பனி மலையில் காணாமல் போன நாய்கள்... உயிரோடு மீட்ட தனியொருவன்... ஒரு நெகிழ்ச்சிக் கதை! | The Chilling Story of a Dog Rescue in England

வெளியிடப்பட்ட நேரம்: 08:52 (28/04/2018)

கடைசி தொடர்பு:08:52 (28/04/2018)

பனி மலையில் காணாமல் போன நாய்கள்... உயிரோடு மீட்ட தனியொருவன்... ஒரு நெகிழ்ச்சிக் கதை!

ஸ்காட், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். ஹெல்வெலின் மலையின் கிழக்குப் பகுதி மிகவும் ஆபத்தானது. கடந்த இரண்டு நாட்களாக, யாரும் அந்தப் பக்கம் மட்டும் போய்த் தேடவில்லை என்ற தகவல் அவருக்குத் தெரிகிறது.

பனி மலையில் காணாமல் போன நாய்கள்... உயிரோடு மீட்ட தனியொருவன்... ஒரு நெகிழ்ச்சிக் கதை!

இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. "இனி நாம் போனாலும் அதைக் காப்பாற்ற முடியுமா?" என்ற கேள்வி அவருக்கு எழாமல் இல்லை. மீண்டும், மீண்டும் ஃபேஸ்புக்கில் போடப்பட்டிருந்த அந்த விளம்பரத்தைப் பார்க்கிறார். 
                                                 

                                                                                         காணவில்லை.

பெயர்: லைலா (Lilah). 

தொலைந்த இடம்: ஹெல்வெலின் மலையடிவாரம் (Helvellyn), இங்கிலாந்து. 

உடன் இருந்தவன் : மாங்க்ரெல் கேஷ் (Mongrel Cash)  

இனம்: ஜெர்மன் ஷெப்பர்டு (German Shepherd)

உரிமையாளர் :  காலெட் கில்ராய் (Colette Kilroy).  

ஸ்காட் பில்லிங்கிற்கு (Scott Pilling)  வயது 40யை நெருங்கிக் கொண்டிருந்தது. லாரிகளுக்கு "பாடி" கட்டுவது தான் ஸ்காட்டின் வேலை. ஆனால், மலையேற்றத்தில் பெரும் ஆர்வம். நாய்கள் என்றால் அலாதி பிரியம். 

பனிமலையில் மீட்கப்பட்ட நாய்கள்

முயற்சி செய்வோம் என்று முடிவு செய்கிறார். விளம்பரத்தில் இருக்கும் மொபைல் எண்ணிற்கு போன் செய்து தகவல்களைச் சேகரிக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர், ஹெல்வலின் மலையடிவாரத்தில் இரண்டு நாய்களையும் வாக்கிங் அழைத்துச் சென்றிருக்கிறார் அதன் உரிமையாளர் காலெட். அப்போது, அவர் அசந்த நேரம் இரண்டு நாய்களும் ஓடியாடி விளையாட, அப்படியே வழி தெரியாமல் காணாமல் போயிருக்கின்றன. போனில் பேசும்போதே காலெட் அழுகிறார்...

"அவை என் நாய்கள் அல்ல. குழந்தைகள். அவற்றுக்கு என்ன நடந்ததோ என்று தெரியாமல் என் நெஞ்சம் பதறுகிறது. ஒவ்வொரு நொடியும் அவற்றின் நலன் வேண்டி கடவுளை பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்." 

பனிமலை - நாய்

ஸ்காட் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். ஹெல்வெலின் மலையின் கிழக்குப் பகுதி மிகவும் ஆபத்தானது. கடந்த இரண்டு நாட்களாக, யாரும் அந்தப் பக்கம் மட்டும் போய்த் தேடவில்லை என்ற தகவல் அவருக்குத் தெரிகிறது. அதை நோக்கி ஸ்காட் கிளம்புகிறார். உயிரைப் பணையம் வைக்கும் பயணம் தான். இருந்து துணிகிறார் ஸ்காட். 

பனி மலை. உயரம் ஏற, ஏற சிரமம் அதிகமாகிறது. பனியில் சில முறை சறுக்கி விழவும் செய்கிறார்.  நாய்களை உயிரோடு மீட்க முடியும் என்ற நம்பிக்கை ஸ்காட்டிற்கு ஆரம்பம் முதலே கிடையாது. குறைந்தது, நாய்களின் உடலையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பயணத்தைத் தொடங்குகிறார். இந்த மலைப்பகுதியில் கடும் குளிருக்கும், திடீரென கிளம்பும் பனிப்புயலுக்கும் நடுவே இரண்டு வாயில்லா ஜீவன்கள் பிழைத்திருப்பது அரிதிலும், அரிதான விஷயமாகத் தான் இருக்க முடியும். 

ஸ்காட் நடந்துக் கொண்டேயிருக்கிறார். கால்கள் பலமிழக்கத் தான் செய்கின்றன. முதுகு வலி எடுக்கத் தான் செய்கிறது. இது வழக்கமான மலையேற்றம் கிடையாது. இரண்டு உயிர்களுக்கான தேடல். இதில் நேரம் தான் முக்கியம். ஒவ்வொரு நொடியும் மிகவும் முக்கியமானது. நின்று ஓய்வெடுக்கும் நேரம், நாய்கள் அங்கு பெரும் ஆபத்தில் சிக்கியிருக்கலாம். ஒரு நொடி வீண் செய்யாமல், ஒரு நிமிடம் ஓய்வெடுக்காமல் ஸ்காட் போய்க் கொண்டேயிருக்கிறார். 

