``இந்த பீச்சுக்கு 4 மாசம் லீவு..!” - நிஜமாகவே கடற்கரையை மூடி வைக்கிறது தாய்லாந்து | Thailand government decided to stop tourist into maya beach for four months

வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (02/06/2018)

கடைசி தொடர்பு:19:06 (04/06/2018)

``இந்த பீச்சுக்கு 4 மாசம் லீவு..!” - நிஜமாகவே கடற்கரையை மூடி வைக்கிறது தாய்லாந்து

இக்கடற்கரைக்கு ஒரு வருடத்துக்கு 20 முதல் 30 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வரை வந்து செல்கின்றனர். தொடற்பயன்பாட்டில் இருப்பதால் இவ்விடத்தின் அழகு சற்று சீர்குலைந்து காணப்படுகிறது. மேலும் என்ஜின் படகுகளின் பயன்பாடு அதிகமாக உள்ளதால் கடலில் உள்ள உயிரினங்களும் பாதிப்படைகிறது

``இந்த பீச்சுக்கு 4 மாசம் லீவு..!” - நிஜமாகவே கடற்கரையை மூடி வைக்கிறது தாய்லாந்து

அளவுக்கு அதிகமாகச் சுற்றுலாப் பயணிகள் வருவதால் தங்கள் நாட்டின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான `பீ-பீ மாயா' கடற்கரையை மக்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக தாய்லாந்து நாட்டின் தேசியச் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

2000-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் `தி பீச் (The Beach). ஆஸ்கர் நாயகன் லியார்னடோ டீ காப்ரியோ கதாநாயகனாக நடித்த இப்படம் இந்தக் கடற்கரையிலேயே படமாக்கப்பட்டது. தமிழில் ஏழாம் அறிவு (முன் அந்திச் சாலையில் பாடல்) உட்படப் பல திரைப்படங்கள் இங்கே படமாக்கப்பட்டிருக்கின்றன. `தி பீச்’ திரைப்படத்துக்குப் பிறகு உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்தக் கடற்கரை, தனது இயற்கை எழிலால் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது. ஆனால், சுற்றுலாவுக்கு வரும் மக்கள் கடற்கரையின் அழகைக் கெடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பெருகிவருவதால் இந்தத் தவிர்க்க முடியாத முடிவை எடுக்கும் நிலையில் உள்ளதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை கூறியுள்ளது.

Maya beach

இதுகுறித்துப் பேசிய அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஆலோசகர் தம்ராங்னவசாவத், ``உலகில் மிகவும் இயற்கையான அழகைக் கொண்ட நாடுகளில் மிக முக்கிய நாடாக தாய்லாந்து உள்ளது. எனவே, நாட்டின் வளர்ச்சிக்கும் வருவாய்க்கும் தூணாக சுற்றுலாத்துறை இருந்து வருகிறது. எங்கள் நாட்டின் மிகவும் பிரபலமான தளங்களில் `பீ-பீ மாயா' கடற்கரையும் ஒன்று. இக்கடற்கரைக்கு ஒரு வருடத்துக்கு 20 முதல் 30 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வரை வந்து செல்கின்றனர். தொடற்பயன்பாட்டில் இருப்பதால் இவ்விடத்தின் அழகு சற்று சீர்குலைந்து காணப்படுகிறது. மேலும், என்ஜின் படகுகளின் பயன்பாடு அதிகமாக உள்ளதால் கடலில் உள்ள உயிரினங்களும் பாதிப்படைகிறது. இவை அனைத்துக்கும் தீர்வு காணும் விதமாக, ஜூன் 1-ம் தேதி முதல் செப்டெம்பர் 29-ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் செப்டம்பர் 30-ல் திறக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.
 
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற தீவுகளின் வருவாய் பெரும்பாலும் அந்நாடுகளின் சுற்றுலாத்துறையை நம்பியே இருக்கின்றது. 1990-ன் தகவல்படி தாய்லாந்து நாட்டின் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 53 லட்சமாக இருந்துள்ளது. அதே எண்ணிக்கை 2017-ம் ஆண்டு 3.5 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஏற்றதால் பொருளாதார வளர்ச்சி என்ற நன்மையுடன் இயற்கைச் சீர்கேடு என்ற தீமையையும் அந்த நாடு சுமந்து செல்கின்றது. 

சுற்றுலாத்தலங்களைப் பயன்படுத்த தடைவிதிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது உலகில் இதுவே முதல் முறை அல்ல. உலகின் பல சுற்றுலாத்தலங்கள், மக்களின் மோசமான நடவடிக்கைகளால் அசுத்தம் செய்யப்பட்டு பின்னர் பயன்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்னமும் பல இடங்கள் சுற்றுலாவாசிகளால் அதிகமாகப் பாதிப்படைந்திருக்கின்றன. அவற்றின் முக்கியமான மூன்று இடங்கள்:


வெனிஸ், இத்தாலி:
உச்சபட்ச சீசன் நேரத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் வரை வந்து செல்வதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு முன்பு போல் தற்போது இந்நகரம் இல்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. 


பிரமிட், எகிப்து:

எகிப்தில் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடங்களுள் மிக முதன்மையானது பிரமிட். ஆனால், பார்வையாளர்கள் அதிகமாக வந்து அங்குள்ள பிரமிட் கட்டடத்தின் வடிவங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். 


மடகாஸ்கர் தீவு:

தனது கண்கவர் இயற்கை அழகால் உலகின் பல்வேறு இடத்திலுள்ள மக்களைக் கவர்ந்துள்ள இத்தீவு, அந்த மக்களாலேயே தனது அழகையும் இழந்து வருகிறது என்பதே சோகம்கலந்த உண்மையாக உள்ளது.

`மக்கள் வரத்துக் குறைவாக உள்ளது' என்ற நிலை சென்று' ஐயோ இவ்வளவு மக்களா?' என்று என்னும் நிலைக்கு உலகின் பல இடங்கள் தள்ளப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையின் மூலம், உள்ளூர் மக்கள் பல பேருக்கு வேலை வாய்ப்புகளும் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் நன்மை ஏற்படும் நிலை இருப்பதால், சுற்றுலா செல்லும் மக்கள் இதை மனதில் வைத்துக்கொண்டு, செல்லும் இடத்தை இயன்ற அளவு சுத்தமாகவும் இயற்கைச் சீர்கேடு ஏற்படுத்தாத வகையிலும் நடந்துகொண்டால், `இந்தப் பூமி செழிக்கும்; அந்த நாடும் செழிக்கும்!'


டிரெண்டிங் @ விகடன்