வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (07/05/2018)

கடைசி தொடர்பு:13:15 (07/05/2018)

மேடையில் பாகிஸ்தான் அமைச்சர்மீது துப்பாக்கிச் சூடு! - மலாலா கண்டனம்

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவரை துப்பாகியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான்

பாகிஸ்தான் முஸ்லிம்-லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் அசன் இக்பால், அந்நாட்டின் உள்துறை அமைச்சராக உள்ளார். பாகிஸ்தானில், வரும் ஜீலை மாதத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவ்வப்போது பல தலைவர்கள் தங்களின் பிரசாரத்தை நடத்திவருகின்றனர். 

அந்த வகையில் நேற்று, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசன் இக்பால்,  பஞ்சாப் மாகாணம் நாரோவால் மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற சிறிய பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், அமைச்சரை நோக்கி துப்பாகியால் சுட்டுள்ளார். துப்பாக்கிக்குண்டு, அமைச்சரின் வலது தோள்பட்டையில் பாய்ந்தது. அவர், மேடையிலேயே சரிந்துவிழுந்தார். பிறகு, உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு  கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தோள்பட்டையில் குண்டு பாய்ந்ததால், அமைச்சர் அபாயக்கட்டதைத் தாண்டிவிட்டதாகத் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் அபித் ஹுசைனை போலீஸார் உடனே கைதுசெய்தனர். அமைச்சர் சுடப்பட்டதற்கான காரணம்குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். அமைச்சர் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முன், கிறிஸ்தவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டுவிட்டு வந்ததால், அந்தக் கோபத்தில் இளைஞர் சுட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமைச்சர் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு பாகிஸ்தான் பெண் கல்விப் போராளியும், இளம் வயதில் நோபல் பெற்றவருமான மலாலா யூஸப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சுடப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. பாகிஸ்தானில் வாழும் அனைவரும் எந்தவித ஆபத்தும் இல்லாமல் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.