மீட்கப்பட்ட நாய்கள்

திடீரென பனிப்புயல் கிளம்புகிறது. வழக்கமான மலையேற்ற சாகசத்திற்கு வந்திருந்த ஒருவர் நிலைத்தடுமாறுவதை ஸ்காட் கவனிக்கிறார். அவரைக் காப்பாற்ற ஓடுகிறார். பனிப் புயலிலிருந்து அவரைக் காக்கிறார். அடுத்து எப்படி முன்னேறுவது என்ற குழப்பம். அடுத்த பத்தடியில் என்ன இருக்கிறது என்று தெரியாத சூழல். ஒரு பாறையின் அடியில் அடைக்கலமாகிறார். உடன் அவர் காப்பாற்றிய அந்த மனிதரும். சில நிமிடங்கள், பனிப்புயல் கிளப்பிய புகை, கொஞ்சம், கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது. 

ஸ்காட் அருகே உட்கார்ந்திருந்த அந்த மனிதரிடம் ஒரு பைனாகுலர் இருந்தது. அதை வாங்கி சுற்றும், முற்றும் பார்க்கிறார். ஒரு நொடி ஸ்காட் கண்களை சுருக்குகிறார். தூரத்தில் வெள்ளைப் பனி போர்வைக்கு நடுவே இரண்டு கருப்பு புள்ளிகள் தெரிகின்றன. இன்னும் கூர்ந்து கவனிக்கிறார். அவை அசைவது தெரிகிறது. அவை நாய்களாக இருக்குமென்று அனுமானிக்கிறார் ஸ்காட். 

புயல் வேகம் எடுக்கிறார். அந்தப் புள்ளிகளை நோக்கி ஓடுகிறார். தெரிந்துவிட்டது அது லைலாவும், கேஷும் தான். ஆனால், ஐயோ... எங்கே நிற்கின்றன அவை. அங்கு எப்படி போயின? 

ஸ்காட் நெருங்கிக் கொண்டிருக்கும் போதே விசிலடிக்கிறார். லைலா அதற்கு பதில் சொல்வது போல் குரைக்கிறாள். இருக்கும் கொஞ்ச இடத்தில் சுற்றி, சுற்றி வருகிறாள். காப்பாற்று என்பது போல் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டிருக்கிறாள். கேஷ் சிறியவன் என்பதால், அவனைக் காத்து லைலா நிற்பதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போகிறார் ஸ்காட். பாறையின் அடியில் மறைந்திருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முயற்சி செய்த அவற்றின் புத்தி கூர்மை அவரை ஆச்சரியப்படுத்தியது. கிட்டத்தட்ட நெருங்கி விட்டார். 

லைலா நாய்

திடீரென மீண்டும் புயல். பனிப் புகையாக மறைக்கிறது. அப்படியே ஒதுங்கி உட்கார்கிறார் ஸ்காட். சில நிமிடங்கள். மீண்டும் முன்னேறுகிறார். ஆனால், இப்போது ஆபத்து அதிகமாகியிருந்தது. நாய்கள் நின்று கொண்டிருந்த பனி சரியும் நிலையில் இருந்தது. அதற்குள் அங்கு, ஸ்காட் காப்பாற்றியிருந்த அந்த மனிதரும் வந்து சேர்ந்தார். பல மணி நேரங்கள் இருவருமாகப் போராடி, லைலாவையும், கேஷையும் பத்திரமாகக் காப்பாற்றினர். 

பாசத்தில் தாவி குதித்து, ஸ்காட்டை தன் நாவின் ஈரத்தால் நனைத்தாள் லைலா. கேஷ் அப்போது தான் பயத்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளிவந்துக் கொண்டிருந்தான். 

ஸ்காட்

ஸ்காட் பில்லிங் (Scott Pilling)

இறுதியாக இருவரையும் உயிரோடு கொண்டு வந்து காலெட்டின் முன் நிறுத்தினார் ஸ்காட். காலெட்...அழுதார். சிரித்தார். குதித்தார். அவருக்கு உண்மையில் என்ன செய்வதென தெரியவில்லை. மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என தெரியவில்லை. 
அவரைப் பார்த்து சிரித்தபடியே ஓர் ஓரமாக நின்றார் ஸ்காட். 

மீட்கப்பட்ட நாய்கள்

லைலா மற்றும் மாங்க்ரெல் கேஷோடு அதன் உரிமையாளர் காலெட். 

"உண்மையில் இது அதிசயம் தான். சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும், உயிரோடு மீட்டிருப்பது சிரமமான விஷயமாகியிருக்கும். உயிர் வாழ்தலில் லைலாவுக்கும், கேஷுக்கும் பெரிய ஆசை என்று நினைக்கிறேன். அது தான் அவர்களைப் பிழைத்திருக்க வைத்திருக்க வேண்டும். இனி அவர்களின் வாழ்க்கை இன்னும், இன்னும் அழகாக இருக்கும் என்று நம்புகிறேன்." என்று சொல்கிறார் ஸ்காட். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்