100 ஆண்டில் 10 சதவிகிதம் அதிகரித்த பாலைவனம்... சஹாராவில் என்ன நடக்கிறது?

இந்த ஆராய்ச்சி சஹாரா பாலைவனத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் மற்ற பாலைவனங்களின் பரப்பளவும் இதேபோல் அதிகரித்திருக்கலாம் ஆராய்ந்து பார்த்தால் தெரியும்

100 ஆண்டில் 10 சதவிகிதம் அதிகரித்த பாலைவனம்... சஹாராவில் என்ன நடக்கிறது?

பண்டைய இலக்கியங்களிலும் பல்வேறு கதைகளிலும் பாலையாதல் பற்றி செய்திகளைப் படித்திருந்தாலும் நேரடியாகப் பாலையாதலை இப்போதைய உலகத்தினர் எவரும் பார்த்ததில்லை. ஆனால், உலகத்தின் கண்முன்னே ஒரு பாலையாதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யாருக்கும் தெரியாமல் அதைப் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல் கடந்த 100 ஆண்டுகளாக நிகழ்ந்திருக்கிறது.  சஹாராவின் பரப்பளவு 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சஹாரா பாலைவனம்

கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் பாலைவனத்தின் பரப்பளவு 10 சதவிகிதம் அதிகரித்திருப்பது விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. இதுகுறித்த ஆராய்ச்சி முடிவுகளைக் கடந்த வியாழக்கிழமை ஜர்னல் ஆஃப் கிளைமேட்(Journal Of Climate) இதழில் வெளியிட்டனர் மேரிலண்ட் பல்கலைக்கழகத்தைச் (university of Maryland) சேர்ந்த ஆய்வாளர்கள். இந்த ஆய்வுக்கான நிதியுதவியை யுனைடெட் ஸ்டேட்ஸ் தேசிய அறிவியல் கழகம் (U.S Natinol Science Foundation) செய்துள்ளது. இந்த ஆய்வுக்காக 1920லிருந்து 2013 வரையிலான ஆண்டுரீதியான மழைப்பொழிவுத் தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்துள்ளனர். இந்தத் தரவுகளை செயற்கைக்கோள்கள் மூலமாகவும் மற்ற ஆவணங்களிலும் சேகரித்துள்ளனர். தரவுகளின் படி மழைப்பொழிவின் அளவானது ஆண்டுக்கு ஆண்டு படிப்படியாக குறைந்துள்ளது. மழைப்பொழிவின் அளவு குறைந்ததோடு மட்டுமில்லாமல் பாலைவனத்தின் காற்றில் இருக்கும் நீரின் அளவும் குறைந்துள்ளது. அதனால்தான் பாலைவனத்தின் அருகிலுள்ள மற்ற நிலப்பரப்பும் இவ்வளவு வேகமாகப் பாலைவனமாக மாறியுள்ளது என்கின்றனர் ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள். 

1920-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சஹாரா பாலைவனத்தின் மழைப்பொழிவு குறைந்ததற்கு இயற்கையான காரணங்கள் இருந்தாலும் மனிதனால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றமும், புவி வெப்பமயமாதலுமே முக்கிய காரணங்களாக உள்ளன என்கின்றனர் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள். பாலைவனத்தின் பரப்பளவு அதிகரிப்பது இயல்பாய் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வே. ஆனால், பாலையாதலின் வேகம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கக்கூடிய ஒன்று. 100 ஆண்டுகளில் 10 சதவிகிதம் அதிகரிப்பது என்பது இதுவரை நடக்காத ஒரு செயல். எனவேதான் இதை மிகவும் தீவிரமாக கவனிக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

புவியிலேயே குறைந்த அளவு மழைப்பொழிவு உள்ள இடம் பாலைவனம்தான். ஆண்டுக்கு 25 செமீக்கும் குறைவான அளவே மழைப்பொழிவைப் பெறுகின்றன. அதிலும் ஆப்பிரிக்க கண்டத்தின் பாலைவனங்களில் மழைப்பொழிவு இன்னும் குறைவாகவே இருக்கின்றன. பாலைவனங்கள் புவி தோன்றியபோது இல்லை. பல்வேறு காலநிலை, வானியல் மாற்றங்களுக்குப் பிறகே உருவாகியுள்ளன. அவை உருவாவதற்கான கால அளவும் பல லட்ச ஆண்டுகளுக்கும் மேல் இருக்கலாம் என நம்பப்படுகிறது. பாலைவனங்கள் இருக்கும் பகுதிகள் வெப்பமண்டலங்களாகவும் அதற்கு அருகில் குறிப்பிட்ட தொலைவில் உள்ளவை மிதவெப்ப மண்டலங்களாகவும் அறியப்படுகின்றன. காலப்போக்கில் மிதவெப்ப மண்டலங்களே காலநிலை சுழற்சியால் பாலைவனமாக உருப்பெறுகின்றன. ஆய்வாளர்கள் சொல்லியதுபோல அதற்கான கால அளவு என்பதும் அதிகம். 

