதங்கள் வாழ்ந்த சேவல் ‘மைக்’... வரலாற்று அதிசயம்!

அது 1946-ம் வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர். அமெரிக்காவின் கொலாராடோவில் இருந்த லாய்டு ஆல்சன் என்ற விவசாயி,  அன்று வழக்கம்போல் தனது பண்ணையில் வளர்த்துக்கொண்டிருந்த கோழிகளை இறைச்சிக்காக வெட்டிக் கொண்டிருந்தார். அப்போதுதான் மைக் அவர் கைக்கு வந்தது. அவரும் பத்தோடு பதினொன்றாக அதன் தலையை வெட்டிக் கீழே போட இறந்த கோழிகளைச் சுத்தம் செய்த மனைவி அந்த சேவலைக் கையில் எடுக்கக் குனிந்தார். ஆனால், கீழே விழுந்த அந்தத் தலையில்லா சேவல் துள்ளி எழுந்து அங்கும் இங்குமாக ஓடியது. அதிர்ந்துபோன இருவரும், 'ஒருவேளை சாத்தான் வேலையாக இருக்குமோ' என்று முதலில் அஞ்சினாலும், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அதைப் பிடித்து ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்து வைத்தனர். "தலையில்லாமல் எவ்வளவு காலம் இருந்துவிடும், எப்படியும் காலையில் இறந்துவிடும்... பயப்படாதே..." என்று மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தூங்கச் சென்றுவிட்டார்.

மறுநாள் காலை பெட்டியைத் திறந்து பார்த்தபோது அந்தச் சேவல் சாகவில்லை. "இது எப்படி...?" பொத்துக்கொண்டு வந்த கேள்வியை இருவராலுமே அடக்கிக் கொண்டிருக்க முடியாமல் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டனர். பிறகு அதை விற்க முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. தலையை வெட்டியும் உயிருடன் இருக்கும் சேவலை மேலும் எதுவும் செய்திட முடியாது என்று அவர்கள் அஞ்சினர். அன்று அவர்களுக்கு வந்த அந்த அச்சம் தான் மைக்கை ஒன்றரை வருடம் உயிர் பிழைக்க வைத்து இன்று வரலாற்றில் ஒருவனாக மாற்றியது. இன்று அந்த மாநிலத்தில் ஒவ்வொரு ஜூன் மாத முதல் வாரமும் மைக்குக்காக  Mike The Headless Chicken Festival என்ற ஒரு திருவிழாவே கொண்டாடும் அளவுக்கு அவனைப் பிரபலப்படுத்தியது.

சேவல்

PC: Waters family

ஆல்சன் அந்தத் தலையில்லா சேவலை விற்கப் பல இடங்களுக்குக் கொண்டு சென்றும் யாரும் வாங்கவில்லை. ஆனால், மைக்கைப் பற்றிய பேச்சு வைரஸ் நோயாய்ப் பரவ அதைப் பற்றி உள்ளூர் பத்திரிகை ஒன்றில் சிறு கட்டுரையும் பிரசுரிக்கப்பட்டது. மாறுபட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு "அதைக்கொண்டு வாருங்கள்; நாம் அதை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும்" என்று சொன்னார். இவரும் வறுமையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்க போய்த்தான் பார்ப்போமே என்று அங்கிருந்து 300 மைல் தொலைவிலிருந்த யூடாவின் சால்ட் லேக் சிட்டிக்குக் (Salt Lake City, Utah) கொண்டு சென்றார். மைக் என்னதான் உயிர் பிழைத்து இருந்தாலும் அது மேலும் உயிரோடு இருக்க அதற்கு உணவு வேண்டும் மற்றும் கழுத்தில் மிஞ்சியிருக்கும் சுவாசக் குழாய் வழியாக அது சுவாசிக்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது. அதற்காக ஆல்சன் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். கையில் ஒரு சிரஞ்சினை வைத்துக்கொண்டு அதன்மூலம் சுவாசக் குழாயைச் சுத்தம் செய்வார், அடைப்புகள் இருந்தால் நீக்கிவிடுவார். அதே சிரஞ்சை வைத்து உணவுக்குழாயில் தானியங்களையும் வழங்குவார். அவர் அவ்வாறு ஒரு சேவலுக்கு உணவு ஊட்டுகிறார் என்பதே அனைவருக்கும் தேடிச் சென்று ரசிக்கும்படி இருந்தது. மைக் பெயருக்கும், ஆல்சன் தம்பதியின் பெயருக்கும் கடிதங்கள் வந்து குவிந்தன. சில சமயங்களில் தலை இல்லாத மைக், கொலராடோ என்று மட்டுமே முகவரிகள் இருக்கும்.
அதைப் பற்றிக் கேள்விப்பட்ட ஆராய்ச்சியாளர்கள், அதை வைத்து ஆராய்ச்சி செய்ய விரும்பியதால் அவர்களோடு ஆல்சனும், மைக்கும் சென்றுவிட்டனர். இப்படியாகப் பல ஊர்களுக்குச் சென்றார்கள். மைக்கை வைத்து ஆராய்ச்சியாளர்கள் பல ஆராய்ச்சிகளைச் செய்து பார்த்தார்கள். ஒருவேளை கழுத்தில் வெட்டும்போது ஏதாவது தொடர்பு வெட்டுப்படாமல் இருக்கலாம் என்று நினைத்து மைக்குக்கு எப்படி வெட்டியிருந்ததோ அதே அளவில் வேறு சில கோழிகளையும் வெட்டிப் பார்த்தார்கள். ஆனால், எந்தக் கோழியும் மைக் போல ஆரோக்கியமாக நிற்கவில்லை, அனைத்துமே மடிந்து விழுந்தன.

