ஹேண்ட்பேக் டிரெண்ட்செட்டர் கேட் ஸ்பேட் தற்கொலை செய்துகொண்டது ஏன்?

பெண்களுக்கு ஹேண்ட்பேக்,  தங்களின் க்ளோனிங். தலை முதல் பாதம் வரை பராமரிக்கத் தேவையான அழகுசாதனப் பொருள்கள் முதல் அப்பப்போ கொரித்துக்கொள்ளும் ஸ்நாக்ஸ் ஐட்டம் வரை அத்தனையையும் 24 மணிநேரமும் தங்கள் கூடவே வைத்திருக்க உதவுவது ஹேண்ட்பேக். அப்படிப்பட்ட ஹேண்ட்பேக்கிற்கு புத்தம் புதிய வடிவம் கொடுத்து ஃபேஷன் டிசைனிங் உலகில் தனக்கென்று தனி இடம் பதித்த கேட் ஸ்பேட், நேற்று தூக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டார். பலரின் பிடித்தமான டிசைனரான இவரின் மறைவு, அமெரிக்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேட் ஸ்பேட்


டிசம்பர் 24,1962-ம் வருடம் பிறந்த இவரின் இயற்பெயர், 'கேத்தரின் நோயல் ப்ரோஸ்னான்'. அமெரிக்காவின் பிரபல பெண்கள் பத்திரிகையான Mademoiselle-ல் இணை ஆபரணப் பிரிவில் பணிபுரிந்ததே, இவரின் தொழில் வளர்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது. தன் கணவர் அண்டி ஸ்பேடுடன் இணைந்து 1993-ம் ஆண்டு விதவிதமான ஸ்டைலிஷ் ஹேண்ட்பேக்குகளை டிசைன் செய்து, 'ஸ்பேட்' எனும் பிராண்டைத் தொடங்கினார். இது, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ஹேண்ட்பேக் டிசைன் மற்றும் இதர இணைப் பொருள்களின் உற்பத்தியில் அசைக்க முடியாத தனி இடத்தைப் பெற்றார். ஃபேஷன் மீதுள்ள அதீத ஆர்வத்தினால், 2016-ம் ஆண்டு, தன் பார்ட்னருடன் இணைந்து Frances Valentine எனும் புதிய ஃபேஷன் பிராண்டையும் வெளியிட்டார்.

இதனிடையே, 55 வயதாகிய ஸ்பேட், திடிரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்ட சம்பவம், அவரின் குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 5-ம் நாள் காலை, நியூயார்க்கின் மான்ஹாட்டன் பகுதியிலுள்ள ஸ்பேடின் வீட்டுக்குச் சென்ற பணிப்பெண்ணால், ஸ்பேடின் மரணம் அறியப்பட்டது. பிறகு, விரைந்து வந்த போலீஸ் வீட்டை சோதனை செய்ததில், கேட் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அந்தக் கடிதத்தைப் பற்றி தகவல் தெரிவிக்க போலீஸ் மறுத்துவிட்டது. ``நாங்கள் கேட்டை மிகவும் நேசித்தோம். இப்போது, நாங்கள் அனைவரும் அவரில்லாமல் தவிக்கிறோம். எனவே, எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என்று அவரது குடும்பத்தார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

Kate and her Husband


"கேட், பை-போலார் டிஸார்டர் பிரச்னையால் ரொம்ப நாளாவே கஷ்டப்பட்டுட்டு இருந்தாள். தற்கொலை பண்ணிக்கணும்னு சொல்லிட்டே இருந்தா. அவளை சரியான முறையில பாத்துக்கிற அளவுக்கு அவகூட யாருமில்லன்னுதான் சொல்லணும். அவ, மற்றவர்களிடம் உதவின்னு எதுவுமே கேட்டதில்லை. எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே வெச்சிருப்பா. அவளுக்கு ஆறுதலா இருக்கிறது 'மது' மட்டும்தான்னு அவளே நெனச்சுட்டு இருந்தா. 2014-ம் ஆண்டு, மிகப் பெரிய காமெடி நடிகர் ராபின் வில்லியம்ஸின் தற்கொலை பத்தி ரொம்ப அக்கறை எடுத்துப் பேசிட்டே இருந்தா. இதுவே அவளோட டிப்ரெஷனை சீரியஸா கொண்டுபோயிருச்சு. நானும், கேட்டோட கணவர் அண்டியும், மெடிக்கல் ட்ரீட்மென்டுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தினோம். ஆனா, அவ எங்ககூட வர மறுத்துட்டா. கேட் மறைவு எங்களுக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு. ஆனா,  இது எதிர்பாராததல்ல" என்று கேட் ஸ்பேடின் மூத்த சகோதரி சஃபோ  பேட்டியளித்துள்ளார்.

புகழின் உச்சத்தில் இருந்த கேட், ஆழமான மனஉளைச்சலின் காரணமாக தற்கொலைசெய்துகொண்ட சம்பவம், திரைத்துறை கலைஞர்களை மிகவும் வேதனையடையவைத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!