வெளியிடப்பட்ட நேரம்: 06:45 (14/04/2018)

கடைசி தொடர்பு:10:36 (14/04/2018)

ட்ரம்ப்புக்கு கிடைக்காத கவுரவத்தை இந்தியப் பெண்ணுக்கு அளித்த இங்கிலாந்து இளவரசர்..! 

இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணத்தில் பங்கேற்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் சமையல் கலைஞருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லி

விரைவில் இங்கிலாந்து அரண்மனையில் ராயல் வெட்டிங் (Royal wedding) நடைபெறவுள்ளது. ஆம், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும் இளவரசர் வில்லியமின் தம்பியுமான இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க டி.வி சீரியல் நடிகையான மேகன் மார்க்லிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்தத் திருமணத்துக்கு யார் யாரை அழைக்க வேண்டும் என்பதற்கான பணிகள் முடிந்துவிட்டன. அரசியல்வாதிகளின் அழைப்புகளைப் பொறுத்தவரை, யாரை அழைக்க வேண்டும் என்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு இணைந்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் கூறுகின்றன. 

அதன்படி, மணமக்களுக்கு நேரடித் தொடர்பில் உள்ள அரசியல் தலைவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்ளப் போகிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் அழைப்பு உள்ளதாம். ட்ரம்ப்புக்கு, மணமகன்-மணமகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாததால், அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதேநேரம் ஹாரிக்கும் ஒபாமாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால், ட்ரம்ப்பை அழைக்காமல் ஒபாமாவை திருமணத்துக்கு அழைப்பது அரசாங்க ரீதியான உறவுமுறைகளைப் பாதிக்கும் என்பதால், இருவருக்குமே அழைப்புகள் விடுக்கப்படவில்லை. 

ரோஸி கின்டாய்

இந்நிலையில், ட்ரம்ப், ஒபாமாவுக்கு கிடைக்காத வாய்ப்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் சமையல் கலைஞர் ரோஸி கின்டாய்க்கு கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் பெர்மிங்காம் பகுதியில்  `மிஸ் மேகரூன்’ என்ற பெயரில் பிஸ்கெட் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்த ரோஸி. மணமக்களான ஹாரி - மார்க்லி ஒருமுறை இங்கு வந்தபோது மேகரூனை ருசி பார்த்துள்ளனர். அது பிடித்துப்போகவே, ரோஸியை தற்போது திருமணத்துக்கு அழைத்துள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு பொதுமக்கள் 1200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க