`இந்தாண்டு இலக்கியத்துக்கு நோபல் பரிசு கிடையாது' - அதிர்ச்சி காரணம்

இந்தாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு எவரையும் தேர்வு செய்யப்போவதில்லை என்று 'ஸ்வீடிஷ் அகாடமி' அறிவித்துள்ளது. குழு உறுப்பினரின் கணவர் பாலியல் சர்ச்சையில் சிக்கியதே இதற்குக் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நோபல் பரிசு

உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு நோபல். இந்தப் பரிசு, மக்களுக்குப் பயன் அளிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம், இலக்கியம் மற்றும் சமூகத்துக்கு தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும். ஆல்பர்ட் நோபல் என்ற அறிஞரின் பெயரால் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் 2018-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களின் பரிசுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் 2019-ம் ஆண்டுடன் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்படும் என்று ஸ்வீடிஷ் அகாடமி இன்று அறிவித்துள்ளது. 
இது, அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. 1901-ம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வரும் சூழலில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் முதல் முறையாக இந்த அறிவிப்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நோபல் பரிசு தேர்வாளர்கள் குழு உறுப்பினரும் கவிஞருமான காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார்களே இதற்குக் காரணம் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, நோபல் பரிசு அறிவிக்கும் முன்பே, பரிசுக்குத் தேர்வானவர்களின் பெயர்களை வெளியிட்டதாக அவர்மீது மற்றொரு குற்றம் சுமத்தப்பட்டது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்று ஜீன் கிளாட் அர்னால்ட் கூறினார். கணவர் செய்த தவறுக்காகக் காத்தீரனா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நோபல் பரிசு குழு உறுப்பினர்கள் முன்வைத்தனர். அவர், ராஜினாமா செய்ய மறுக்கவே, குழுவில் உள்ள மூன்று உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தகவல் உள்ளது. 

இந்தநிலையில், ஸ்வீடிஷ் அகாடமி தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கிடையே கருத்து மோதல்கள் எழுந்து வந்தன. நோபல் பரிசு அகாடமிக்கு எதிராக ஸ்வீடன் முழுக்க பெரும் போராட்டம் வெடித்து வருகிறது. இந்த விவகாரம் காரணமாக அகாடமியின் நிரந்தச் செயலாளர் சாரா டேனியஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுபோன்ற சர்ச்சை காரணமாகத்தான் இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு நிறுத்திவைக்கப்படுவதாகத் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நோபல் பரிசு கிடைக்கும் என்ற ஆவலில் இருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!