வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (06/04/2018)

கடைசி தொடர்பு:16:25 (06/04/2018)

மெனோபாஸ் குறித்த உரையாடலை நடத்தும் கஃபே! #MenopauseCafe

மெனோபாஸ் குறித்த உரையாடலை நடத்தும் கஃபே! #MenopauseCafe

பெண்கள், உடல் சார்ந்த விஷயங்களைப்  பொதுவெளியில் பேசுவது அசிங்கம், அவமானம், மகா தவறு என்கிற மனநிலையோடு தங்கள் வாழ்க்கையைக்  கழித்தார்கள்,  முந்தைய தலைமுறையினர். பீரியட்ஸ் என்பதையே,  'தலைக்குக் குளிச்சுட்டியா', 'மூணு நாளா', 'தீட்டு' என்கிற பாஷையில் ரகசியமாகக்  கேட்கப் பழகியிருந்தார்கள்.

Menopause cafe

ஆனால், காலங்கள் மாறமாற ரகசிய வார்த்தைகள் உடைபட்டு, பொதுவெளியில் 'பீரியட்ஸ்' 'மெனோபாஸ்' என்பதை சத்தமாக, எந்தவிதத் தயக்கங்களும் இல்லாமல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள், இந்தத் தலைமுறையினர். மெனோபாஸ்கூட தற்போதுதான் வெளிப்படையாகப்  பேசப்பட்டுவருகிறது. ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் கடந்து வந்தே ஆகவேண்டிய இக்கட்டத்தில், தன்னை அறியாமல் நடக்கும் மனக்குழப்பங்கள், உடல் மாற்றங்களைக்கூட  யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத நிலையே இருந்துவந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க உள்ள பெண்கள், தங்கள் உடல் சார்ந்த விஷயத்தில் மௌனம் சாதித்து வந்தார்கள். அதை உடைக்க நினைத்த பிரிட்டனைச் சேர்ந்த ரேச்சல் தொடங்கியதுதான் மெனோபாஸ் கஃபே( Menopause Cafe).

அதென்ன மெனோபாஸ் கஃபே? அங்கு என்ன செய்வார்கள் என்பவர்களுக்கு, காபி அருந்திக்கொண்டே  தங்கள் உடலில் நடக்கும் மெனோபாஸ் மாற்றங்கள், குழப்பங்கள்குறித்து பேசித் தெளிவடைவார்கள். 

Menopause cafe

மெனோபாஸ் கஃபே நிகழ்ச்சி முதலில் தொடங்கப்பட்டது, ரேச்சலின் வீட்டில்தான். கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஸ்காட்லாந்திலிருக்கும் தன் வீட்டில், மெனோபாஸ்குறித்துப் பேசும்  சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த ரேச்சலுடன், அவருடைய தோழிகள் கெயில் ஜாக், லோர்னா ஃபோர்தெரிங்கம் ஆகிய இருவர் மட்டுமே வந்திருந்தார்கள். மூன்று பேருடன் இந்த நிகழ்வு முடிந்துவிடுமோ என்று நினைத்து, தன் தோழிகளுடன் ரேச்சல் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், கூட்டம் முடிந்து வெளியில் செல்லும்போது எண்ணிக்கை முப்பதாகியிருந்தது. தற்போது, பிரிட்டனில் மிகமுக்கியமான 14 இடங்களில், மெனோபாஸ் கஃபே சந்திப்புகள் நடந்திருக்கிறது.

”என்னால் எளிதாக மெனோபாஸை கடக்க முடியும் என்று நான் நினைத்திருந்தவரை, அதுபற்றி யாருடனும் பேசவோ, பகிர்ந்து கொள்ளவோ, உதவி  கேட்கவோ இல்லை. ஆனால், மெனோபாஸ் பிரச்னை என் குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவேயில்லை. ஆம், பெண்கள் அனைவருக்கும் உடல்வாகு ஒன்றுபோல இருப்பதில்லை. அதே போலத்தான், மெனோபாஸ் பிரச்னையும். ஒவ்வொருவர் கடக்கும் விதமும் மாறுபட்டதாக இருக்கும். இத்தனை நாள் இதுகுறித்து நான் பேசாமல் இருந்ததற்கான காரணம், என் கூச்சம் மட்டுமே என்பதை உணர்ந்தேன் '' என்றிருக்கிறார்,  47 வயதான ஷாரன் சிம். மெனோபாஸ் கஃபே சந்திப்பில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் ஷாரன்.  

Rachel Weiss - Menopause cafe founder''எல்லாப்  பெண்களும் மெனோபாஸை நிச்சயம் கடந்தே ஆகவேண்டும் . அப்படிக்  கடக்கும்போது அதுபற்றிய புரிதலும் , தெளிவும் தேவை என்பதற்காகவே இந்த சந்திப்புகள் . பலருக்கும் போதுமான தெளிவு இல்லாமலேயே மெனோபாஸை கடக்கிறார்கள் '' என்கிற ரேச்சலுக்கு   51 வயதாகிறது . அவர் மெனோபாஸை கடக்கவில்லை . பிரிட்டனைப் பொறுத்தவரை, மெனோபாஸ் வயதென்பது   45லிருந்து   55 வரை என்று நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள் . இந்தக்  குழுவில் பங்கெடுத்துக்கொள்ள ஆண்களும் வருகிறார்களாம்,  தங்கள் இணையைப் பற்றி புரிந்துகொள்ள .

``ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய், கர்ப்பகாலம், மெனோபாஸ் என்கிற மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். இதில், கர்ப்பகாலம் என்பது அவரவர் விருப்பம். ஆனால் மெனோபாஸ் என்பது, நம் உடலின் இயக்கம். ஒருவராலும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. மெனோபாஸுக்குப் பிறகான என் அழகு எப்படியிருக்கும்? அதன் பிறகு என் உடல் எப்படியிருக்கும்? என் மனநிலை... என்று பெண்கள் அதிகமான குழப்பத்துக்கு ஆளாவார்கள். அந்தக் குழப்பங்களையெல்லாம் நீக்கி, அவர்களுக்கு தைரியத்தைக் கொடுக்கவே இந்தக் குழு'' என்றிருக்கும் ரேச்சலுக்கு தற்போது பல ஊர்கள் மற்றும் நாடுகளிலிருந்து மெனோபாஸ் கஃபே சந்திப்பு நடத்த அழைப்பு வருகிறதாம்.


டிரெண்டிங் @ விகடன்