Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 127வது பிறந்த நாள் விழா

அமெரிக்காவின் டெலவர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த (டெலவர், பிலடெல்பியா மற்றும் தென்ஜெர்சி மாநில) தமிழ் நண்பர்கள் இணைந்து நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 127 வது பிறந்தநாள் விழா மேற்குறிப்பிட்டவற்றில் முதல் மாநிலமாம் டெலவரில் மே-2 , 2018 அன்று பிற்பகல் 1 .00 மணிமுதல் மாலை 4 .30 மணிவரை சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவானது இனிதே தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் மாணவ - மாணவிகளுக்குப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் உருவப்படத்தை முன்னிலைப்படுத்தி ஓவியப்போட்டியும், பாவேந்தரின் வாழ்வியல் சார்ந்த வினாடி வினாப் போட்டியும் தமிழில் நடைப்பெற்றது. இப்போட்டிகளில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டனர்.

அதன்பிறகு விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் ஒருங்கிணைப்பாளர் திருமிகு. துரைக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். அப்போது, இவ்விழாவின் முதன்மையான நோக்கம் எளிமையான போட்டிகளின் மூலம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உருவத்தையும், அவர் யார் என்பதையும் புலம் பெயர்ந்த தமிழ்க் குழந்தைகள் மனதில் பதிய வைப்பதும், குழந்தைகக்குப் பயிற்சி தந்து போட்டிகளுக்கு ஆயத்தப்படுத்துவதின் மூலமாகப் பெற்றோர்களையும் அக்கருத்துகளை உள்வாங்கச் செய்வதுமே என்றும், அது இவ்விழாவில் நிறைவேறிவிட்டது என்பதற்கு குழந்தைகளிடமிருந்து வெளிப்பட்ட திறமையே சான்று என்றும் கூறினார்.

இந்த இனிய விழாவில் பாரதிதாசனின் ``தமிழுக்கும் அமுதென்று பேர்” பாடலை இசையோடு திருமிகு. ரமா ஆறுமுகம் அவர்கள் தன் இனிமையான குரலில் பாடி அரங்கத்தில் உள்ளவர்களை ஆச்சர்யப்படுத்தினார். ``பாரதிதாசனும் பெண்ணுரிமையும்" என்ற தலைப்பில் திருமிகு. நெல்லிக்கனி அவர்கள் கனியைப் போல தமிழ்ச்சுவை தந்தார். ``புதியதோர் உலகம் செய்வோம்" என்ற தலைப்பில் ந.க.இராஜ்குமார் புரட்சியுரை ஆற்றினார்.

நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் திருமிகு. செந்தில்நாதன் முத்துசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பாரதிதாசன் குறித்து செந்தமிழ்ப் பேருரையாற்றினார். நிகழ்வின் மற்றொரு சிறப்பு விருந்தினரான மூதறிஞர் செம்மல் முனைவர் வ.சுப. மாணிக்கனார் அவர்களின் அன்பு மகள் திருமிகு. தென்றல் அழகப்பன் அவர்கள் ``பாரதிதாசன் ஒரு தமிழ்ப்போராளி” என்ற தலைப்பில் பேசி, புரட்சிக்கவிஞரின் வாழ்க்கை சுவடுகளைப் படம்பிடித்துக் காட்டியதும், அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளை மட்டுமல்லாது, ஒரு கவிஞனாய், போராளியாய் ஆற்றிய பணிகளை அழகுற உரைத்ததும் அரங்கில் இருந்த ஒவ்வொருவர் நெஞ்சத்திலும் பசுமையாய் பதிந்தது.

அதைத் தொடர்ந்து பேசிய திருமிகு. பிரசாத் பாண்டியன் அவர்கள், பாரதிதாசன் எப்படியெல்லாம் தன் எழுச்சி மிகு கவிதைகள் மூலமாக சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கப் போராடினார் என அழகுற விளக்கிப் பேசினார்.

போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் தம் கையால் ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

இறுதியாக நன்றிரையுடன் விழா அழகுடனும் எழுச்சியுடனும் இனிதே நிறைவுற்றது.

- ந.க.இராஜ்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement