வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (30/04/2018)

கடைசி தொடர்பு:20:40 (30/04/2018)

43 வயதில் மறைந்த உலகின் வயதான சிலந்தி! - சோகத்தில் ஆழ்ந்த சூழலியல் ஆர்வலர்கள்

உலகின் வயதான சிலந்தி என்று அறியப்பட்ட 'நம்பர் - 16' சிலந்தி ஆஸ்திரேலியா ஆய்வகத்தில் மரணம் அடைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

மேற்கு ஆஸ்திரேலியாவின், மத்திய வீட் பெல்ட் பகுதியில் 1974-ம் ஆண்டு, மிகப்பெரிய சிலந்தி பூச்சி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்தச் சிலந்திக்கு 'நம்பர் 16' என விஞ்ஞானிகள் பெயர் சூட்டினர். இதை ஆய்வகத்துக்குக் கொண்டு வந்த ஆராய்ச்சியாளர்கள், அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வந்தனர். முதற்கட்ட ஆய்வில், இது வைல்டு டிராப்டோர் வகையைச் சேர்ந்த சிலந்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக, வைல்டு டிராப்டோர் வகை சிலந்திப் பூச்சிகள் அடர்ந்த காடுகளில் வளரக்கூடியவை.

இருப்பினும், ஆஸ்திரேலியாவில் உள்ள பூங்காக்களிலும் வளர்ந்த மரங்களிலும் பரவலாகக் காணமுடிந்தது. எனவே, டிராப்டோர் வகை சிலந்திகளின் குணநலன்களை ஆய்வு செய்வதற்காக நம்பர் - 16 பயன்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகள் பூச்சி ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயன் அளித்தது. இந்நிலையில், தன்னுடைய 43வது வயதில் டிராப்டோர் வகை சிலந்தி மரணம் அடைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்துப் பேசிய ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகப் பூச்சியல் துறை ஆய்வாளர் ஒருவர்,  'வழக்கமாக டிராப்டோர் வகை சிலந்திகள் 5 முதல் 20 ஆண்டுகள் வரைதான் உயிர் வாழும். ஆனால், நம்பர் - 16ஐ ஆய்வகத்தில் வைத்துப் பராமரித்து வளர்த்ததால் 43 வயது வரை வாழ்ந்திருக்கிறது. ஆராய்ச்சிக்காகப் பதிவுசெய்யப்பட்ட சிலந்திப் பூச்சிகளில் மெக்சிகோ நாட்டின் டிரான்டுலா என்னும் சிலந்திதான் நீண்ட நாள் உயிர் வாழ்ந்ததாகக் கருதப்பட்டது. அந்தச் சாதனையை நம்பர் - 16 முறியடித்து, உலகின் மிகவும் வயதான சிலந்தி என்ற பெயரைப் பெற்றது' என நெகிழ்ந்தார்.