வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (28/05/2018)

கடைசி தொடர்பு:21:46 (28/05/2018)

`ஸ்லீப்பிங் லயன்’- ஏலத்துக்கு வரும் உலகின் பெரிய நன்னீர் முத்து!

நெதர்லாந்தில் உள்ள உலகிலேயே மிகப் பெரிய நன்னீர் முத்தான `ஸ்லீப்பிங் லயன்’ தற்போது ஏலத்தில் விடப்பட உள்ளது.

முத்து

மண் துகள்கள், பூச்சிகள் போன்றவை சிப்பியினுள் சென்றால் அதன் உறுத்தலைக் கட்டுப்படுத்த சிப்பி சுரக்கும் ஒருவகை பொருள் பூச்சிகளின்  மேல் மூடிக்கொள்கிறது. இது சிப்பி இறந்த பின் முத்தாக மாறி விலை மதிப்பில்லாத பொருளாக விற்கப்படுகிறது. இதே போன்று நன்னீரில் வாழும் சிப்பிகளிலும் முத்து மிக அரிதாகவே உருவாகும். 

`ஸ்லீப்பிங் லயன்’ என அழைக்கப்படும் உலகின் மிகப் பெரிய நன்னீர் முத்து நெதர்லாந்தில் உள்ளது. இது சிங்கம் தூங்கும் போது இருக்கும்  வடிவமைப்பைப் பெற்றுள்ளதால் இந்தப் பெயர் பெற்றுள்ளது. இதன் எடை 120 கிராம், உயரம் 2.7 இன்ச். இதன் மதிப்பு சுமார் 6,32,000 டாலர்கள் ஆகும். 300 ஆண்டுகள் பழைமையான இந்த முத்து சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. 1700 முதல் 1760 வரையில் உள்ள காலகட்டங்களில் டச்சுக்காரர்களால் சீனாவிலிருந்து ஐரோப்பா கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு நிறைய நகை வியாபாரிகளிடம் கைமாறிய இந்த முத்து 1979-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் பேர்ல் சொசைட்டியிடம் ( Amsterdam Pearl Society) வந்தது. அன்றிலிருந்து தற்போது வரை இந்த முத்து அங்கேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது இதை பொதுமக்களிடம் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள வென்டெஹூயிஸ் ஏல இல்லத்தில் இதற்கான ஏலம் நடைபெற உள்ளது.