இந்த ஆராய்ச்சியில் இன்னும் அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனப் பகுதியில் கோடை காலத்தில்தான் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். அதுசார்ந்த விளைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால், ஆய்வு முடிவுகளின்படி பாலைவன பரப்பளவு அதிகரித்திருப்பது நிகழ்ந்திருப்பதே அந்த காலகட்டத்தில்தான். எளிதில் நீர் கிடைக்காத வறண்டப் பாலைவனத்தில் இருக்கும் தாவரங்களும் காற்றின் ஈரப்பதத்தையே பயன்படுத்திக்கொள்கின்றன. காற்றின் ஈரப்பதமும் குறையும்போது தாவரங்களும் அழிய ஆரம்பிக்கிறது. இதுதான் பாலையாதலின் ஆரம்ப நிலை. தொடர்ச்சியாக இவை நிகழும்போது பாலைவனமாக மாறுகின்றன. இந்த ஆராய்ச்சி சஹாரா பாலைவனத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் மற்ற பாலைவனங்களின் பரப்பளவும் இதேபோல் அதிகரித்திருக்கலாம் ஆராய்ந்து பார்த்தால் தெரியும் என இன்னும் அபாயத்தின் அளவைக் கூட்டுகின்றனர் ஆய்வாளர்கள். 

சஹாரா பாலைவனம்

சஹாரா பாலைவனத்தின் பரப்பளவானது தெற்குப்பகுதியில்தான் அதிகரித்துள்ளது. இப்பகுதி சூடானுக்கும் சாட் நாட்டுக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சாஹெல் பகுதியாகும். சாஹெல் நிலப்பரப்பு, சஹாரா பாலைவனத்துக்கு அருகில் இருந்தாலும் அதன் வெப்பநிலையைவிடக் குறைவான வெப்பநிலையையே கொண்டிருக்கும். மேலும், இப்பகுதி உயிரியல் பகுப்பாய்வு( Biogeographic Zone) மண்டலமாகவும் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள உயிரினங்களுக்கும் இதனைச் சார்ந்து வாழக்கூடிய இரு நாட்டு மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பஞ்சம் ஏற்பட்டால்கூட இடம்பெயர்ந்துவிட்டு பஞ்சம் முடிந்தபின் மறுபடியும் தங்கள் நிலத்துக்கே வந்துவிடலாம். ஆனால், நிலமே பாலைவனமானால் வாழ்வதற்காக நிரந்தரமாக இடம்பெயர வேண்டும். 

ஏறக்குறைய பத்து நாடுகளுக்கு மேல் பரவியிருக்கும் சஹாரா பாலைவனத்தின் பரப்பளவு அதிகரிப்பு என்பது காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை இன்னொரு முறை உலகுக்கு எடுத்துச் சொல்லியுள்ளது. காலநிலை மாற்றத்துக்குக் குறைவான அளவு காரணிகளாக இருப்பது ஆப்பிரிக்க கண்ட நாடுகள்தான். ஆனால், அவைதான் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் சிறிய உதாரணம். இன்னும் நாம் கவனியாத பல மாற்றங்கள் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்து கொண்டிருக்கலாம். காலநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்தில்கூட வளர்ந்த நாடுகள் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் தங்களுடைய பொறுப்பை தளர்த்திக் கொண்டுள்ளது. ஆனால், பாதிப்புகள் மூன்றாம் உலக நாடுகளுக்கே அதிகம் நிகழ்கின்றன. காலநிலை மாற்றத்தால் அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் உருகும் வேகமும் அதிகரித்துள்ளது. சஹாராவும் அண்டார்டிகாவும் தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால், காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் அனைவருக்கும் தொடர்புடைய ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!