கலிஃபோர்னியா ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவழி இளைஞர்! | California's Youngest Governor Candidate who is in indian origin

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (02/06/2018)

கடைசி தொடர்பு:17:20 (02/06/2018)

கலிஃபோர்னியா ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவழி இளைஞர்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத் தேர்தலில் போட்டியிடுகிறார் அமெரிக்க வாழ் இளம் இந்தியர் சுபம் கோயல். 

கலிபோர்னியா மாகாணத் தேர்தலில் போட்டியிடும் சுபம் கோயல்

இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரான சுபம் கோயல் கலிஃபோர்னியாவில் மென் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவரின், பெற்றோர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பூர்வீகமாகப் பெற்றவர்கள். அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் வசித்துவருகின்றனர். இந்நிலையில், கலிஃபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் ஜெர்ரி பிரவுனின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, அப்பதவிக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுகிறது. இப்பதவிக்கு, 27 பேர் போட்டியிடுகின்றனர். ஆனால், இவர்கள் மத்தியில் சுபம் கோயல் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துவருகிறார்.

அமெரிக்கா, லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகத் தேர்தல் பிரசாரம் செய்வது வழக்கம். ஆனால், சுபம் கோயல் இந்தத் தேர்தல் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. இந்திய பாணியில் அங்கு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதுவே, மற்ற தேர்தல் போட்டியாளர்கள் மத்தியில் சுபம் கோயலை வேறுபடுத்திக் காட்டியுள்ளது. 

இதுகுறித்து சுபம் கோயல் கூறுகையில், `கலிஃபோர்னியா அரசாங்கத்தில் பணியாற்றும் சில பயனற்ற அரசியல்வாதிகளால் கலிஃபோர்னிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைக் காண மிகவும் கொடுமையாக உள்ளது. இதனால்தான், இந்த ஆளுநர் தேர்தலில் போட்டியிடுகிறேன். இத்தேர்தலில் வெற்றி பெற்று கலிஃபோர்னியாவில் மாற்றங்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளேன். மாற்றங்களை உருவாக்கக் குடும்ப அரசியல் பின்னணியிலிருந்து வரவேண்டிய அவசியம் இல்லை. தேர்தலில் வெற்று பெற்று ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் லஞ்சத்தை ஒழிப்பதுதான் எனது முதல் பணியாக இருக்கும்' எனக் கூறினார்.