வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள்... புவி வெப்பமயமாதலின் இன்னொரு பிரச்னை! | Global warming will be the reason for eruption of volcanoes in future

வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (16/04/2018)

கடைசி தொடர்பு:08:50 (17/04/2018)

வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள்... புவி வெப்பமயமாதலின் இன்னொரு பிரச்னை!

இந்தியாவில்தான் எரிமலையே இல்லையே என்ற இந்த விஷயத்தை அசால்ட்டாக எடுத்துக்கொள்வோமேயானால் அவர்கள் சொல்லும் விஷயங்கள் இன்னும் பீதியைக் கிளப்பிவிடுகின்றன. 

வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள்... புவி வெப்பமயமாதலின் இன்னொரு பிரச்னை!

அது 2017-ம் ஆண்டின் செம்ப்டம்பர் மாதத்தின் ஒரு நாள். இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை வெற்றிடமாக்கிக்கொண்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் இடம்பெயர்வுக்குக் காரணமாக இருந்தது அகுங் எரிமலை. அந்த எரிமலை வெடித்து எரிமலைக்குழம்பைக் கொப்பளிப்பதும் அதை அந்த மக்கள் சமாளிப்பதும் பாலித்தீவு மக்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயம்தான். ஆனால், 2017-ல் நடந்த எரிமலை வெடிப்பால் அந்த மக்களின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. அகுங் எரிமலையில் இருந்து வெளிவந்த எரிமலைக்குழம்பு மட்டுமில்லாமல் அதன் சாம்பலும் சுற்றுச்சூழலை வெகுவாக பாதித்தது. ஏரிகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளிலும் மக்களின் வாழ்விடங்களிலும் எரிமலைச் சாம்பலின் ஆக்கிரமிப்பு அதிகமாகியது. எரிமலைகள் வெடிப்பின்போது எரிமலைக்குழம்பு வெளியாகுவதும் எரிமலைச் சாம்பல் சுற்றுச்சூழலைப் பாதிப்பதும் எப்போதும் நிகழ்வதுதான். பல்வேறு அறிவியல் ஆய்வாளர்களும் இதனைக் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் கடந்த வாரம் வெளியாகியுள்ள ஆய்வு இதனை அப்படியே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. 

எரிமலை வெடிப்பினால் ஏற்படும் பாதிப்புகள் சுற்றுச்சூழலைப் பாதிப்பதாக கூறப்படுவதைத் தாண்டி காலநிலை மாற்றம் எரிமலை வெடிப்பை அதிகப்படுத்துகிறது என்கின்றனர் புவியியல் ஆய்வாளர்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இன்றைய புவி வெப்பமயமாதல் என்பது நாளைய எரிமலை வெடிப்புக்கான ஆயத்தம் என்கின்றனர். ஆய்வாளர்கள் சொல்லும் இந்த எரிமலை வெடிப்புகள் பூமி முழுவதும் நிகழக்கூடிய ஒன்றாக மாறக்கூடும் என்று எச்சரிக்கின்றனர். இந்தியாவில்தான் எரிமலையே இல்லையே என்ற இந்த விஷயத்தை அசால்ட்டாக எடுத்துக்கொள்வோமேயானால் அவர்கள் சொல்லும் விஷயங்கள் இன்னும் பீதியைக் கிளப்பிவிடுகின்றன. 

எரிமலைகள்

புவி வெப்பமயமாதலானது கடல்மட்ட உயர்வுக்கும், சில பகுதிகளில் மழையின் பொய்ப்புக்கும், சில பகுதிகளில் மழையின் அளவு அதிகரிப்புக்கும் பருவகாலங்களின் மாறுபாடு என பல செயல்பாடுகளின் வழியே காலநிலை மாற்றத்தினுடன் தொடர்புடையதாகவும் பெரும் காரணமாகவும் இருக்கிறது. அதேபோன்றுதான் இந்த எரிமலை வெடிப்பை ஏற்படுத்தும் நிகழ்விலும். புவிவெப்பமயமாதலால் அன்டார்டிகாவின் பல்வேறு பனிப்பாறைகளும் பனி படர்ந்த கடல்பகுதிகளும் உருகி கடல் மட்டமும் உயர்கின்றன. அதுபோன்றுதான் அன்டார்டிகாவைத் தவிர்த்து மற்ற கண்டங்களிலும் பனி மூடிய மலைகளும் பாறைகளும் காணப்படுகின்றன. புவி வெப்பமயமாதலால் இத்தகைய மலைகளின் மேற்பரப்பில் இருக்கும் பனிப்பரப்புகளும் உருகத் தொடங்கியுள்ளன. இதனால் பல நிலச்சரிவுகளும் நிகழ்கின்றன. 

