உடலில் பாய்ந்த அம்புடன் நடமாடும் மான்கள் - நெஞ்சைப் பதறவைக்கும் புகைப்படங்கள்

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உடலில் பாய்ந்த அம்புடன் மான்கள் நடமாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

மான்

அமெரிக்காவின், ஓரிகன் மாகாண காவல்துறை சமூக வலைதள பக்கமான ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அதில், உடலில் பாய்ந்த அம்புடன் மான்கள் சுற்றித் திரிவது போன்ற படங்களுடன், இந்தக் காரியத்தைச் செய்தவரைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

அவர்கள் வெளியிட்டிருந்த பதிவில் இருந்ததாவது, `கடந்த வாரம் ஓரிகனின் மீன் மற்றும் வனத்துறைப் பாதுகாப்பு அமைப்புக்கு ஒரு தகவல் கிடைத்தது. அது, தென்மேற்கு ஓரிகனில் உள்ள ஷாடி கோவ் என்ற பகுதியில் சில மான்கள் தங்களின் உடலில் அம்புகளுடன் சுற்றித்திரிவதாகச் சொல்லப்பட்டது. உடனே அந்த அமைப்பைச் சேர்ந்த சில அதிகாரிகள் ஷாடி கோவ் பகுதிக்குச் சென்று மான்களைக் கண்டுபிடித்து அம்புகளை அகற்றத் தீர்மானித்துச் சென்றனர்.

நீண்டநேரமாகத் தேடியும் அப்பகுதியில் ஒரு மான்கூட கிடைக்கவில்லை. இறுதியில் ஓர் அதிகாரியின் கண்ணில் மான் தென்பட்டது. அது அவர்கள் தேடிச் சென்ற மான்தான். அதன் அருகிலேயே உடனடியாக இன்னொரு மானும் தென்பட்டது. உடலில் அம்புகள் பாய்ந்திருந்தாலும், அந்த இரண்டு மான்களும் உண்ணுவதற்கும் நடப்பதற்கும் எந்தச் சிரமமுமின்றி இருந்தன. அந்த அம்புகள் மான்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பிறகு, அதிகாரிகள் அம்பை அகற்றினர். மான்கள் மீது அம்பு எய்தவர்களைக் கண்டுபிடிக்க உதவினால் அவர்களுக்கு 2,600 டாலர் சன்மானம் வழங்கப்படும் என ஓரிகன் வேட்டையாடும் அமைப்பு அறிவித்திருந்தது’ என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் வேட்டையாடுவதற்கு சட்டபூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திலிருந்து, செப்டம்பர் கடைசி வாரம் வரையிலும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரம் முதல் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் வரையிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, வேட்டை தடுப்புக் காலம் அமலில் உள்ள நிலையில், மான்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவத்துக்கு அம்மாகாண வேட்டையாடுபவர்களுக்கான அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் மற்றும் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!