`தீவிர மன உளைச்சல்!’ - தற்கொலை முடிவை நாடிய பிரபல செலிபிரட்டி செஃப் ஆண்டனி போர்டைன் #antonybourdain

அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் ஆண்டனி போர்டைன். இவர், தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து நேற்று பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். இவரின் தற்கொலை முடிவு ரசிகர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆண்டனி போர்டைன்

சி.என்.என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஃபுட் அன்ட் டிராவல் நிகழ்ச்சியின் மூலமாக ஆண்டனி போர்டைன் பிரபலமான செலிபிரிட்டியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். சிறந்த தொகுப்பாளராக மட்டுமல்லாமல், சமையல் கலைஞர், எழுத்தாளர், சின்னதிரை பிரபலம் எனப் பன்முகத்தன்மையுடன் செலிபிரிட்டியாக வலம் வந்தார். உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, சிறந்த உணவுகள் குறித்து, சி.என்.என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவந்தார். 

இந்நிலையில், பார்ட்ஸ் அன்நோன் எனும் சமையல் நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காகப் பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பர்க் நகருக்குச் சென்றிருந்தார். இந்தச் சூழலில், விடுதியில் தங்கி, படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், நேற்று விடுதி அறையிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, ஆண்டனி போர்டைன் தற்கொலை செய்துகொண்டதாகச் சி.என்.என் தொலைக்காட்சி தெரிவித்தது. 

இவரின் தற்கொலை செய்தி அமெரிக்கர்களை மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள ஆண்டனி போர்டைனின் தொலைக்காட்சி ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எனப் பிரபலங்கள் ஆண்டனி போர்டைன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். 

போர்டைன் தற்கொலை செய்துகொண்டதுக்கு காரணம், அவர் தீவிர மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனாலேயே போர்டைன் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், போர்டைன் தற்கொலை செய்துகொள்வதுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு அமெரிக்காவின் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர், கேட் ஸ்பேட் தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்து அமெரிக்க பிரபலங்கள் தற்கொலை செய்துகொண்டதால், அமெரிக்கர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!