வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (02/06/2018)

கடைசி தொடர்பு:18:40 (02/06/2018)

`உங்கள் நடவடிக்கை பாவகரமானது’ - சவுதி இளவரசருக்கு மிரட்டல் விடுத்த அல்-கொய்தா

``சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் நடவடிக்கைகள் பாவகரமாக உள்ளது'' என்று அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது. 

முகம்மது பின் சல்மான்

சவுதி அரேபியாவின் இளவரசராக முகமது பின் சல்மான் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் பட்டம் சூட்டப்பட்டார். அவர் இளவரசராகப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அந்நாட்டில் அறிமுகப்படுத்தினார். அந்நாட்டில் முதன்முறையாக திரையரங்கங்களை திறந்துவைத்தார். மேலும் நிறைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதியளித்தார். பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு அந்நாட்டில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார்.

இந்தத் திட்டங்கள் எல்லாம் பாவகரமான திட்டங்கள் என்று கூறி சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து அல்-கொய்தா விடுத்துள்ள எச்சரிக்கையில், `முகமது பின் சல்மான் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நாத்திகம் மற்றும் மதச்சார்பற்றவர்களைப் பின்தொடர்கிறார். அதனால், சவுதியில் ஊழல் மற்றும் அறத்தை சிதைக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் சவுதியின் ஜெட்டா பகுதியில் குத்துச்சண்டைப் போட்டி(WWE) நடைபெற்றது. அந்தப் போட்டியின்போது ஆண்கள் பெண்கள் குழுமியிருந்த அந்தப் பகுதியில் போட்டியாளர்கள் அறைகுறை ஆடையுடன் உடலைக் காண்பித்துக்கொண்டு இருந்தார்கள். அதில், நிறைய பேர் சிலுவை அணிந்து இருந்தனர். இது கண்டனத்துக்குரியது' என்று குறிப்பிட்டுள்ளது.