திமிங்கிலத்தின் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகள் - அதிர்ச்சியடைந்த மருத்துவக் குழு!

தாய்லாந்து கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்து எட்டு கிலோ எடையிலான 80 பிளாஸ்டிக் பைகளை மருத்துவக் குழுவினர் எடுத்துள்ளனர். 

திமிங்கலம்

தாய்லாந்தின் தென் சோங்லா மாகாணத்தில் உள்ள கடற்கரையில், உடல்நலம் பாதிக்கப்பட்டநிலையில் திமிங்கலம் ஒன்று கடந்த திங்கள்கிழமை கரை ஒதுங்கியது. இதுகுறித்து, அங்கிருந்த மக்கள் கால்நடை மருத்துவக் குழுவுக்குத் தகவல் தெரிவித்தனர்.  அதன்பின், அப்பகுதிக்கு விரைந்த குழுவினர், திமிங்கிலத்தை மீட்டெடுத்து சிகிச்சை அளித்துவந்தனர். தொடர்ந்து 5 நாள்கள் திமிங்கிலத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, ஐந்து பிளாஸ்டிக் பைகளை அது கக்கியது. பிளாஸ்டிக் பைகளைக் கக்கிய திமிங்கிலம், சற்று நேரத்தில் உயிரிழந்தது. அதைக் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் 5 நாள்களாக எடுத்த முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து, திமிங்கிலத்தை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. உயிரிழந்த அந்த திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து சுமார் எட்டு கிலோ எடை கொண்ட 80 பிளாஸ்ட்டிக் பைகளை எடுத்தனர். பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதன் காரணமாக, உணவு உண்ண முடியாமல் திமிங்கிலம் அவதிப்பட்டுவந்தது தெரியவந்தது. கடல்களில் மிதக்கும் பிளாஸ்டிக் பைகளை உட்கொண்டதுதான் திமிங்கிலத்தின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது, இயற்கை ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!