Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்" தீபச்செல்வன்

ஈழத்தில்

2009 - ம் ஆண்டு தமிழர்களுக்குத் தாளவே முடியாத துயரத்தைத் தந்த ஆண்டு. அவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை முடக்கும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருந்தது இலங்கை அரசு. ஒவ்வொரு நாளும் எங்கு குண்டு விழுகிறது; எத்தனை பேர் மாண்டுபோயினர் எனும் செய்திகளைப் படிக்கும் துர்பாக்கிய நிலைக்கு உள்ளானோம். உலகம் முழுவதுமிருந்த மனித உரிமை ஆர்வலர்கள் அரசின் தாக்குதலை நிறுத்தக்கோரியும் அது கேட்பதாயில்லை. அந்தக் கொடூர யுத்தம் மே மாதத்தின் நடுவில் ஒரு முடிவுக்கு வந்தது. நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், ஒன்றரை லட்சத்தைத் தாண்டும் என்பதே அங்கிருந்து தப்பிவந்தவர்களின் கருத்து. ஈழத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் காணாமல் போயினர். சரணடைந்த பொதுமக்களும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இலங்கையில் தமிழர்கள் தங்களுக்கான அரசியல் உரிமையைக் கோரி போராட்டத்தை அமைதி வழியில்தான் தொடங்கினர். ஆனால், அது தவிர்க்க இயலாமல் ஆயுதவழிப்போராட்டமாக மாறியது. ஏராளமானவர்கள் தங்கள் இன்னுயிரையும் கொடுத்துப் போராடினர். அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. நேரடியாகச் சமரிலும் ஊடகங்களிலும் பெண்கள் தங்களின் பணியைப் பலருக்கும் முன்னுதாரணமாகச் செய்தனர். உறுப்புகளை இழந்தவர்கள் ஏராளம்; உயிரைத் தந்தவர்கள் பலர். அப்பெருமைக்கு உரிய பெண் போராளிகள் பற்றிய கவிஞர் தீபச்செல்வன் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார். 

ஈழத்தில் பெண் போராளி


தீபச்செல்வன் ``எங்கள் நாட்டில் ஆசிரியர் துறை, அலுவலகங்கள் என்று எல்லாவற்றிலும் கூடுதலான விகிதம் பெண்கள் இருப்பார்கள். நவீனக் கவிதைகளில்கூட ஈழப் பெண்கள்தாம் முக்கியப் பங்காற்றியுள்ளனர் எனலாம். அப்படித்தான் ஈழப் போராட்டத்திலும் பெண்கள் அணி முக்கியமானதொன்றாக இருந்தது. தலைவர் பிரபாகரன் ஈழப் பெண்கள் அணியைச் சாதனை மிகுந்த ஒரு துறையாக வளர்த்தெடுத்தார். அவர்களின் ஈடுபாடு, அவர்களின் இலட்சியத்துக்கு ஏற்ப எல்லாத் துறைகளிலும் ஈழப் பெண் போராளிகள் சாதனை செய்யும் களத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். 

