வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (01/05/2018)

கடைசி தொடர்பு:18:35 (01/05/2018)

காற்றுக்காக விமானத்தின் கதவைத் திறந்த பயணி! - சிறையில் அடைத்த சீன அரசு

சீனாவில் விமானம் புறப்படும் முன் உள்ளே மிகவும் அனலாக இருந்ததால் குளிர் காற்றுக்காகப் பயணி ஒருவர் விமானத்தின் எமெர்ஜென்சி கதவைத் திறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சீனா, மியான்யங் என்ற நகரில் உள்ள மியான்யங் நஜியோ விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி சென் என்ற 24 வயதுள்ள ஒரு இளைஞர் வேறு ஊருக்குச் செல்வதற்காக விமானத்தில் ஏறியுள்ளார். அவருக்கு ஜன்னல் ஓர இருக்கை வழங்கப்பட்டிருந்தது. விமானத்தின் உள்ளே ஒரே அனலாக இருந்ததால் தனது அருகில் இருக்கும் ஜன்னலைத் திறக்க முயற்சி செய்து அதன் கைப்பிடியை இழுத்துள்ளார். ஜன்னல் திறக்க மிகவும் கஷ்டமாக இருந்ததால் வலுவாகப் பிடித்து இழுத்துள்ளார். அவர் இழுத்த வேகத்தில் ஜன்னலுடன் இணைப்பில் இருந்த எமெர்ஜென்சி கதவு திறந்துள்ளது. இதைக்கண்ட பயணிகள் சிறிது பதட்டமடைந்தனர். 

இது குறித்து பேசிய விமான நிலைய அதிகாரி, “அந்த இளைஞர் ஜன்னலைத் திறக்க முயன்று அவ்வாறு நடக்கும் எனத் தெரியாமல் செய்துவிட்டார். ஜன்னலின் பிடியும், எமெர்ஜென்சி கதவின் பிடியும் இணைப்பில் இருந்ததால் அது சரிந்துள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் அந்த இளைஞர் இவ்வாறு செய்ததற்காக அவருக்கு 15 நாள்கள் சிறைத்தண்டனையும் விமானத்தின் கதவை சரிசெய்ய 42,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.