திவாலானது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம்

ஃபேஸ்புக் மூலம் தகவல்களைத் திருடியது தொடர்பான விவகாரத்தில் சிக்கிய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டது. 

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா

அமெரிக்க தேர்தலின்போது, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் பல லட்சம் பயனாளர்களின் தகவல்களை, அவர்களின் அனுமதியின்றி ஃபேஸ்புக் உதவியுடன் திருடியதாகக் கடந்த மார்ச் மாதம் புகார் எழுந்தது. சர்வதேச அளவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. திருடப்பட்ட தகவல்களின் மூலமே, ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் எனவும் கூறப்பட்டு வந்தது. மேலும், இது தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்கா மட்டுமின்றி மேலும், பல நாடுகளில் நடக்கும் தேர்தல்கள் இந்தக் கேம்பிரிட்ஜ் நிறுவனத்தின் தகவல் திருட்டின் மூலமே பல தலைவர்கள் வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டது.  தேர்தல்களுக்கும் கேம்பிரிட்ஜ் நிறுவனத்துக்கும் தொடர்பு உள்ளது என்பது போன்ற பல சர்ச்சைகள் எழுந்தன. 

செல்போன் செயலி ஒன்றின் மூலம் 8.7 கோடி பயனாளர்களின் தகவல்களைக் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் சட்டவிரோதமாகத் திருடியதாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதற்காகப் பல மில்லியன் டாலர் வரையில் ஃபேஸ்புக்குக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் நிறுவனங்களின் சந்தை மதிப்பு குறையத் தொடங்கியது. அதேபோல், இந்த இரு நிறுவனங்களை விட்டும் பயனாளர்கள் வெளியேறத் தொடங்கினர். தற்போது இந்தச் சர்ச்சையின் மூலகாரணமாகக் கருதப்படும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திவாலாகி உள்ளதாக, அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் க்ளாரன்ஸ் மிட்சல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த சில மாதங்களாக எங்கள் நிறுவனத்தின்மீது பல அவதூறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. எங்கள் ஊழியர்கள் மிகவும் நம்பிக்கையாக மட்டுமே நடந்துகொண்டோம். ஆனால், ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டதில் தற்போது நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம். இதனால் இப்போது எங்கள் நிறுவனம் தொடரமுடியாத நிலையில் உள்ளது” எனப் பிரபல செய்தி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!