சிரியா அதிபருக்கு எச்சரிக்கை விடும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

சிரியாவில் நடைபெறும் ரசாயன தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நடைபெற்று வரும் ஆட்சியை எதிர்க்கும் வகையில் அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முறியடிக்க சிரியா அரசு, கிளர்ச்சியாளர்கள்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் இரான் ஆகிய நாடுகள் சிரியாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கிழக்கு கௌட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா அரசு ரஷ்யாவுடன் இணைந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கிளர்ச்சியாளர்கள் உட்பட அங்குள்ள அப்பாவி மக்களும் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு உலகநாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. சிரியாவில் கிளர்ச்சியாளர்களை முறியடிக்க ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் இதனால் பல நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இதற்கு சிரியாவும் ரஷ்யாவும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிரியா பயன்படுத்தும் ரசாயனக் குண்டுகள் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “அறிவில்லாமல் சிரியா அரசு நடத்தும் ரசாயனக் குண்டு தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் எனப் பலர் பலியாகியுள்ளனர். சிரியாவில்நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகத்தினர் பார்க்க முடியாத வகையில் அங்கு சிரிய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பஷர் அல் ஆசாத் என்ற மிருகத்தை ஆதரிக்கும் ரஷ்யாவும் அதன் அதிபரும் இரானும் மட்டுமே இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் இதற்கு மிகப்பெரும் விலையை அளிக்க வேண்டி வரும்” எனப் பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!