அழியும் நிலையில் பவளப்பாறைகள்... முடக்கப்படும் மன்னார் வளைகுடா அறக்கட்டளை..! | Is Gulf of Mannar Biosphere Reserve Trust going to be shutdown?

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (14/05/2018)

கடைசி தொடர்பு:13:34 (14/05/2018)

அழியும் நிலையில் பவளப்பாறைகள்... முடக்கப்படும் மன்னார் வளைகுடா அறக்கட்டளை..!

கடல் உயிரினங்களின் சொர்க்கமாகவும், மீனவர்களின் ஆழ்கடல் அட்சய பாத்திரமாகவும் விளங்கி வருவது மன்னார் வளைகுடா கடல் பகுதி. இந்தக் கடல் பகுதியில் உள்ள அரிய வகை உயிரினங்களையும், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. மீன்களையும் அதை நம்பியுள்ள மீனவர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட  மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளைக்கு மூடு விழா நடத்த தமிழக அரசு முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அழியும் நிலையில் பவளப்பாறைகள்... முடக்கப்படும் மன்னார் வளைகுடா அறக்கட்டளை..!

கடல் உயிரினங்களின் சொர்க்கமாகவும், மீனவர்களின் ஆழ்கடல் அட்சயப் பாத்திரமாகவும் விளங்கி வருவது மன்னார் வளைகுடா பகுதி. இந்தக் கடல் பகுதியில் உள்ள அரியவகை உயிரினங்கள்தான், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இதுபோன்ற மீன்கள் மற்றும் அதை நம்பியுள்ள மீனவர்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளைக்கு மூடுவிழா நடத்த தமிழக அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மன்னார் வளைகுடா பகுதி

மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் (Mannar biosphere reserve) இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியான ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் அமைந்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற உயிர்க்கோளக் காப்பகம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது. தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் மன்னார் வளைகுடா தேசியப்பூங்காவை உள்ளடக்கி சுமார் 10,500 சதுர கிலோமீட்டரில் பரவியுள்ள இந்தக்காப்பகம், இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகமாக 1989-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

மன்னார் வளைகுடாவில் வாழும் மீன்கள்

மன்னார் வளைகுடாப் பகுதியில் காணப்படும் அழகான பவளப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகத் திகழ்கிறது. இந்த உயிர்கோளக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong), டால்பின்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள், இந்தப் பகுதியில்தான் காணப்படுகின்றன. முத்துக்கள், சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து இப்பகுதி காணப்படுகிறது. மேலும் கடற்பஞ்சுகள், பவளங்கள், கடல்விசிறிகள், இறால்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் உள்ளன. காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, வாழை தீவு ஆகிய தீவுகளும் மன்னார் வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ளன. இந்தத் தீவுகளைச் சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றில் கடினவகை பவளப் பாறைகளும் அடங்கும்.

மன்னார் வளைகுடாவில் வளரும் பவள பாறைகள்

இத்தகைய அரிய பகுதியைப் பாதுகாக்கத் தவறியதோடு, அதற்காகத் துவங்கப்பட்ட உயிர்கோள காப்பகம் எனும் அறக்கட்டளைக்கு மூடுவிழா நடத்தவும் தமிழக அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

``தமிழக அரசு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளையின் பணி கடல்வாழ் அரிய உயிரினங்கள் மற்றும் தாவரங்களைப் பாதுகாத்தல் மற்றும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல், மீனவர்களின் சமூக மேம்பாட்டை உயர்த்துவது ஆகியவைதான். இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவியுடன் இயங்கி வந்தது.

இந்நிலையில், ஐ.நா. உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவியானது, கடந்த 2012-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அறக்கட்டளையை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து மேலும் நான்கு ஆண்டுகளுக்குத் திட்டத்தை நீடித்தது. ஆண்டுக்கு ரூ.2.5 கோடி வீதம், நான்காண்டுகளுக்கு ரூபாய் 10 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பணத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்யாமல் இதுவரை 5.96 கோடி ரூபாய் மட்டுமே அத்திட்டத்துக்காகச் செலவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு 2017-18 நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 0.74 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் அத்திட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று தற்போது, மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தை இதுவரை பராமரித்து வந்த அறக்கட்டளையின் காலம் முடிந்ததாகக் கூறி பணிகளை நிறுத்திவிட்டு, உயிர்க்கோள காப்பகத்தை முழுமையாக தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்புத் துறையின்கீழ் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

கடல்வாழ் உயிரினங்கள்

மன்னார் வளைகுடா கடற்பகுதி வளங்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட பாரம்பர்ய மீனவர்களிடமே அக்கடமையை ஒப்படைப்பதுதான் அறக்கட்டளையின் நோக்கம். ஆனால், அறக்கட்டளை உருவாக்கப்பட்ட 2000-வது ஆண்டு தொடங்கி இன்றுவரை பதினேழு ஆண்டுகளில் அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல், கண்துடைப்புக்காக சில கூட்டங்களை மீனவர்களை வைத்து நடத்திவிட்டு, அரசின் பணத்துக்கு கணக்கு எழுதிய வேலைதான் நடந்தது. எனவே, அறக்கட்டளையின் செயல்பாடு முடியவில்லை. இன்னும் ஒழுங்குபடுத்தி சிறப்பாக கொண்டுசெல்ல வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள்.senthilvel

தமிழகத்தில் மன்னார் வளைகுடாவில் ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான 140 கி.மீ. பரப்பளவில் பவளப்பாறைகள் உள்ளன. அவற்றைக் கடத்திச் செல்லும் சிலர், சென்னையிலிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கடத்திச் செல்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பவளப் பாறைகளுக்கு மனிதர்களால் அழிவு ஏற்படத் தொடங்கி உள்ளது. பவளப்பாறைகள் கடத்தல் மட்டுமின்றி கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமயமாதல், தொழிற்சாலைக் கழிவுகளால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் போன்றவற்றாலும் கடல் வளம் பெரிதும் அழிந்து கொண்டிருக்கிறது.

கடல் என்பது கழிவுகளைக் கொட்டும் இடம் அல்ல. அது காடுகளைப் போலவே தாவரங்கள், நுண்ணுயிரிகள், பாலூட்டிகள் எனப் பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது. இவற்றில் கடல்வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது பவளப்பாறைகளே. இத்தகைய பவளப்பாறைகள், கடலின் தட்பவெப்பத்தை பேணிக்காக்கவும் கடல் பகுதிகளை இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் அரணாக உள்ளன. எனவே, மீண்டும் தமிழக அரசு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையை தற்கால சூழலுக்கு ஏற்ப, விதிகளில் மாற்றம் செய்து, மத்திய அரசு மற்றும் ஐ.நா. நிதியுதவியுடன் செயல்படச் செய்ய வேண்டும். இதன் மூலம் மன்னார் வளைகுடா கடற்பகுதி வளங்களை பாதுகாக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளார்.


டிரெண்டிங் @ விகடன்