என் சிறுவயது முதலே எத்தனையோ, எண்ணற்ற பெண் போராளி அக்காக்களைப் பார்த்திருக்கிறேன். தந்தையைப் பிரிந்த நிலையில் வாழ்ந்த என் அம்மாவுக்கு நம்பிக்கை ஊட்டவும் வழிகாட்டவும் எத்தனையோ பெண் போராளிகள் வீட்டுக்கு வருவார்கள். அவர்களை எல்லாம் உடன் பிறந்த அக்காக்களாக அழைத்து வளர்ந்த தலைமுறையினரில் ஒருவன் நான். பலர் இன்னமும் நாட்டில் இருக்கிறார்கள். இதில் ஒருவரை நினைவுகூரலாம் என நினைக்கிறேன். சகோதரி இசைப்பிரியா. என் சின்ன வயதிலேயே `ஒளிவீச்சு' என்ற இயக்கத்தின் வீடியோ சஞ்சிகையிலும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியிலும் பார்த்து வியந்த ஆளுமை அவர். அவருடன் எல்லாம் பணியாற்றுகிற காலம் ஒன்று வந்தது. தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் நானும் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இணைந்தேன். என் எழுத்து ஆர்வத்தைக் கண்டு 2006 ல் இயக்கம் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. அப்போது தமிழீழ தேசியத் தொலைக்காட்சி மகளிர் பிரிவுதான் நல்ல கனதியான படைப்புகளைத் தருவதாகப் பொறுப்பாளர் சுந்தர் அண்ணா சொன்னது இன்றும் நினைவிருக்கிறது. அந்தளவுக்கு வித்தியாசமான நிகழ்ச்சிகளைக் கடுமையான உழைப்போடு வழங்கினார்கள். அதில் ஒருவர்தான் இசைப்பிரியா. ஒருநாள் இசைப்பிரியா அவர்கள், என்னிடம் ஒரு கவிதை தரும்படியும் அதற்கு காட்சியமைக்க வேண்டும் என்றும் சொன்னவர் பின்பு, குரல் பதிவுக் கூடத்தில் காணும்போதெல்லாம் கேட்பார். கண்டதும் `தீபச்செல்வன் என்ன மாதிரி கவிதை தருவீங்க?’என்பார். பின்னர் ஒரு கவிதை கொடுத்தேன். அதற்கு அழகாகக் காட்சி அமைத்து ஒளிபரப்பியிருந்தார். அவர் செய்தி வாசிப்பார். ஒளிப்பதிவு செய்வார். நிகழ்ச்சிக்குக் குரல் கொடுப்பார். படத்தொகுப்பு செய்வார். பிரதிகள் எழுவார். படங்களில் நடிப்பார். நடனம் செய்வார். இப்படி எல்லாத் துறைகளிலும் மிளிர்ந்தவர் இசைப்பிரியா. ஊடகத்துறையில் இருந்த பெண் போராளிகள் குண்டு மழை நடுவில் நின்று ஒளிப்பதிவுக் கருவியுடன் நின்று பணியாற்றியவர்கள். இதைப்போலவே மருத்துவத்துறை, எழுத்துத் துறை, அரசியல்துறை, போர்த்துறை என்று எல்லாப் பகுதிகளிலும் பல சாதனைகள் இருந்த காலம் அது. பல ஆளுமைகள் இருந்த காலம். 

இசைப்பிரியா கொல்லப்பட்டபோது நான் எழுதிய கவிதை,

இசைப்பிரியா

 
உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்

நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து 
எடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சகோதரியே! உன்னை உரித்து 
சிதைத்தவர்களின் கைளிலிருந்து
எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது.

கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு
என்ன நேர்ந்திருக்குமென்று
தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு
இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு
உன்னைச் சிதைத்திருக்கிற புகைப்படம் 
எண்ணிக்கையற்ற முனைகளில்
நடந்த கதைகளைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

உன்னைச் சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்
யார் உன்னைத் தின்றார்கள் என்பதையும்
உனது தொலைக்காட்சியில்
நீயே செய்தியாக வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நீ நடித்த பாடல்களும் படங்களும்
ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கிற அலைவரிசையில்
உனது பாதிப்படம் ஒரு மூலையில்
பார்க்கப் பொறுக்க முடியாத
கோலமாக தொங்குகிறது. 

அதே படைகளினால் கவலிடப்பட்ட
நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது
தாயைப்போலவே ஒருத்தி
தன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.
ஆண்குறிகளை வளர்த்து
இரத்தத்தைப் படையலிட்டிருக்கிற 
படைகளின் யுத்த முனைகளில்
உன் சீருடைகளை
கழற்றி எறிந்திருக்கிறார்கள்.
உன் வீரத்தைக் கரைத்துவிட்டார்கள்
தொலைந்துபோன உன் துப்பாக்கி 
படைகளின் கையிலிருக்கிறது

முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே
நீ சரணடைந்திருக்கிறாய்.
துப்பாக்கிகளும் ஆண்குறிகளும் 
ஒரே மாதிரியாய் 
வாயைப் பிளந்து உன்னைத் தின்று போட்டிருக்கிறது.

முற்றத்தில் தெருவில் வயல்களில்
கண்ணிவெடிகளுக்குக் கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்
சீருடைகள் முதலான உடைகளும்
இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்
மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.
என்னிடம் வாங்கிச் சென்ற 
கவிதையை எங்குப் போட்டிருப்பாய்?

இசைப்பிரியாவுக்கு. ( 25.12.2009 )

நன்றி: ஓவியம்: ஓவியர் புகழேந்தி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement