ஆடுகளுக்காக 45 பேர் கொல்லப்பட்ட கொடூரம்! - திருட்டு கும்பல் செய்த அட்டூழியம்

ஆடு திருடும் கும்பல் ஒன்று, பெண்கள் குழந்தைகள் எனப் பார்க்காமல் 45 பேரைக் கொன்ற சம்பவம் நைஜீரியாவில் நிகழ்ந்துள்ளது. 

நைஜீரியா

வடமேற்கு நைஜீரியாவின், கடுனா மாநிலத்தில் உள்ள க்வாஸ்கா என்ற கிராமத்தில், ஆயுதமேந்திய கும்பல் ஒன்று, கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 45 பேர் கொல்லப்பட்டனர். மேலும், அங்குள்ள வீடுகளுக்கும் தீவைத்துள்ளனர்.  இந்தத் தாக்குதலுக்கு, அப்பகுதியில் கால்நடைகள் மற்றும் சொத்துகளைத் திருடும் கும்பல் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

இந்தக் கும்பல், கிராமங்களில் இருக்கும் கால்நடைகளைத் திருடி, அதை இறைச்சிக்காகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவருகிறது. இவர்களின் திருட்டுக்கு யாரேனும் தடையாக வந்தால், அவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குவது, அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இவர்கள்மீது, இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்தத் தாக்குதல் சம்பவம் மிகவும் கவலை அளிப்பதாகவும், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் நைஜீரிய ராணுவப் படைகள் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அம்மாநில ஆளுநர் நசீர் அஹ்மத் எல்-ருஃபாயின் செய்தித் தொடர்பாளர் சாமுவேல் அருவான், அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் இரங்கள் தெரிவிப்பதாகவும், தாக்குதலுக்குக் காரணமாவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் கடுனா மாநில அரசு தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!