வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (10/05/2018)

கடைசி தொடர்பு:15:20 (10/05/2018)

உற்பத்தி அதிகம் இல்லாத நாட்டில் சாலையில் ஓடிய சாக்லேட் ஆறு!

போலந்து நாட்டில் சாக்லேட் நிரப்பிய டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில், 12 டன் சாக்லேட் பாகு சாலையில் கொட்டியது.  

சாக்லெட்

க்ராபோஸிவோ (Graboszewo) என்ற நகரில், சுமார் 12 டன் சாக்லேட் பாகு நிரப்பிய டேங்கர் லாரி ஒன்று இனிப்பு நிரப்புவதற்காகத் தொழிற்சாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரியின் ஓட்டுநரால் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வண்டியின் ஓட்டுநருக்குப் பயங்கர காயம் ஏற்பட்டது. இதில், லாரியில் அடைக்கப்பட்டிருந்த மொத்த சாக்லேட் பாகும் கீழே கொட்டி வீணானது. நெடுஞ்சாலை முழுவதும் சாக்லேட் ஆறு ஓடியது. 

 தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், லாரியின் ஓட்டுநரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டேங்கர் லாரி சாலையின் நடுவே கவிழ்ந்ததால், இரு புறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையில் கொட்டியிருந்த சாக்லேட் பாகுகளை அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது. 

சாக்லேட் உற்பத்தி அதிகம் இல்லாத நாடு, போலந்து. அப்படியிருக்க, 12 டன் சாக்லேட் பாகு வீணானது, அந்நாட்டு  சாக்லேட் பிரியர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.