இந்த ஆய்வை மேற்கொண்ட க்ளெர்மோன் அவுவர்ஜி பல்கலைக்கழகத்தைச் (University of Clermont Auvergne) சேர்ந்த ஆய்வாளர் ஜியோச்சினோ ராபர்ட் மற்றும் குழுவினர் கனடாவை ஆய்வுக்களமாக எடுத்துள்ளனர். கனடாவில் வெடிக்கும் எரிமலைகள் பெரிதாக இல்லை. ஆனால், உறங்கிக்கொண்டிருக்கும் எரிமலைகள் நிறையவே இருக்கின்றன. 2010-ம் ஆண்டு கோடையில் கனடாவில் ஏற்பட்ட நிலச்சரிவானது இதுபோன்ற ஒரு மலையில்தான் நிகழ்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2016-ல் எரிமலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சூடான வாயுக்கள் பனிப்பொழிவை உருக வைத்துள்ளன. இந்த நிகழ்வானது அந்த மலையின் சமநிலையை நிலைகுலைய வைத்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழத்தொடங்குவதால் ஆரம்பத்தில் கூறியதுபோல எரிமலை வெடிப்புகள் சாத்தியம்தான். 

ஆய்வாளர்கள் கூறும் இந்தப் பனிப்போர்த்திய மலைகள் எரிமலைகளாக இருக்கும்பட்சத்தில் பிரச்னையின் தீவிரம் இன்னும் அதிகமாகிவிடும். எரிமலையானது அழுத்தப்பட்ட ஒரு அமைப்பு போன்று இறுக்கமாக இருக்கக்கூடிய ஒன்று. அந்த அழுத்தம் விடுவிக்கப்பட்டால் எரிமலையின் சீற்றம் ஆரம்பித்துவிடும். பனிப்போர்த்திய மேற்பரப்பானது இந்த அழுத்தப்பட்ட அமைப்பின் கவசமாக செயல்படுகிறது. இந்த பனிப்பரப்பு உருகும்போது விளைவுகள் ஆரம்பிக்கிறது. நல்லவேளையாக இந்த நிலை அன்டார்டிகா, ஐஸ்லாந்து போன்ற பனிப்பிரதேசங்களில் இவ்வளவு தீவிரமாக இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால், உறுதியாகக் கூறமுடியாது என்றும் கூறுகின்றனர். 

மேலும், இந்த நிலச்சரிவுகள் எரிமலையின் மாக்மா இடங்களை நிலைகுலையச் செய்யவும் எரிமலை வெடிப்பைத் தூண்டிவிடக் கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. முன்னே சொன்னதுபோல பனிப்பரப்புகள் உருகுவதும் நிலச்சரிவுகள் தொடர்ந்து நிகழ்வதுமாக இருப்பதால், நிலச்சரிவுகளுக்குப் புவி வெப்பமயமாதல் முக்கியமான காரணமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் நிலச்சரிவுகள் என்பது உலக அளவில் மிக முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. நிலச்சரிவுகளுக்குக் காலநிலை மாற்றத்தால் விளைந்த புயலும், மழையும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஆனால், இவை எரிமலை வெடிப்புக்குக் காரணமாக இருக்குமா என்பதும் சந்தேகம்தான் என வேறு சில ஆய்வாளர்கள் தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர். 

எரிமலை

காலநிலை மாற்றத்தால் எரிமலை வெடிப்பு தொடர்ந்து நிகழ வாய்ப்பிருக்கிறதோ இல்லையோ, காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் பூமியில் பல்வேறு இயற்கை பேரழிவுகளை நம் கண்முன்னே நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. அப்படியிருக்கும்போது இந்த ஆய்வாளர்கள் கூறுவதுபோல எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்தாலும் ஆச்சர்யமில்லை. பனிப்போர்த்திய பாறைகளின் மேற்பரப்பு உருகுவது என்பது இயல்புதான். ஆனால், மனிதனால் ஏற்பட்ட செயற்கையான காலநிலைமாற்றம் என்பது இதை மிகவும் தீவிரமாக்கியுள்ளது. மனிதனின் செயல்பாடுகளால் ஏற்பட்ட இந்தச் செயற்கையான காலநிலை மாற்றம் இன்னும் அதீத விளைவுகளைத் தர காத்திருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close