வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (04/04/2018)

கடைசி தொடர்பு:12:27 (04/04/2018)

`இது ஸ்டீபனின் பரிசு!’ - ஆதரவற்றவர்களை நெகிழவைத்த குடும்பத்தினர்

ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங் நினைவாக அவரின் குடும்பத்தினர் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற மக்களுக்கு ஈஸ்டர் விருந்து கொடுத்து உபசரித்துள்ளனர்.

ஸ்டீபன் ஹாக்கிங்

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் 13-ம் தேதி லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு மக்கள் புடைசூழ செயின்ட் மேரீஸ் சர்ச்சில் நடைபெற்றது. இறுதிச்சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, ஸ்டீபன் ஹாக்கிங் நினைவாக  ஆதரவற்றவர்களுக்கு விருந்தளிக்க அவரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். அன்றே கேம்பிரிட்ஜ் ஃபுட் சைக்கிள் என்னும் தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடை கொடுத்தனர். அந்தத் தொண்டு நிறுவனம் ஸ்டீபன் சார்பாக அளிக்கப்பட்ட நன்கொடையில் ஆதரவற்றவர்களுக்கு ஈஸ்டர்  விருந்தளிக்க முடிவு செய்தது. இதனையடுத்து, கடந்த 1-ம் தேதி பிரமாண்ட ஈஸ்டர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்ற நிலையில் சாலையில் வசிப்பவர்கள், முதியவர்கள் என  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விருந்தில் கலந்துகொண்டனர். 

ஸ்டீபன் ஹாக்கிங்

விருந்தளிக்கப்பட்ட அறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  ‘இன்றைய விருந்து ஸ்டீபனின் பரிசு’ என்று ஒரு போர்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த வார்த்தைகள் விருந்தில் பங்குபெற்றவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகத் தொண்டு நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. மேலும், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்ஸ் என்னும் பெண் இதுகுறித்து ட்விட்டரில் ‘ஸ்டீபன் ஹாக்கிங் குடும்பத்தினரின் கனிவுக்கு மிகவும் நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க