தீவிரவாதிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க புதிய சட்டத் திருத்தம்! பாகிஸ்தான் திட்டம்

தீவிரவாதிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க புதிய சட்டத் திருத்தம்! பாகிஸ்தான் திட்டம்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஹபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத் உத் தவா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவர பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஹபீஸ் சையது

தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தான், தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தால் தேடப்படு நபராக அறிவிக்கப்பட்டவர்கள் மற்றும் ஜமாத் உத் தவா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு நிரந்தரமாகத் தடை விதிக்கும் வகையில், அந்நாட்டின் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் -1997-ல் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனெவே, அந்நாட்டு குடியரசுத் தலைவர் மம்னூன் ஹூசைன் பிறப்பித்த அவசரச் சட்டத்தின் படி அந்த இயக்கங்கள் தடை செய்யப்பட்டவைகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அந்த அவசரச் சட்டம் 120 நாள்களில் காலாவதியாக உள்ள நிலையில், நாளை தொடங்க இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தீவிரவாத இயக்கங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ய ஷாகித்கான் அப்பாஸி தலைமையிலான பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டால், ஜமாத் உத் தவா உள்ளிட்ட அமைப்புகள் பாகிஸ்தானில் இயங்க நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும். இதன்மூலம், அந்த தீவிரவாத இயக்கங்கள் நிதி உதவி பெறுவதைத் தடுக்க முடியும் என்று பாகிஸ்தான் உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!