`கிம் ஜாங் உன்-ஐ நம்புகிறேன்'‍- சிங்கப்பூரில் ட்ரம்ப் பெருமிதம் | It is a great day and one of the greatest moments in the history of the world said Donald Trump

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (12/06/2018)

கடைசி தொடர்பு:20:30 (12/06/2018)

`கிம் ஜாங் உன்-ஐ நம்புகிறேன்'‍- சிங்கப்பூரில் ட்ரம்ப் பெருமிதம்

சிங்கப்பூரில் வட கொரியா அதிபர் உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்துள்ளதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்

சிங்கப்பூரில் இன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 6:30 மணிக்குத் தொடங்கிய இவர்களின் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை சுமார் 48 நிமிடங்கள் நடைபெற்றது. வடகொரியா தனியாகப் பிரிந்ததிலிருந்து வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபரைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். எனவே, இவர்களின் சந்திப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கருதப்பட்டது. 

நேருக்கு நேர் சந்திப்பைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் தங்களின் நாட்டுத் கொடிகளுக்கு முன்பு கைகுலுக்கி புகைப்படம் எடுத்தனர். பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் தங்களின் அதிகாரிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப்  பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

அதன் பின் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ``நாங்கள் புதிய வரலாற்றைப் படைக்க தயாராக உள்ளோம். நாங்கள் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளோம். இது ஒரு சிறந்த நாள். உலக வரலாற்றில் இது ஒரு சிறந்த தருணம். யார் வேண்டுமானாலும் போர் செய்யலாம். ஆனால், தைரியமானவர்களால் மட்டுமே அமைதியைக் கொண்டு வர முடியும். கிம் ஜாங் உன் தன் நாட்டுக்காக ஒரு சிறந்த எதிர்காலத்தைத் தந்துள்ளார். நாங்கள் ஒரு விரிவான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். கிம் வடகொரியாவில் இறங்கிய உடனேயே ஒப்பந்தத்துக்கான வேலைகளைச் செய்ய தொடங்குவார் என நம்புகிறேன். இதற்கு முன்னாள் இருந்த அமெரிக்க அதிபர்கள் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியிருப்பார்கள் என தான் நம்பவில்லை என கிம் என்னிடம் கூறினார். நான் சரியான நேரத்தில் கிம்மை வெள்ளை மாளிகைக்கு அழைப்பேன். அவர் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்வார். அணு ஆயுதச் சோதனை நடத்தக் கூடாது என்ற தடை தொடரும். இந்தச் சந்திப்பு அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையே நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும். யார் டொனால்டு ட்ரம்பை எதிர்த்தார்களோ அவரே இன்று இதை மிகப் பெரிய சந்திப்பு எனக் கூறியுள்ளார். இன்று முதல் கொரிய தீபகற்பம் மீதான ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திவிடும்” எனக் கூறினார்.