எழுந்து நின்று பாடாததால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி

பாகிஸ்தானில், எழுந்து நின்று பாடாததால் கர்ப்பிணிப் பாடகி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள கங்கா என்ற கிராமத்தில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில், சமீனா சமூன் என்ற 24 வயது பாடகி ஒருவர் மேடையில் பாடிக்கொண்டிருந்தார். அவர், கர்ப்பிணிப் பெண் என்பதால் மேடையில் அமர்ந்தபடி பாடல்களைப் பாடினார்.

அப்போது அங்கு வந்த தாரிக் ஜடோய் என்ற நபர், சமீனாவை எழுந்துநின்று பாடும்படி கூறினார். ஆனால், பாடகி கர்ப்பமாக இருந்ததால் எழுந்து நின்று பாட சிரமமாக இருக்கிறது என்று மறுத்துள்ளார். தொடர்ந்து, பாடகியை எழுந்து நிற்கும்படி தாரிக் வற்புறுத்தியுள்ளார். இறுதியில், சமீனா எழுந்து நின்றார். தான் சொன்னதை சமீனா செய்யவில்லை என ஆத்திரமடைந்த தாரீக், பாடகி எழுந்து நின்றதைக் கவனிக்காமல்,  தனது கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.

அதன் பிறகு, உடனடியாக சமீனா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.ஆனால், அவரை பரிசோதித்த மருதுவர்கள் சமீனா இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து சமீனாவின் கணவர் அப்பகுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தாரீக் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!