``பெண்களை நிர்வாணமாகப் பார்த்தால் இயல்பாகக் கடப்பான் என் மகன்!'' - அமெரிக்க மாடல் ஆம்பர் ரோஸ்

வீட்டில் என் 5 வயது மகனான செபாஸ்டியன் முன்பு நான் நிர்வாணமாகத்தான் இருப்பேன்" எனச் சொல்லி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். 

``பெண்களை நிர்வாணமாகப் பார்த்தால் இயல்பாகக் கடப்பான் என் மகன்!'' - அமெரிக்க மாடல் ஆம்பர் ரோஸ்

சிறிய குழந்தையில் ஆரம்பித்து உயர்பதவியில் இருக்கும் பெண் வரை பாலியல் வன்முறை மற்றும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கண்டித்து உணர்ச்சிகரமான போராட்டங்கள் ஒரு பக்கம்; `இதற்கெல்லாம் பெண்கள் அணியும் ஆடைகள்தாம் காரணம்' எனச் சொல்லி அடக்க ஒடுக்கம் பற்றி டியூஷன் எடுக்கும் கும்பல் இன்னொரு பக்கம் எனத் தினந்தோறும் தலைப்புச் செய்தியாகி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவைச் சார்ந்த மாடலும் நடிகையுமான ஆம்பர் ரோஸ் ( Amber Rose), ``வீட்டில் என் 5 வயது மகனான செபாஸ்டியன் முன்பு நான் நிர்வாணமாகத்தான் இருப்பேன்" எனச் சொல்லி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். 

``ஆண்களுக்குப் பெண்களின் உறுப்புகள் மீது ஆர்வம் ஏற்படுவதற்கான காரணம், அது மறைக்கப்படுவதுதான். மறைக்கப்படும் பொருளைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் எல்லோரிடமும் இருக்கும். அந்த மாதிரியான ஆர்வம் என் மகனுக்கு வந்துவிடக் கூடாது என்பதால், என் மகன் முன் நிர்வாணமாக இருக்கிறேன். என் வீட்டில் பெண் உறுப்புடன் தொடர்புடைய ஓவியங்களையும் வாங்கிவைத்துள்ளேன். இப்போது என் மகனுக்குப் பெண் உறுப்பு பற்றி எல்லாம் தெரியும். இனி அவன் ஒரு பெண்ணை நிர்வாணமாகப் பார்த்தாலும், சாதாரணமாகத்தான் நடந்துகொள்வான். அவன் பெண்களை மதிப்பவனாக வளர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

ஆம்பர் ரோஸ்

ஆம்பர் ரோஸின் இந்த அணுகுமுறை சரியானதுதானா? இப்படிச் செய்வதாலே பாலியல் குறித்த பிரச்னை தீர்ந்துவிடுமா? இதுகுறித்து சொல்கிறார், சைக்காலஜிஸ்ட் சரஸ் பாஸ்கர்.சரஸ் பாஸ்கரன்

``வெளிநாடுகளில் பெண்ணின் உறுப்புகள், இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதனால், ஆம்பர் ரோஸின் செயல் அங்கே பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், நம் நாட்டில் பொது இடத்தில் குழந்தைக்குப் பால் ஊட்டுவதுகூட தவறாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இந்த இடத்துக்கு ஏற்ற வகையில்தான் பாலியல் குறித்த விழிப்புஉணர்வை அணுக வேண்டும். இந்தச் சமுதாயப் பார்வைதான், குழந்தைகளிடம் பாலியல் பற்றிப் பேசும் தயக்கத்தைப் பெண்களுக்கு ஏற்படுத்துகிறது. ஆனால், குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பாலியல் கல்வி மிக அவசியமான ஒன்று. குழந்தைகள், ஆரம்பக் காலத்திலேயே தங்கள் பிறப்புறுப்பை அடிக்கடி தொடும் பழக்கத்தில் இருப்பார்கள். இதற்கு, அலர்ஜி, அரிப்பு போன்றவை காரணமாக இருக்கலாம். அப்போதிலிருந்தே அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இரண்டு வயதுக் குழந்தைகூடப் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குழந்தைகள் நாம் பேசுவதை புரிந்துகொள்ளும் வளர்ச்சியை அடைந்ததும், குட் டச், பேட் டச் பற்றி பேச வேண்டும். அந்தரங்க உறுப்புகள் எவை என்று குழந்தை கேட்டால், பதில் சொல்லவே பெற்றோர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. இது தேவையில்லாதது. `உன் உள்ளாடையால் மறைக்கப்படும் உறுப்புகள்தாம் அந்தரங்க உறுப்புகள்' என்று சொல்ல வேண்டும். 

குட் டச் பேட் டச்

பொதுவாகவே நம்மிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அந்தரங்க உறுப்புகளைப் பற்றி குழந்தைகள் பேசும்போதோ, ஆடையின்றி இருக்கும்போதோ, `ஷேம்… ஷேம்' எனச் சொல்லி கேலி செய்கிறோம். இதை உடனே நிறுத்துங்கள். உங்களின் இந்தப் பேச்சு, உடல் பற்றிய தயக்கத்தைக் குழந்தைகளிடம் உண்டாக்கும். பிறகு, இக்கட்டான மற்றும் அவசியமான நிலையிலும் அதுகுறித்துப் பேச குழந்தைகள் தயங்குவார்கள். மருத்துவக் காரணங்களுக்காக, ஆரோக்கியத்துக்காக (அம்மா, அப்பா, மருத்துவர் தவிர) வேறு யாரும் அந்தரங்க உறுப்புகளைப் தொடுவதோ, பார்ப்பதோ, பேசுவதோ என்பது தவறான செயலாகும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது, `நோ' எனச் சத்தமாகக் கத்த வேண்டும் என்றும், பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லிக்கொடுங்கள். 

மேலும், `உன்னைத் தொட்டதை யார்கிட்டேயும் சொல்லக் கூடாது. ரகசியமா வெச்சுக்கோ' என்று யாராவது சொன்னால், உடனே பெற்றோரிடம் அல்லது மிகவும் நம்பும் பெரியவர்களிடம் சொல்ல வேண்டும்' என்றும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். பாலியல் கல்வி என்பது, குழந்தைகளாகக் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல. பெற்றோர் கற்றுக்கொடுக்கவேண்டிய விஷயம் என்பதை மனதில்கொண்டு செயல்படுங்கள்'' என்கிறார் டாக்டர் சரஸ் பாஸ்கர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!