நாடு திரும்பிய ரோஹிங்கியா அகதிகளைச் சிறைப்படுத்திய மியான்மர் அரசு..!

வங்கதேசத்திலிருந்து 58 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் மியான்மர் திரும்பியுள்ளதாக, மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. நாடு திரும்பும் நடைமுறைகளை இந்த அகதிகள் பின்பற்றாத காரணத்தால், இவர்கள் அனைவரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மியான்மர்

கோப்புப்படம்

இது தொடர்பாக, மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சன் சூகி அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், “நாடு திரும்பிய அவர்களுக்கு மன்னிப்பளித்து, மீள் குடியேற்றத்திற்கு அனுமதிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் வரை அவர்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம், அவர்கள் தொடர்பான எந்த விவரங்களையும் மியான்மர் அரசு வெளியிடவில்லை. வங்கதேசத்தின் அகதிகள் நிவாரணம் மற்றும் மீள் குடியேற்ற ஆணையர் முகமது அபு கலாம், “ரோஹிங்கியா அகதிகள் முகாம்களிலிருந்து தங்களுடைய ஏற்பாட்டிலேயே வெளியேறிய சம்பவங்கள்குறித்து நாங்கள் எதுவும் கேள்விப்படவில்லை” எனக் கூறியிருக்கிறார். 

கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து, சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். வங்கதேசம் மட்டுமல்லாது, பாதிப்படைந்த ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்துவந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!