வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (25/04/2018)

கடைசி தொடர்பு:13:28 (25/04/2018)

ஹெச்-4 விசாவுக்கு முடிவுகட்டும் ட்ரம்ப்... வேலையை இழக்கும் இந்தியர்கள்!

அமெரிக்காவில் ஹெச்-1 பி விசா பெற்ற ஆணோ, பெண்ணோ தங்கள் கணவர் அல்லது மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்து வர அனுமதிக்கும் ஹெச்-4 விசா வழங்குவதை நிறுத்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்துள்ளதால், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மெரிக்காவில் ஹெச்-1 பி விசா பெற்ற ஆணோ, பெண்ணோ தங்கள் கணவர் அல்லது மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்து வர அனுமதிக்கும் ஹெச்-4 விசா வழங்குவதை நிறுத்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்துள்ளதால், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு, அப்போதைய அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான அரசு, ஹெச்-1 பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு ஹெச்-4 விசா மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பை வழங்கினார். இதன் காரணமாக ஹெச்-1 பி விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கிறவர்கள் ஆண்களாக இருந்தால் அவர்களது மனைவிக்கும், பெண்களாக இருந்தால் கணவருக்கும் அங்கேயே வேலை தேடிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பின் மூலம் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்கள் இதில் பலன் பெற்று, அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது.

ஆனால், அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்குத்தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது தற்போதைய அதிபர் ட்ரம்பின் கொள்கையாக உள்ளது. இதுதொடர்பாக அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ``அமெரிக்க பொருள்களையே வாங்குங்கள்; அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துங்கள்" என்ற கொள்கையை நிர்வாக உத்தரவாகப் பிறப்பித்தார்.

அதிக பாதிப்பு இந்தியர்களுக்குத்தான்

இதைத் தொடர்ந்து, ஹெச்-1 பி விசாவில் அமெரிக்காவில் வேலை செய்கிற வெளிநாட்டினரின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு, அதாவது ஹெச்-4 விசாவில் பணிபுரிபவர்களுக்கு, அங்கு வேலை பார்ப்பதற்கு வழங்கி வந்த அனுமதியை விலக்கிக்கொள்வது குறித்து அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை பரிசீலித்து வந்தது, இந்த நிலையில், தற்போது ஹெச்-4 விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட இருப்பவர்கள் இந்தியர்கள்தான். ஹெச்-4 விசா பெற்று பணியாற்றும் இந்தியர்கள் அனைவருமே சிறப்புத் திறன் பெற்று அங்கு பணிபுரிபவர்கள்.

இந்தச் சட்டத்தை நீக்குவதன் மூலம் புதிய வழிகாட்டுதல்படி அமெரிக்கர்களுக்குப் பணி வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை மைய இயக்குநர் ஃபிரான்சிஸ் சிஸ்னா தெரிவித்துள்ளார். இதுதொடர்பான முறைப்படியான அறிவிப்பு கோடை காலத்தின் இறுதியில் அறிவிக்கப்படலாம் என அமெரிக்க செனட்டர் சக் கிரேஸ்லேவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஃபிரான்சிஸ் சிஸ்னா தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வாழ் இந்தியர்கள்

அமெரிக்காவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மற்றும் அதைச் சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோ சாப்ட், ஆப்பிள் எனப் பல முன்னணி நிறுவனங்களும் இந்தியர்களையே வேலைக்கு அமர்த்தி உள்ளன.

இவை தவிர, இந்திய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், விப்ரோ, மகேந்திரா சத்யம், சி.டி.எஸ்., ஹெச்.சி.எல். போன்ற நிறுவனங்களும் அமெரிக்காவில் ஏராளமான கிளை நிறுவனங்களை நடத்தி வருகின்றன. அவற்றிலும் இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இது தவிர, அமெரிக்காவின் நாசா ஆய்வுக்கூடம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இந்தியர்கள் அதிக அளவில் பணியாற்றுகிறார்கள். மேலும், இங்கு பணியில் உள்ள டாக்டர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு பல லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் இந்த ஹெச்-4 விசா மூலம் பயன்பெற்றுள்ளனர் என்றாலும், ஹெச்-4 விசா மூலம் அதிகம் பயன்பெற்றது இந்தியர்கள்தான். அமெரிக்காவில் தற்போது ஹெச்-4 விசாவில் வந்து பணியாற்றும் வெளிநாட்டவர்கள் என்று பார்த்தால், சுமார் 71,000 க்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இந்தியர்கள். இந்த நிலையில், ட்ரம்ப் அரசின் மேற்கூறிய முடிவு காரணமாக அவர்கள் தங்களது வேலையை இழந்து தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எப்போது முதல் அமலாகும்?

