வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (03/05/2018)

கடைசி தொடர்பு:13:56 (04/05/2018)

தண்ணீர்ப் பிரச்னையை சமாளிக்க அன்டார்டிகாவிலிருந்து பனிக்கட்டி எடுக்கும் கேப்டவுன்!

வரும் குளிர்காலத்தில் போதுமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அது கிடைக்காத பட்சத்தில் சில மாற்று ஏற்பாடுகள் மூலமாகத் தண்ணீர்த் தேவையைச் சமாளிக்க திட்டமிட்டு வருகிறார்கள்.

தண்ணீர்ப் பிரச்னையை சமாளிக்க அன்டார்டிகாவிலிருந்து பனிக்கட்டி எடுக்கும் கேப்டவுன்!

ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் போகும் உலகின் முதல் பெருநகரம் என்ற அச்சத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது கேப்டவுன். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகர் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாத பூஜ்ய நாளை எட்டும் என அறிவிப்பு வெளியானதும் உலக நாடுகள் எல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டன. இன்றைக்கு கேப்டவுன் நகருக்கான நிலை நாளைக்கு நமக்கும் வரலாம் என்பதால் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் வேகம் காட்டின. கேப்டவுன் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்தனர். அங்கு நிலவிய கடுமையான வறட்சியைத் தேசிய பேரிடராக அறிவித்தது தென்னாப்பிரிக்க அரசு. தண்ணீர் சிக்கனத்துக்காகப் பல கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. கார் கழுவுவது, வீடுகளில் தோட்டங்களைப் பராமரிப்பது போன்ற பல செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ரேஷனில் மண்ணெண்ணெய் அளிப்பதுபோல், வாட்டர் பாயின்ட்கள் அமைத்து, தண்ணீரை அளந்து அளந்து கொடுத்தார்கள். ஒரு குடிமகனுக்கு ஒரு நாளைக்கான அனைத்து தேவைகளுக்கும் சேர்த்து 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. உலகிலேயே தண்ணீருக்காக முதன்முதலாகக் காவலர்களை நியமித்தது கேப்டவுன் நிர்வாகம். இத்தனை சிக்கன நடவடிக்கை இருந்தாலும் பூஜ்ய நாளை எண்ணி பயந்துகொண்டே நாள்களைக் கடத்தி வந்தார்கள். இந்நிலையில், பூஜ்யநாளை சில நாள்கள் தள்ளி வைக்க முன்வந்தது கிரபவ் நகர விவசாயிகள் அமைப்பு. அவர்கள் கேப்டவுன் நகருக்கு 10,000 மில்லியன் லிட்டர் தண்ணீரைக் கொடுத்தார்கள். இதனால் சில நாள்கள் தள்ளிப்போனது பூஜ்யநாள். 

கேப்டவுன் தீர்வு 

இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையின் பெருங்கருணையால் இன்னும் பூஜ்ய நாள் இன்னும் சில நாள்கள் தள்ளிப்போயுள்ளது. இந்த நிலையில் கேப்டவுன் தண்ணீர்ப் பிரச்னையை தீர்ப்பது தொடர்பாக பல்வேறு திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. 50 லிட்டர் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து சமூக வலைதளங்களில் ஆலோசனைகள் குவிந்து வருகின்றன. வரும் குளிர்காலத்தில் போதுமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அது கிடைக்காத பட்சத்தில் சில மாற்று ஏற்பாடுகள் மூலமாகத் தண்ணீர்த் தேவையைச் சமாளிக்க திட்டமிட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீர்மேலாண்மை நிபுணர் நிக் ஸ்லோனோ, ‘‘நகரில் தண்ணீர்க் கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மக்களும் அதற்கு ஏற்ப மாறிவருகிறார்கள். வரும் குளிர்கால மழையை நம்பியுள்ளோம். அதுவும் பொய்த்தால், அன்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளைக் கொண்டு வந்து உருக்கி தண்ணீர்த் தேவையைச் சமாளிக்கலாம் என்பது தொடர்பான ஒரு திட்டமும் ஆலோசனையில் உள்ளது. அன்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளைக் கொண்டு வந்து உருகச் செய்வதன் மூலமாகத் தண்ணீரை உற்பத்தி செய்ய முடியும். ஒரு பனிப்பாறையில் இருந்து தினமும் 15 கோடி லிட்டர் தண்ணீர் மூலம் ஒரு ஆண்டுக்கு உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் கேப்டவுன் நகரின் தண்ணீர்த் தேவையில் முப்பது சதவிகிதத்தை பூர்த்தி செய்ய முடியும். இந்தத் திட்டத்துக்கு அரசு மற்றும் தனியார் நிதியுதவி தேவைப்படுகிறது’’ என்றார்.

மேற்படி நடவடிக்கையின் மூலமாக பூஜ்யநாள் என்ற கொடுமையில் இருந்து கேப்டவுன் தற்காலிகமாக தப்பித்துள்ளது. வான்மழையே வா...உன் பெருங்கருணையால் பூஜ்யநாள் என்பதே பூமியில் இல்லாது போகட்டும்...வா மழையே வா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்