வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (03/06/2018)

கடைசி தொடர்பு:18:29 (03/06/2018)

’CO2 அளவை நீங்க குறைக்க மாட்டீங்க... நானே செய்றேன்!’ - இயற்கை செய்யும் அதிசயம்

பூமி தோன்றி CO2 உமிழ்வை அளக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவிற்கு CO2 உமிழ்வு அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு 400ppm அளவைத் தாண்டிய கார்பன் டை ஆக்ஸைடு தற்போது வளிமண்டலத்தில் 410ppm ஐத் தாண்டி எகிறிக் கொண்டிருக்கிறது.

’CO2 அளவை நீங்க குறைக்க மாட்டீங்க... நானே செய்றேன்!’ - இயற்கை செய்யும் அதிசயம்

காலநிலை மாற்றம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பயம், மிகப்பெரிய சவால் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். வருங்கால தலைமுறைகளுக்கு பூமியை எப்படி கையளிக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு காலநிலை மாற்றத்தின் விளைவுகள்தான் பதில் சொல்கின்றன. பசுமை இல்ல வாயுக்களின் விளைவால் நம் மொத்த பூமியும் சூடாகிக் கொண்டிருக்கிறது. புவி வெப்பமயமாதலின் விளைவுகளாக கடல்நீர் மட்டம் உயர்வது, சின்ன சின்னத் தீவுகள் மூழ்குவது என பலவற்றை செய்திகளில் படித்திருப்போம். பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது கார்பன் டை ஆக்ஸைடு (CO2). பூமியில் மனிதனால் வெளியேற்றப்படும் வாயுக்களில் அதன் அளவுதான் அதிகம். அதனைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் அனைத்து உலக நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. தொழில்துறையைப் பொறுத்தவரையில் வெளியேறும் முக்கிய வாயுவும் இதுதான். இப்படி பல்வேறு விளைவுகளும் நம்மை பயமுறுத்திக் கொண்டே இருக்கும் நிலையில் இயற்கையே சில நல்ல மாற்றங்களை மனித இனத்திற்குக் கொடுக்கிறது. கடலின் மேற்பரப்பில் இருக்கும் ஒரு அடுக்கானது இயற்கையாகவே கார்பன் டை ஆக்ஸைடு அளவைக் குறைக்கிறது. 

உலகம் முழுவதும் மனிதனால் உருவாக்கப்படுகிற கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தில் கால் பகுதியைக் கடல்கள் உள்ளிழுத்துக் கொள்கின்றன. காரபன் டை ஆக்ஸைடின் சுழற்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கால்பகுதியை கடல் உள்ளிழுத்தாலும் CO2 அளவு குறைந்தபாடில்லை என புலம்பிக் கொண்டுதானிருக்கிறோம். அந்த அளவிற்கு கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் ஓசோன் படலத்தையே மூச்சு முட்ட வைத்துக் கொண்டிருக்கிறது. பூமி தோன்றி CO2 உமிழ்வை அளக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவிற்கு CO2 உமிழ்வு அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு 400 ppm அளவைத் தாண்டிய CO2 தற்போது வளிமண்டலத்தில் 410 ppm ஐத் தாண்டி எகிறிக் கொண்டிருக்கிறது. 

கடல், கார்பன் டை ஆக்ஸைடு CO2

இந்நிலையில் கடலின் மேற்பரப்பில் கண்ணுக்குத் தெரியாத அடுக்கு ஒன்று கார்பன் டை ஆக்ஸைடு பரிமாற்றத்தை 50% வரை குறைக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வளிமண்டலத்திற்கும் கடல்களுக்கும் இடையே கார்பன் டை ஆக்ஸைடு பரிமாற்றம் இயற்கையாக நிகழக்கூடிய ஒன்றுதான். ஹெராயிட்-வாட்( Heriot-Watt university), நியூகேஸில்( Newcastle university) மற்றும் எக்ஸிடெர் பல்கலைக்கழகங்களைச்(Exeter university) சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் திங்களன்று நேச்சர் ஜியோசயின்ஸ்(Nature Geoscience) இதழில் இந்தக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளனர். எதிர்கால சூழலைக் கணிப்பதற்கான முக்கிய தாக்கங்களை இந்தக் கண்டுபிடிப்புகள் கொண்டுள்ளன. 

