போருக்கு எதிராக நடைபெற்ற மதகுரு மாநாட்டில் தற்கொலைப்படைத் தாக்குதல்! -14 பேர் பலி

காபூலில் உள்ள ஒரு பாலிடெக்னிக் பல்கலைகழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தற்கொலை

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் மதகுருக்களின் மாநாடு நடைபெற்றது. ஆஃப்கானிஸ்தானில் நடைபெறும் போர் மற்றும் தற்கொலைப்படைத் தாக்குதல்களுக்கு எதிராக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமார் இரண்டாயிரம் மதகுருக்கள் பங்கேற்றிருந்தனர்.  

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, தற்கொலைப்படைத் தாக்குதல் கும்பலைச் சேர்ந்த ஒருவர், தன் கால்களில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளார். இந்தத் தாக்குதலில், 4 பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் பிறகு சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இது தற்கொலைப்படைத் தாக்குதல்தான் என உறுதி செய்துள்ளனர். இந்தத் தாக்குதல், கூட்டம் முடிந்து அனைவரும் வெளியில் வரும்போது நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதில் தங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என தாலிபான் அமைப்பினர் மறுத்துள்ளனர். தாக்குதல் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. 

தாக்குதலுக்கு முன்னதாக, ஆஃப்கானிஸ்தானில் நடைபெறும் போர் சட்டவிரோதமானது மற்றும் ஷரியா சட்டத்தில் (இஸ்லாமிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அமைந்த மதச் சட்டம்) இதற்கு இடமில்லை" என்று கூட்டத்தில் மதகுருக்கள் பேசியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!