வெளியிடப்பட்ட நேரம்: 09:32 (06/04/2018)

கடைசி தொடர்பு:10:48 (06/04/2018)

`8.75 கோடி பேரின் தகவல்கள் திருட்டு' - ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்

உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பயன்படுத்தி வரும் பிரபல சமூக வலைத்தளமான முகநூல் (facebook) உபயோகிப்பாளர்கள் ஐந்து கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள், `கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்னும் நிறுவனத்தால் திருடப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது.

இந்தச் செய்தி உலகம் முழுவதிலும் உள்ள சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மட்டுமல்லாது, இந்திய அரசையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியது. 

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடந்த தேர்தல்களின்போது தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்தத் தகவல் திருட்டு நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்திற்காக ஃபேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதுடன், இனி இதுபோன்ற தகவல் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.

ஆனால், தற்போது சுமார் 8 கோடியே 75 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஜூக்கர்பெர்க் தெரிவித்திருப்பது மீண்டும் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் வாஷிங்டனில் கூறுகையில், ``ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்கள் 8 கோடியே 75 லட்சம் பேரின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துடன் முறையற்ற விதத்தில் பகிரப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் அவர், ``மனிதர்கள் தவறு செய்து விட்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். எங்கள் மீது சமூக வலைத்தளப் பயனாளிகள் எதற்காகப் பொறுப்பு சுமத்த வேண்டும் என்றால், இந்த தவறுகளிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்வதற்குத்தான்’’ என்றார்.

இந்தியாவில் ஏறக்குறைய 20 கோடிப் பேர் ஃபேஸ்புக் வலைத்தளத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 5 லட்சத்து 62 ஆயிரம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க