கடல்களில் ஏற்படக்கூடிய பெரிய கொந்தளிப்புகள் வளிமண்டலத்திற்கும் கடல்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய வாயுப் பரிமாற்றத்தை அதிகரிக்கிறது. உயிரியல் சர்ஃபக்டன்ட்ஸ் ( biological surfactants) என அந்த அடுக்கை அழைக்கிறார்கள். வெவ்வேறு வகையான கடல்நீரின் அடுக்குகளிலிருந்து உயிரியல் சர்ஃபக்டன்ட்ஸ் ( biological surfactants) அடுக்கின் விளைவைக் கணக்கிட ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர் ஆய்வாளர்கள். அதன் மூலம் சர்ஃபக்டன்ட்ஸ் அடுக்கு கார்பன் டை ஆக்ஸைடின் பரிமாற்றத்தை 50 சதவிகிதம் வரை குறைக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர். ஹெராயிட்-வாட் பல்கலைக்கழகத்தைச்(( Heriot-Watt university) சார்ந்த டாக்டர் ரியான் பெரேரா( Dr Ryan Pereira), "கடலின் மேற்பரப்பு வெப்பநிலை உயரும்போது சர்ஃபக்டன்ட்ஸ் இன்னும் வேலை செய்யலாம். அதன் மூலம்  CO2 பரிமாற்றததைக் இன்னும் அதிகமாகக் குறைக்கலாம்" என்கிறார். அட்லாண்டிக் கடலின் 13 இடங்களில் உயிரியல் சர்ஃபக்டன்ட்ஸ் அடுக்கு  CO2 பரிமாற்றத்தைப் பெருமளவில் குறைத்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். 

கார்பன் டை ஆக்ஸைடு

சர்ஃபக்டன்ட்ஸ் அடுக்கானது கடலின் மேற்பரப்பில் இருந்தாலும் நுரை போலவோ எண்ணெய்ப் படலம் போலவோ கண்களால் காண முடியது. ஏன் செயற்கைக் கோளின் மூலம் கண்டறிவதும் கடினம். அட்லாண்டிக் கடற்பகுதியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இதனை தற்போது கண்டறிந்துள்ளனர். இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள் நமது பழைய ஆராய்ச்சி முடிவுகளின் மீது சில கேள்விகளை எழுப்புகிறது. உதாரணமாகக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதால் அதில் உள்ள உயிரினங்கள் இறப்பது, கடலின் நீர்மட்டம் உயருவது போன்ற விளைவுகள் ஏற்படுகின்றது என்ச் சொல்கின்றனர். முக்கியமாகப் புவி வெப்பமயமாதல்தான் கடலின் மேற்பரப்பு வெப்ப உயர்வுக்குக் காரணமாக இருக்கிறது. இந்த ஆய்வு முடிவுகள் எல்லாம் கேள்விக்குறியாகிறது. 

எக்ஸிடெர் பல்கலைக்கழத்தைச்( Exeter university) சேர்ந்த டாக்டர் இயன் ஆஷ்டன் (Dr Ian Ashton), இந்த ஆராய்ச்சி செயற்கைக்கோள்களின் தரவுகள் மூலம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் கடல்களும் வளிமண்டலத்திற்குமான வாயு பரிமாற்றத்தில் சர்ஃபக்டன்ட்ஸ் அடுக்கின் விளைவுகளை இன்னும் ஆராய வேண்டும். உலகம் முழுவதும் இதைச் செய்யவேண்டும் என்கிறார்.  CO2 அளவு உயருகிறது என பதறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தச் செய்தி மனிதக் குலத்திற்கு மகிழ்ச்சியானது. இதையும் இயற்கைதான் நமக்குக் கொடுத்திருக்கிறது. வழக்கம்போல் அதனைச் சீரழிக்காமல் இன்னும் என்னவெல்லாம் செய்து  CO2 அளவைக் குறைக்க முடியுமோ அதைச் செய்வோம். புவி வெப்பமயமாதலையும் காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த இயற்கைக் கொடுத்திருக்கும் சந்தர்ப்பம் இது.


டிரெண்டிங் @ விகடன்