உலகின் முதல் வாட்டர் போலீஸ்..! கேப்டவுன் வறட்சியால் தென்னாப்பிரிக்க அரசு அதிரடி

தண்ணீர் போலீஸ்...

உலகின் முதல் வாட்டர் போலீஸ்..! கேப்டவுன் வறட்சியால் தென்னாப்பிரிக்க அரசு அதிரடி

காலால் மடை திறந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது, கால் கழுவக்கூட தண்ணீர் இல்லை என்ற நிலைக்கு உலகம் போய்க்கொண்டிருக்கிறது. தங்கத்தைவிட மதிப்புமிக்கதாகிவருகிறது தண்ணீர். முன் எப்போதையும்விட, மிகவும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் உலக நாடுகள் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. பூவுலகில் தண்ணீரே இல்லாத நகரம் என்ற பூஜ்ஜிய நாளை நோக்கி வேதனையுடன் நகர்கிறது தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம். இந்த நிலை மிகவும் கொடுமையானது. ஒரு தனிநபர் பயன்பாட்டுக்கு தினமும் 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே அங்கு வழங்கப்படுகிறது. நம் ஊரில், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் ஊற்றுவதைப் போல, அங்கு ரேஷன் கடைகளில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் கேப்டவுன்வாசிகள் தங்கம் போல எண்ணி எண்ணிச் செலவுசெய்கிறார்கள். 

கேப்டவுன்

Pic Courtesy : sky news

இங்கு நிலவும் வறட்சியைத் தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது தென் ஆப்பிரிக்கா அரசாங்கம். கேப்டவுன் நகரம், ஏப்ரல் 16-ம் தேதி பூஜ்ஜிய நாளை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அருகிலுள்ள கிரபவ் நகர விவசாயிகள் அதைத் தள்ளிவைத்திருக்கிறார்கள். கிரபவ் நகரில் உள்ள க்ரோன்லேண்ட் விவசாயிகள் அமைப்பின் நீரைப் பயன்படுத்துவோர் பிரிவு, கேப்டவுன் நகரத்துக்கு 10 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்துவிட்டார்கள். இதைத் தொடர்ந்து, பூஜ்ஜிய நாளை ஜூன் மாதம் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 50 லிட்டர் தண்ணீரை எப்படி சிக்கனமாகச் செலவழிப்பது என, முகநூல் மூலமாகவும் கேப்டவுன் நகரத் தண்ணீர்ப் பிரச்னைக்கு பலரும் உதவிவருகிறார்கள். 

இந்நிலையில், கேப்டவுன் நகரில் தண்ணீரைப் பாதுகாப்பதற்காகக் காவலர்களை நியமித்துள்ளார்கள். உலக அளவில் தண்ணீரைப் பாதுகாக்கக் காவலர்களை நியமிப்பது இதுவே முதல்முறை. கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவுவதால், கேப்டவுன் நகரில் தண்ணீர் தொடர்பான பல்வேறு முறைகேடுகள், குற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. இதைத் தடுப்பதற்காகவே, இந்தக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வீடுகளில் கார்களைக் கழுவுதல், தோட்டங்களுக்குப் பாசனம் செய்தல், தண்ணீரை வீணாக்குதல் போன்றவை மிகப்பெரிய குற்றச்செயல்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்படி சம்பவங்களில் ஈடுபடுவோரைத் தடுக்கவும், கைதுசெய்து தண்டனை பெற்றுத்தருவதும் இந்தக் காவலர்களின் பணி. அதேநேரத்தில், பொதுமக்கள் மத்தியிலும் தண்ணீரை சேமிக்கவேண்டிய அவசியத்தையும் இவர்கள் உணர்த்துவார்கள் எனத் தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்துள்ளது. 

கேப்டவுன்

Pic Courtesy : sky news

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பார்கள். இந்தியாவிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்கிறது. பரவலாக இருப்பதால், அதன் வீரியம் தெரியாமல் தண்ணீரை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம். ஒரு மனிதனின் சராசரி தண்ணீர்த் தேவை, நாளொன்றுக்கு 140 லிட்டர். ஆனால் இந்தியாவில் தற்போது, தனிமனிதனுக்குக் கிடைக்கும் தண்ணீரின் சராசரி 27 லிட்டர்தான். இந்த சராசரி பெரும்பான்மையானால், பூஜ்ஜிய நாள் இங்கும் நிகழலாம். எனவே, இப்போதிருந்தே தண்ணீர் சேகரிப்பில் ஈடுபட்டால்தான் எதிர்காலத்தைச் சமாளிக்க முடியும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!