ஆப்கானிஸ்தானில் பொருளாதாரப் பணிகள்! - சீனாவுடன் கூட்டுசேரும் இந்தியா

ஆப்கானிஸ்தானில், பொருளாதார திட்டப் பணிகளை இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மோடி

சீனாவில் நடைபெறும் வுஹான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சீனா புறப்பட்டுச் சென்றார், பிரதமர் மோடி. சீன சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, வுஹான் நகரில் உள்ள கிழக்கு ஏரியில், இரு நாட்டுத் தலைவர்களும் படகு சவாரி செய்தனர். அப்போது, இருவரும் பல்வேறு விஷயங்கள்குறித்து ஆலோசனை நடத்தினர் எனக் கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தானில் பொருளாதாரத் திட்டத்தை மேற்கொள்ள ஷி ஜின்பிங் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

படகு சவாரி

முன்னதாக, போரால் சீரழிந்த ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானுடன் இணைந்து பொருளாதாரப் பணிகளை மேற்கொள்ள சீனா திட்டமிட்டிருந்தது. இதற்கு, அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதுமட்டுமின்றி, பாகிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கடுமையாக எதிர்த்துவந்தனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பொருளாதார திட்டப் பணிகளை இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தினால், பாகிஸ்தானின் வளர்ச்சிக்குப் பின்னடைவாக அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!