மைக்கை வைத்துப் பல ஆராய்ச்சிகளைச் செய்துபார்த்த ஆராய்ச்சியாளர் டாம் ஸ்மல்டர்ஸ் (Dr. Tom Smulders), "ஒரு கோழியின் தலை வெட்டப்பட்டால் அதன் மூளைப்பகுதி உடலின் மற்ற பகுதிகளோடு இருந்த தொடர்பினை இழந்துவிடும். ஆனால், குறைந்த நேரத்துக்கு மூளையின் தண்டுவடத்தில் இருக்கும் பிராண வாயு உடல் உறுப்புகளைச் செயல்பட வைப்பதால் சில நிமிடங்களுக்கு உயிரோடு துடித்துக் கொண்டிருக்கும். பொதுவாக கழுத்துப் பகுதி வழியாக உடலின் ரத்தம் மொத்தமும் வெளியேறி விடுவதால் உடல் சிறிது சிறிதாகத் துடிப்பு குறைந்து உயிர் பிரியும். இந்தச் சமயங்களில் தான் சில கோழிகள் தலையை வெட்டியவுடன் ஏற்படும் அதீத ரத்த ஓட்டத்தால் அங்கும் இங்கும் ஓடும். இவை அனைத்தும் சில நிமிடங்கள் மட்டுமே நிகழும், ஆனால், மைக்கின் விஷயத்தில் ரத்தப்போக்கு ஏற்படாமல் உறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி அது இத்தனை நாள்கள் உயிருடனிருப்பது ஆச்சரியமளிக்கிறது" என்கிறார்.
இருப்பினும் அவர் மேற்கொண்டு தொடர்ந்த ஆராய்ச்சியில் துண்டாக்கப்பட்ட மைக்கின் தலையில் மூளையின் சிறு பகுதியே இருந்திருக்கிறது. மூளைத் தண்டின் ஒரு பகுதி அல்லது முழு மூளைத் தண்டும் தலையோடு வெட்டப்படாமல் உடலில் இருந்திருக்க வேண்டும். நாம்  1800களில்  மனித மூளையின் செயற்பாடுகளோடே மற்றவையின் மூளைகளையும் ஒப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், அது தவறு, சேவலின் மூளை அதன் தலையின் மேற்பகுதியில் இல்லை. முகத்துக்குப் பின்பக்கம் கழுத்துக்குச் சிறிது மேலே தான் உள்ளது. ஆகவே, மைக் இந்தக் காயத்தில் இருந்து உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று அவர் ஆராய்ச்சியின் இறுதியில் கூறுகிறார். ஆனால், மைக்குக்கு தலை வெட்டப்பட்ட இடத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் ரத்தம் உறைந்தது எப்படி என்பதுதான் இன்றுவரை புதிராகவே உள்ளது.

எப்படியும் அறிவியல் காரணம் இருந்திருக்கும். அதைத் துல்லியமாகக் கண்டறிய ஏதுவான வசதிகள் அன்றைய காலகட்டத்தில் இல்லாததுகூட இதை ஒரு புதிராகவே வைத்திருக்கலாம். இவ்வாறு பலரின் கவனத்தை ஈர்த்த மைக் அன்றைய இரவில் இப்படி ஒரு பிரச்னையைச் சந்திக்கும் என்று நிச்சயமாக நினைத்திருக்காது. அன்று இரவு ஹோட்டல் அறையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென்று ஆல்சனின் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் அவரது அறைக்கு ஓடி வந்தனர். தலையில்லா மைக் தனது துன்பத்தைக் குரல் கொண்டு வெளிப்படுத்தக்கூட முடியாமல் திணறிக்கொண்டிருந்தான். சுத்தம் செய்ய வைத்திருந்த சிரஞ்சைக் கடைசியாக நிகழ்ச்சிக்குச் சென்ற இடத்தில் மறந்துவிட்டு வந்த ஆல்சன் புதிதாக ஒன்று வாங்குவதற்குள் இப்படி ஆகிவிட்டது. மூச்சுத்திணறித் துடித்த மைக் அன்று இரவு உயிரிழந்தான்.

ஒரு மாதம் இரண்டு மாதங்கள் அல்ல, மொத்தமாகப் பதினெட்டு மாதங்கள் தலையே இல்லாமல் உயிரோடு வாழ்ந்த மைக்கின் நினைவாக ஃப்ரூட்டா நகரத்தில் அந்த நகரத்து மக்கள் வைத்த சிலை வருடங்களைத் தாண்டி இன்னும் அதன் கதையை அனைவருக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்