`உலகம் இனி புதிய மாற்றத்தைக் காணும்’ - ட்ரம்ப் முன் அதிர்ந்த கிம் ஜாங் உன்

``இனி அணு ஆயுத சோதனை முற்றிலும் ஒழிக்கப்படும்’’ என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வட கொரியா

சிங்கப்பூரில் இன்று நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய இவர்களின் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை சுமார் 48 நிமிடங்கள் நடைபெற்றது. வடகொரியா தனியாகப் பிரிந்ததிலிருந்து வடகொரிய அதிபர் அமெரிக்க அதிபரைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். எனவே, இவர்களின் சந்திப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. 

நேருக்கு நேர் சந்திப்பைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் தங்களின் நாட்டுக் கொடிகளுக்கு முன்பு கைகுலுக்கி புகைப்படம் எடுத்தனர். பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் தங்களின் அதிகாரிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இதையடுத்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘வட கொரிய அதிபருடனான சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் மீண்டும் சந்திப்போம். இன்னும் பலமுறை சந்திக்க உள்ளோம். கிம் நிச்சயம் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவார் எனத் தெரிவித்தார். 

இவரைத்தொடர்ந்து பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ‘நாங்கள் கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. இனி உலகம் ஒரு புதிய மாற்றத்தைக் காணும். மேலும், இனி வடகொரியாவில் அணு ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்படும்” என அறிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!