ரம்ஜான் கிஃப்டாக மசூதி... அமீரகத்தில் இன்ப அதிர்ச்சி அளித்த கிறிஸ்தவ தொழிலதிபர்!

முஸ்லிம் தொழிலாளர்களுக்கு ரம்ஜான் கிஃப்டாக மசூதி கட்டிக் கொடுத்த கிறிஸ்தவ தொழிலதிபர்!

ரம்ஜான் கிஃப்டாக மசூதி... அமீரகத்தில் இன்ப அதிர்ச்சி அளித்த கிறிஸ்தவ தொழிலதிபர்!

மீரகத்தில் லட்சக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொத்தனார், எலெக்ட்ரீஷியன் போன்ற வேலைகளில்தான் இவர்கள் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு குறைந்த சம்பளமே கிடைக்கும். வாயைக்கட்டி வயிற்றைக் கட்டிதான் எஞ்சிய பணத்தை வீட்டுக்கு அனுப்புவார்கள். அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரமும் மிக மோசமானது. ஒரே அறையில் 10 முதல் 12 பேர் தங்கி, உண்டு உறங்குவார்கள்.  நோன்பு காலத்தில், அரசாங்கமே இலவசமாக இஃப்தார் விருந்துகளை இந்தத் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்வதுண்டு. 

மசூதி கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர்

இந்தத் தொழிலாளர்களுக்கு மசூதிகளில் தொழுகை செய்வதற்கும், பெரும்பாலும் இடம் கிடைக்காது. பல கிலோமீட்டர் தொலைவு செல்லவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். அமீரகத்தில் உள்ள Fujairah என்ற நகரத்தில், பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழுகைக்காக பல கிலோமீட்டர் சென்று வந்துள்ளனர். ஒருமுறை சென்று வர, 20 திர்ஹாம் (இந்திய பணத்தில் ரூ.400) வரை செலவழித்துள்ளனர். இதை கேள்விப்பட்ட இந்திய தொழிலதிபர் ஒருவர், ஏழை இஸ்லாமிய தொழிலாளர்களுக்காக தன் சொந்தப் பணத்தில் மசூதி ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது எனக் கேட்கிறீர்களா... மசூதியைக் கட்டிக் கொடுத்தவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் சிறப்புச் செய்தி.

கேரள மாநிலம் காயங்குளத்தைச் சேர்ந்த ஷாஜி செரியன், வளைகுடாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருகிறார். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இவர்,  30 ஆண்டுகளுக்கு முன் அமீரகத்துக்குச் சென்றவர். கடுமையாக உழைத்து, இப்போது பல கோடிகளுக்கு அதிபதி.  Fujairah நகரத்தில் தொழிலாளர்களின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட ஷாஜி, அவர்களுக்காக இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் செலவில் அழகிய மசூதியைக் கட்டத் தொடங்கினார். கட்டுமானப் பணிகள் ஒரு வருடத்துக்கு முன் தொடங்கின. தன் சொந்த வீட்டைக் கட்டுவதுபோல மசூதியைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கினார் ஷாஜி. தற்போது அழகுற எழுந்துள்ள மசூதியில் ஒரே சமயத்தில் 950 பேர் வரை தொழுகையில் ஈடுபட முடியும்.

கிறிஸ்தவர் ஒருவர் மசூதி கட்டுவதை அறிந்த உள்ளுர் அதிகாரிகள், மசூதியின் கட்டுமானப் பணிகளைப் பார்த்து வியந்துபோனார்கள். மசூதிக்குத் தேவையான மின்சார, குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தந்தனர்; மசூதி கட்டுமானத்துக்கான அனைத்துப் பணிகளும் தங்கு தடையின்றி கிடைக்க உதவிகரமாகவும் இருந்தனர். அதிகாரிகளிடத்தில் இருந்து எந்த உதவியும் எதிர்பாராத ஷாஜி, அவர்களுக்கு நெஞ்சார நன்றி தெரிவித்தார். ஷாஜியின் உன்னதமான நோக்கத்தை அறிந்த உள்ளூர் அரேபியர்களும் நிதியுதவி செய்ய முன்வந்தனர். அவர்கள் அளித்த நன்கொடைகளை ஷாஜி அன்புடன் மறுத்து, தன் சொந்த பணத்திலேயே மசூதியை எழுப்பியுள்ளார். 

ஷாஜி கூறுகையில், ``சொற்ப சம்பளமே வாங்கும் தொழிலாளர்கள் காசு செலவழித்து தொழுகைக்குச் செல்வதைப் பார்த்தேன். அருகில் மசூதி இருந்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்களே என என் உள்மனம் சொன்னது. என் நோக்கத்தைப் புரிந்துகொண்ட பலரும் மசூதி கட்டுமானத்துக்கான கல், செங்கல், பெயின்ட் போன்றவற்றை வாங்கித் தர முன்வந்தனர். ஆனால், என் சொந்த செலவில் இந்த மசூதியைக் கட்டவே நான் விரும்பினேன். அதனால், நன்கொடைகளை ஏற்கவில்லை. மதம், இனம், ஜாதி அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லா மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே என் ஆசை'' என்கிறார். 

அமீரகத்தில் ஏற்கெனவே கிறிஸ்தவ ஆலயம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார் ஷாஜி. புதியதாக கட்டப்பட்ட மசூதிக்கு, இயேசு கிறிஸ்துவின் தாய் மரியத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமீரகத்தில் இந்த மசூதியை மக்கள் பார்க்கின்றனர். ஏழைத் தொழிலாளர்களுக்கு ஷாஜியால் வழங்கப்பட்ட ரம்ஜான் கிஃப்ட்... இந்த மரியம் மசூதி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!