பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தகுதிநீக்கம்! இஸ்லாமாபாத் நீதிமன்றம் அதிரடி

சட்டவிரோதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் வொர்க் பெர்மிட் எனப்படும் வேலைக்கான அனுமதியை வைத்திருந்ததாகப் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்பை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கவாஜா ஆசிஃப்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், வெளிநாட்டு வேலை அனுமதி வைத்திருப்பதாக அந்நாட்டின் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் என்ற கட்சியைச் சேர்ந்த உஸ்மான் தார் என்பவர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி மனுத்தாக்கல் செய்தார். அதில், `ஆசிஃப் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது அளித்த வேட்பு மனுவில், தான் ஒரு தொழிலதிபர் என்றும், தான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரிடம் வெளிநாட்டு வேலை அனுமதி பத்திரம் இருப்பதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே, அவரைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இஸ்லாமாத் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 
விசாரணையில் ஆசிஃப் வெளிநாட்டு வேலை அனுமதி பத்திரம் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரைத் தகுதி நீக்கம் செய்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது பேசிய நீதிபதிகள், ‘இந்தத் தீர்ப்பை கனத்த இதயத்துடன்தாம் வழங்குகிறோம். ஏனெனில், கடந்த நான்கு வருடங்களாக மேற்கொள்ளபட்டு வந்த அனைத்து அரசு நடவடிக்கைகளும் தற்போது வீணாகியுள்ளது. மேலும், ஒரு நல்ல தலைவரை எதிர்பார்த்து வாக்களித்த 3,42,125 வாக்காளர்களின் கனவுகளும் பாதிப்படைகின்றன’ என நீதிபதிகள் தெரிவித்தனர். இதே போன்று பனாமா பேப்பர்ஸ் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!