பாதுகாப்பற்ற கார் பந்தயம்... ஃபெராரி நிறுவனத்துக்கு ரூ.40 லட்சம் அபராதம்!

ரேஸ் நேரத்தைவிட பாதுகாப்பு மிகவும் முக்கியம். மெக்கானிக்குக்குப் பாதிப்பு ஏற்பட்டதால் இதை பொறுப்பற்ற சம்பவம் என்று கூறி ஃபார்முலா ஒன் ரேஸின் கண்காணிப்பு அமைப்பான FIA, ஃபெராரி நிறுவனத்துக்கு 50,000 யூரோ அபராதம் விதித்துள்ளது.

பாதுகாப்பற்ற கார் பந்தயம்... ஃபெராரி நிறுவனத்துக்கு ரூ.40 லட்சம் அபராதம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் பந்தயத்தில் மெக்கானிக்குக்கு ஏற்பட்ட விபத்தால் ஃபெராரி நிறுவனத்துக்கு 50,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஃபெராரி

 உலகத்திலேயே அதிவேக கார் பந்தயமாக இருப்பது ஃபார்முலா ஒன்தான். இங்கு வேகத்தை மட்டுமே மனதில்வைத்து அனைத்து கார்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தயத்தில் ஒவ்வொரு நொடியும் மிகமுக்கியம். 300 கி.மீ-க்கு மேல் பறக்கும் கார்களுக்கு டயர்கள் வேகமாக தேய்ந்துவிடும். அதனால், ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களில் டயர்களை மாற்றுவதற்காக டிரைவர்கள் காரை பிட் ஸ்டாப்பில் நிறுவத்துவது சகஜம். இப்படி கார் நிற்கும்போது நினைத்துக்கூட பார்க்காத அளவு 4 டயர்களும் இரண்டு நொடிகளில் மாற்றப்படும்.

இந்த ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் கார் பந்தயம் தொடங்கிவிட்டது. கடந்த 8-ம் தேதி பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற 57 லேப் பந்தயத்தில் 35-வது லேப்பில் ஃபெராரி நிறுவனத்தின் டிரைவர் கிமி ராய்கோனன் பின்பக்க இடதுடயர் சரியாக இல்லை என்ற காரணத்தினால் டயர்களை மாற்றுவதற்காக பிட் ஸ்டாப்புக்கு வந்தார். அப்போது, மூன்று டயர்கள் மட்டுமே மாற்றப்பட்ட நிலையில், பிட் ஸ்டாப்பில் இருந்து வெளியேறும் குறியீடாக பச்சை விளக்கு எரிந்ததால், பின் பக்கம் டயரை கழட்டிக்கொண்டிருந்த மெக்கானிக்குகளை கவனிக்காமல் ராய்கோனன் வேகமாக பிட் ஸ்டாப்பில் இருந்து புறப்பட்டுவிட்டார். அப்போது, காரின் பக்கவாட்டுப் பகுதியில் புதிய டயரை போடுவதற்காக நின்றுகொண்டிருந்த மெக்கானிக் ஃபிரான்செஸ்கோ சிகாரினியின் கால்களில் காரின் பின்டயர் வேகமாக மோதியதில் இடது கால் உடைந்து கீழே விழுந்து, வலியால் துடிக்க ஆரம்பித்துவிட்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கால்களில் அறுவை சிகிச்சை முடிந்தது. இந்தப் பிரச்னையால் கிமி ராய்க்கோனான், ரேஸை முடிக்கமுடியாமல் போய்விட்டது. 

ஃபெராரி ஃபார்முலா ஒன்

பச்சை விளக்கு காண்பிக்கப்பட்டதாலேயே கிமி ராய்கோனன் பிட்ஸ்டாப்பில் இருந்து புறப்பட்டுள்ளார். நான்கு டயர்களையும் மாற்றிய பிறகு தானாகவே பச்சை விளக்கு எரியும்படி பிட்ஸ்டாப் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆட்டோமோடிக் சிஸ்டம் என்பதால்,  எப்படித் தவறு நடைபெற்றது என விசாரணை நடத்திவருகிறார்கள். ஃபார்முலா ஒன் பந்தய விதிமுறைப்படி இரண்டு விதமான டயர்களோடு காரை ஓட்டக்கூடாது. மெக்கானிக் அடிபட்டதால் டயர்களை மாற்றவும் முடியாமல் பஹ்ரைன் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டார் ராய்கோனன்.

கிமி ராய்க்கோனன் மீது தவறு இல்லாததால் அவருக்கு எந்த விதிமீறல் தண்டனையும் விதிக்கப்படவில்லை. மோட்டார் வாகனப் பந்தயங்களில் எப்போதுமே பாதுகாப்புக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். ரேஸ் நேரத்தைவிட பாதுகாப்பு மிகவும் முக்கியம். மெக்கானிக்குக்குப் பாதிப்பு ஏற்பட்டதால் இதை பொறுப்பற்ற சம்பவம் என்று கூறி ஃபார்முலா ஒன் ரேஸின் கண்காணிப்பு அமைப்பான FIA, ஃபெராரி நிறுவனத்துக்கு 50,000 யூரோ அபராதம் விதித்துள்ளது. இந்திய மதிப்பின்படி இது 40 லட்சம் ரூபாய். பிராக்டிஸ் சுற்றின்போதே கிமி ராய்க்கோனனின் காரின் ஒரு வீல் லூசாக இருந்ததால், பாதுகாப்பு குறைபாடு என ஃபெராரி நிறுவனத்துக்கு 5000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு அபராதம், மெக்கானிக் காயம், கிமியின் ரேஸ் பாயின்ட் இல்லை. ஃபெராரிக்கு இந்த ரேஸ் சோதனையில் முடிந்துவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!