வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (19/05/2018)

கடைசி தொடர்பு:13:10 (19/05/2018)

இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்..! லண்டனில் கோலாகலம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் திருமணம் இன்று மதியம் லண்டன் வின்ட்சார் கோட்டையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.  

இங்கிலாந்து இளவரசர்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 33). இவர் அமெரிக்க நடிகை மேகன் மார்கிலை (வயது 36) காதலித்து வந்தார். அவர்களின் திருமணத்துக்கு, இளவரசர் சார்லசின் தாயார் ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது. 

இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு மேற்கே பெர்க்‌ஷயரில் அமைந்து உள்ள வின்ட்சார் கோட்டையில், 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் இளவரசர் ஹாரி-மேகன் திருமணம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்த மண விழாவை கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி நடத்தி வைக்கிறார்.

இந்த மணவிழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதற்காக 11.20 மணிக்கு ராணி குடும்பத்தினர் தேவாலயத்துக்குள் வருவார்கள். அதைத்தொடர்ந்து திருமண ஆராதனை நடைபெறும். இந்த தேவாலயத்தினுள் 800 பேர் அமரும் வசதி உள்ளது. சுமார் 600 பேருக்கு அழைப்பிதழ் தரப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த திருமண விழாவையொட்டி வின்ட்சார் கோட்டையின் மீது இன்று விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும், மணமக்கள் கேசில் ஹில், ஹை வீதி, ஷீட் வீதி, கிங்ஸ் சாலை, ஆல்பர்ட் சாலை, லாங்க் வாக் வழியாக ஊர்வலம் சென்று, பின்னர் வின்ட்சார் கோட்டைக்கு திரும்புவார்கள்.

அதைத்தொடர்ந்து அங்கு செயின்ட் ஜார்ஜ் அரங்கத்தில் வரவேற்பு நடக்கிறது. மணமக்கள் கேக் வெட்டுவார்கள். லண்டன் வயலட் பேக்கரி, பிரத்யேக கேக்கை தயாரித்து வழங்குகிறது. இந்த மணவிழா தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.