ஹெச்-4 விசா எப்போது முதல் முடிவுக்கு வரும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லையென்றாலும், அமெரிக்காவில் கோடைகாலம் முடிவுக்கு வரும் தருவாயில் இது நடைமுறைக்கு வரலாம் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை மைய இயக்குநர் ஃபிரான்சிஸ் சிஸ்னாவின் கடிதம் மூலம் தெரிய வருகிறது. முன்னதாக ஹெச்-4 விசா 2018 ஜூன் மாதத்துக்கு முன்னர் ரத்து செய்யப்படாது என்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில் ட்ரம்ப் அரசு தெரிவித்திருந்ததால், ஜூன் மாதத்துக்குப் பின்னரே இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

ஒரு பக்கம் பணியாளர்கள் பற்றாக்குறை... மறுபக்கம்  விரட்டியடிப்பு

முன்னதாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து ஹெச்-1பி விசா வழங்குவதில் கடுமையான கெடுபிடிகள் அமலாகத் தொடங்கியதால், அமெரிக்காவில் கிளை அமைத்து இந்தியப் பணியாளர்களை அனுப்பி வந்த இந்திய ஐடி நிறுவனங்கள், மேற்கூறிய விசாவைப் பெறுவதில் கடும் சிரமங்களைச் சந்தித்து வந்தன. இதன் காரணமாக, ஹெச்-1பி விசா கோரி வெளிநாட்டவர்களிடமிருந்தும், இந்திய ஐடி நிறுவனங்களிடமிருந்தும் வரக்கூடிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், சுமார் 26 சதவிகித நிறுவனங்கள் தங்களது புராஜெக்ட்களை தாமதப்படுத்தி வருவதாகவும், 22 சதவிகித நிறுவனங்கள் தங்களது பணியிடத்தை உலகின் வேறு பகுதிகளுக்கு மாற்றிக்கொண்டுவிட்டதாகவும் 'என்வாய் க்ளோபல்' (Envoy Global) என்ற குடியேற்ற சேவைகளை வழங்கும் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

ட்ரம்ப்

குறிப்பிட்ட துறையில் திறமையுடன் திகழும் பணியாளர்கள் அவர்கள் எந்த நாட்டில் பிறந்திருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர்களைப் பணியமர்த்தியதன் மூலம் அவர்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவியதாகவும், இதனால் அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் நல்ல பயனடைந்ததாகவும் 'என்வாய் க்ளோபல்' கூறுவதாக அந்த நாளிதழ் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ட்ரம்ப் அரசு அடுத்த அதிரடியாக ஹெச்-4 விசாவுக்கு முடிவு கட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது ஹெச்-1பி விசாவின் கீழ் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய பணியாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க பணியாளர்கள் சந்தையில் தொழில்நுட்பத் துறைக்கான சுமார் 5,48,000 இடங்கள் காலியாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்க நிறுவனங்கள் பணியாளர்கள் பற்றாக்குறையில் தவித்து வருவதாகவும் அமெரிக்காவின் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை ஒருபுறம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கைகள் முரண்பாடான நிலையைத் தோற்றுவித்துள்ளது.

``ஒரு பக்கம் ஏராளமான வேலைவாய்ப்புகள்... மறுபக்கம் ட்ரம்ப் அரசின் கெடுபிடிகள் காரணமாக போதுமான பணியாளர்கள் இல்லாமல் நிறுவனங்கள் தவிக்கும் நிலை" என ட்ரம்ப் அரசை அந்த நாட்டின் முன்னணி ஊடகங்களே கடுமையாக விமர்சிக்கின்றன.

பாதிப்பு அமெரிக்காவுக்கும்தான்

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ் காம் (The National Association of Software and Services Companies - NASSCOM)
``விசா விவகாரம் தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இரு நாடுகளையும்தான் பாதிக்கும். தற்போது ஹெச்-1பி விசா வைத்துள்ள இந்தியர்கள் பலரும் கிரீன் கார்டுக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் விசா நீட்டிப்பை மறுப்பதன் மூலம் மிகப் பெரும் பாதிப்பு உருவாகும்.

இந்த பிரச்னை ஐடி துறைக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதல்ல. ஒட்டுமொத்தமாக ஹெச்-1 பி விசா வைத்துள்ள அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போதைய சூழலில் அமெரிக்காவில் திறன் மிக்கவர்கள் இல்லை என்பதுதான் யதார்த்தமான சூழல். இப்படிப்பட்ட நிலையில் விசா நீட்டிப்பு மறுப்பது இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு வேளை இந்த யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டால் ஹெச் -1 பி விசாவை மட்டும் வைத்துக்கொண்டு கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்திருப்போர் அங்கு பணிபுரிய முடியாத சூழல் உருவாகும்" என ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

அமெரிக்க ஐடி துறையும் எதிர்ப்பு

இதனிடையே ஹெச்-4 விசாவுக்கு முடிவு கட்டும் ட்ரம்ப் அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செல்வாக்கு மிக்க உறுப்பினர்கள், ஃபேஸ்புக் உள்ளிட்ட அமெரிக்க ஐடி துறை பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

" ஹெச்-4 விசா ரத்து செய்யப்பட்டால், அமெரிக்காவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் குடும்பத்துக்கு பெரும் துன்பம் நேரிடும் என்றும், அது அமெரிக்க பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும், எனவே அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்றும் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் செயல்படும் ஃபேஸ்புக், கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்களால் தோற்றுவிக்கப்பட்ட FWD.US ( அமெரிக்க குடியேற்ற விதிகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக 'லாபி' செய்யும் அமைப்பு) எனும் அமைப்பு ட்ரம்ப் அரசை வலியுறுத்தி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்