வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (24/04/2018)

கடைசி தொடர்பு:19:00 (24/04/2018)

பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜனுக்கு வாய்ப்பு?

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், பேங்க ஆஃப் இங்கிலாந்தின் கவர்னராகத் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராக இருந்த 55 வயதான தமிழகத்தைச் சேர்ந்த ரகுராம் ராஜன். இவர் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் அடுத்த கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், பல்வேறு போட்டியாளர்களுக்கு மத்தியில் இவர் பெயரே முதன்மையாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் கவர்னராக இருப்பவர் கனடாவைச் சேர்ந்த மார்க் கார்னே. கடந்த 300 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து வங்கியின் கவர்னராகப் பொறுப்பேற்றார் என்ற பெருமை இவரையே சேரும். இவரின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் அடுத்த கவர்னரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அந்நாட்டு அரசு மிகவும் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. 

ரகுராம் ராஜன்மீது இங்கிலாந்து அரசும் அந்நாட்டு வங்கியும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளது. இவர் தற்போது சிகாகோ, பல்கலைக்கழகப் பிசினஸ் ஸ்கூலில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது, டாலருக்கு நிகரான இந்திய மதிப்பை அதிகப்படுத்துதல், பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டை அதிகப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார். அதில் வெற்றியையும் பெற்றுள்ளார். மேலும், பொருளாதார சிக்கல்களை முன் கூட்டியே கணிக்கக்கூடிய வல்லமை பெற்றவர் இவர் எனப் பலராலும் பாராட்டப்பட்டவர்.