சிக்னலில் பலூன் விற்கும் சிறுவன் உறங்குவது எங்கே? #InternationalDayForStreetChildren

சிக்னலில் பலூன் விற்கும் சிறுவன் உறங்குவது எங்கே? #InternationalDayForStreetChildren

InternationalDayForStreetChildren

அந்தப் பேருந்தில் தினசரி அலுவல் காரணமாக அன்றும் சென்றுகொண்டிருந்தேன். அந்தச் சிறுவர்கள் இரண்டு கைகளிலும் பல வகையான புத்தகங்களை ஏந்தியபடி, விற்கும் முனைப்பில் அவற்றைப் பற்றிய சிறப்புகளைக் கூறிக்கொண்டிருந்தனர். பலரும் மொபைலிலிருந்து கண்களைச் சிறிதும் அகற்றாமல் கைகளை ஆட்டி வேண்டாம் என்கிறார்கள். அந்தச் சிறுவர்களும் பழகிப்போன அனிச்சையால் கடந்து, அடுத்தவரிடம் செல்கிறார்கள். அவர்களுக்கு 10 அல்லது 11 வயதுதான் இருக்கும். அப்போது, மொபைலில் ஒரு நோட்டிஃபிகேஷன்... இன்று (ஏப்ரல் 12) `சர்வதேசச் சாலையோரச் சிறார் தினம்' (International Day For Street Children) என்று சொல்கிறது.

தினமும் இதுபோன்ற பல சிறுவர்களைச் சாலையோரம் காண்கிறோம். ஒருநாளேனும் அவர்கள் வாழ்க்கை எப்படியானது என யோசித்திருக்கிறோமா? சிக்னலில் பலூன் விற்கும் சிறுவன் உறங்குவது எங்கே என்று கவலைப்படுவர்கள் எத்தனை பேர்? மூன்று வேளை உணவு, உடுத்தத் துணிமணி எல்லாம் நமக்கு நம் பெற்றோர்களால் கொடுக்கப்படுகிறது, அவர்களுக்கு? சாலையோரக் சிறுவர்களுக்கும் உரிமையைப் பெற்றுத்தர உருவாக்கப்பட்டதே, `சர்வதேசச் சாலையோரச் சிறார் தினம்'. உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி தவிப்பவர்களுக்கு உரிமை ஏது? சர்வதேச அளவில் குழந்தைகள் உரிமைக்காகப் பல திட்டங்கள், சட்டங்கள் உள்ளன. பெரும்பாலான அரசுகள், இந்தச் சாலையோர சிறுவர்களைக் கணக்கில் கொள்வதில்லை.

காலையில் வீட்டிலிருந்து கிளம்பி மாலையில் வீடு திரும்புவதற்குள் மணிக்கு ஒருமுறை தகவல் தெரிவிக்கப்படும் பாதுகாப்பான சூழ்நிலையில் வளரும் குழந்தைகளே, திடீரென காணாமல்போகிறார்கள். கேட்பாரற்று தெருவில் சுற்றித் திரியும் இவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தினசரி வாழ்க்கையே இவர்களுக்குப் போராட்டமானது. பசி, பட்டினி ஒரு பக்கம், எப்போது யாரால் ஆபத்து வரும் என்று தெரியாத சூழ்நிலை இன்னொரு பக்கம்.

உலகம் முழுக்க 100 மில்லியன் சாலையோரக் குழந்தைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறது யுனிசெஃப். இதில், இந்தியாவில் மட்டும் 18 மில்லியன் சாலையோரக் குழந்தைகளாம். இவர்கள் அனைவரும் 5 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். யார் இந்தக் குழந்தைகள்? எப்படி உருவாகிறார்கள்? ஏழ்மை, வன்முறை, இயற்கைப் பேரழிவு, போர் மற்றும் குடும்பத்துக்குள் பிரிவு என ஏதேனும் ஒன்றினால் ஒரு குழந்தை இறையாக்கப்பட்டால், அது சாலையோரக் குழந்தையாக மாறுகிறது. இவர்களைப் பாதுகாக்க யாரும் கிடையாது. இவர்கள் வாழ்வதற்கான வாழ்வாதாரம் கிடையாது. பிச்சை எடுத்தும், ஒருவரிடம் அடிமைப்பட்டும் தினம் தினம் உயிர் மட்டுமே வாழ்வார்கள்.

2011-ம் ஆண்டில், இந்தியாவில் பலதரப்பட்ட கொடுமைகளுக்கும் பாதிப்புகளுக்கும் ஆளான குழந்தைகளைப் பற்றி தேசியக் குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டது. அதன் ஒவ்வொரு வரியும் அதிர்ச்சியளிக்கிறது. வருடம்தோறும் 5500 குழந்தைகள், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகிறார்கள். 1500 குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். இதில், கொடுமையான விஷயம், இந்தப் பட்டியலில் சாலையோரச் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவுசெய்யப்படவில்லை. 10 சதவிகிதம்கூட அவர்களுக்கு எதிரான வன்முறைகள் பதிவுசெய்யப்படுவதில்லை. அவர்களுக்காகக் காவல் நிலையம் செல்லவோ, நீதிமன்றத்தை நாடவோ யார் இருக்கிறார்கள்?

ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சத்தின் எண்ணிக்கையில் சாலையோரக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், அரசாங்கப் பதிவேட்டில் இருப்பதோ ஆயிரத்துக்கும் குறைவான பதிவுகளே. 1993-ம் ஆண்டு வரை சாலையோரக் குழந்தைகள் என்ற வார்த்தையே அரசாங்கப் பதிவேட்டில் இல்லை. பல தன்னார்வ நிறுவனங்களின் தொடர் முயற்சியால், அவர்களுக்கான தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இன்று வரை அந்தச் சட்டங்களால் சாலையோரக் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க முடியவில்லை.

இன்று சர்வதேசச் சாலையோரச் சிறுவர்கள் தினத்தை (International Day For Street Children) அனுசரிக்கிறோம். தினங்கள் பற்றி அன்று ஒருநாள் மட்டும் பேசுவது எந்த வகையிலும் பலன் தரப்போவதில்லை. மாற்றம் ஒவ்வொருவர் மனதிலிருந்தும் வரவேண்டும். சாலையோரச் சிறுவர்களுக்குத் தேடிச் சென்று உதவி செய்யாவிட்டாலும், உதாசீனப்படுத்தாமல் இருக்கலாம். அவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க, திட்டங்களைச் சரியாக முன்னெடுக்க வேண்டும். ஏனெனில், தங்களுக்கு என்ன நிகழ்கின்றது என்றே தெரியாமலேயே அவர்கள் தினம் தினம் வதைபடுகிறார்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரத்திலும் பல குழந்தைகள் வன்முறையைச் சந்தித்துக்கொண்டிருக்கலாம். இனியும் இந்த அவலம் தொடரக் கூடாது. அதற்கான பங்களிப்பை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். இது, மனிதாபிமானமோ சேவையோ அல்ல; ஒவ்வொருவரின் கடமை.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!