'இனி, அணுஆயுத சோதனை கிடையாது' - வட கொரியா அதிரடி முடிவு | North Korea says it has suspended nuclear and long-range missile tests, plans to close nuclear test site

வெளியிடப்பட்ட நேரம்: 09:16 (21/04/2018)

கடைசி தொடர்பு:09:28 (21/04/2018)

'இனி, அணுஆயுத சோதனை கிடையாது' - வட கொரியா அதிரடி முடிவு

'இனி, அணுஆயுத சோதனை நடத்தப்போவதில்லை' என வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

வட கொரியா

நீண்ட நாள்களாக அணுஆயுத சோதனையின்மூலம் வட கொரியா தனது அண்டை நாடான ஜப்பான் மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்திவந்தது.  சோதனையை நிறுத்துமாறு ஐ.நா நாடுகளும், அமெரிக்காவும் பல முறை தெரிவித்தும் வட கொரியா அதை ஏற்காமல், எதிர்ப்பை மீறி, தொடர்ந்து  சோதனை நடத்திவந்தது. இது, கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, வட கொரியாவில் தற்போது அமைதியான சூழல் உருவாகியுள்ளது. இன்னும் சில வாரங்களில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் நேரில் சந்திக்க உள்ளனர். இந்நிலையில், வடகொரியா இனி அணுஆயுத சோதனை நடத்தப்போவதில்லை என அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாடு வெளியிட்டுள்ள தகவலில், ஏப்ரல் 21-ம் தேதி முதல் அணுஆயுத சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனை நிறுத்தப்படும். கொரிய தீபகற்பத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை மையமாகவைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் இந்த முடிவுக்கு, அதிபர் ட்ரம்ப் வரவேற்பு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில்,          “வட கொரியாவின் இந்த முடிவு, அந்நாட்டுக்கும் ஒட்டு மொத்த உலகத்துக்கும் ஓர் நற்செய்தி. இது பெரும் முன்னேற்றம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்ற நாடுகளும் வட கொரியாவின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.