அடுத்த உலகப்போர் தண்ணீருக்கானது... அமெரிக்கா முதலில் மோதப்போவது யாருடன்? | Water may be the reason for next world war between US and Canada

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (13/06/2018)

கடைசி தொடர்பு:12:03 (13/06/2018)

அடுத்த உலகப்போர் தண்ணீருக்கானது... அமெரிக்கா முதலில் மோதப்போவது யாருடன்?

வட அமெரிக்க கண்டத்தின் பெரிய நதிகளில் ஒன்று கொலராடோ (Colorado River) ஆறு. 2333 கிலோமீட்டர் தொலைவு நீளும் இந்த நதி "அமெரிக்காவின் நைல்" என்றே வர்ணிக்கப்படுகிறது.

20-ம் நூற்றாண்டில் நடந்த போர்களில் பெரும்பாலானவற்றுக்குக் காரணம் எண்ணெய் வளம். அதன் விளைவு எண்ணெய் வளம் கொட்டிக்கிடந்த நாடுகளின் தலைவர்கள் அமெரிக்கா விளையாடிய அரசியல் சதுரங்கத்தில் சிக்கிக்கொண்டார்கள். எண்ணெய் அரசியல், உலகின் மூன்றாம் நாடுகள் பலவற்றைத் தின்று கொழுக்க வளர்ந்த நாடுகளுக்கு வாய்ப்பளித்தது. அதைத் தற்போது தண்ணீர் செய்துகொண்டிருக்கிறது. நன்னீர் தட்டுப்பாடு உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சில நாள்களில் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் தனது நன்னீர் இருப்பு மொத்தத்தையும் இழக்கும் நிலையில் நின்றுகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணங்களும் சேரப்போகின்றன.

சுப்பீரியர் ஏரி

வட அமெரிக்க கண்டத்தின் பெரிய நதிகளில் ஒன்று கொலராடோ (Colorado River) ஆறு. 2333 கிலோமீட்டர் தொலைவு நீளும் இந்த நதி `அமெரிக்காவின் நைல்' என்றே வர்ணிக்கப்படுகிறது. அரிசோனா, வையோமிங், கொலராடோ, யூட்டாஹ், புது மெக்ஸிக்கோ, கலிஃபோர்னியா, நிவேடா ஆகிய அமெரிக்க மாகாணங்களுக்கும், வடகிழக்கு மெக்ஸிக்கோவுக்கும் நன்னீருக்கான மூலாதாரமாக இருக்கிறது. வடகிழக்கில் ராக்கி மலைத்தொடர்களில் (Rocky Mountains) இருக்கும் லா பொட்ரே பாஸ் ஏரியில் (La Poudre Pass Lake) தொடங்கி கான்பி (Ganby Lake) ஏரி வழியாக இயற்கையாகக் கீழ்நிலை நீரோட்டப் போக்கில் போவெல் (Lake Powell) ஏரியை வந்தடையும். அந்தப் பாதையில் பல்வேறு குழாய்கள் மூலம் குடியிருப்புகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் நீர் உறிஞ்சப்படுவதால் போவெல் ஏரிக்கு முன்னதாக இருக்கும் க்ளென்வுட் ஸ்பிரிங் (Glenwood Spring) என்ற பகுதியை அடையும்போதே அதன் வேகம் குறைந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து சுமார் 300 மைல் நீளமுள்ள போவெல் ஏரியைக் கடக்கும்போதே அதன் வேகம் மேலும் குறைந்துவிடுவதால் அதைத் தாண்டி இருக்கும் அரிசோனா, கலிஃபோர்னியா போன்ற பகுதிகளுக்கு மிக முக்கியமான ஏரியான மீட் (Lake Mead) ஏரிக்குக் குறைவான நீரே பாய்கிறது. இதனால் அங்கிருக்கும் விவசாய நிலங்களும் குடியிருப்புகளும் குறைந்த அளவிலான நீரையே பெற்றுக்கொண்டிருந்தன. மீட் ஏரியில் கலக்கும் கொலராடோ ஆற்றின் ஒரு கிளை நதியான கிலா  (Gila River) ஆற்றில் அங்கு வசிக்கும் பழங்குடி மக்கள் தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அந்த ஆற்றிலிருந்து வருடத்துக்கு 5000 கோடி லிட்டர் அளவுக்குத் தண்ணீர் திறந்திவிட வேண்டுமென்று கடந்த வருடம் மார்ச் மாதம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்மூலம் 180,000 குடும்பங்களுக்கு ஒரு வருடத்துக்குத் தண்ணீரை விநியோகிக்க முடியும்.

ராக்கி மலைத்தொடர்

அதிகரித்துவரும் மக்கள்தொகையும், அவர்களின் அதீதப் பயன்பாடும் கொலராடோ ஆற்றின் நீர் இருப்பைக் குறைத்துக்கொண்டே வருகிறது. அத்தோடு காலநிலை மாற்றங்களும் அவற்றுக்கான பங்கைச் செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன. உதாரணமாக அமெரிக்காவில் புவி வெப்பம் 2.5 டிகிரியாகத் தற்போது இருக்கிறது. கொலராடோ ஆறு உருவாகும் இடமான ராக்கி  மலைத்தொடரில் பனிக்காலங்களில் உருவாகும் பனிக்கட்டிகள் உருகி நீரோட்டத்தில் கலப்பதே ஆற்றின் நீராதாரத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. தென்மேற்கு மாகாண மக்கள் தங்கள் குழாய்களைத் திறந்தால் வரும் தண்ணீரில் 5-ல் நான்கு குவளைகள் பனிக்கட்டிகளால் கிடைத்ததாகவே இருக்குமளவுக்கு அவற்றின் பங்கு முக்கியமானது. ஆனால், கடந்த சில வருடங்களாக புவிவெப்பமயமாதலால் குறைவான அளவே பனி உருவாகிறது. அது ஆற்றின் நீராதாரத்தைக் குறைத்துக்கொண்டிருக்கிறது. நிலைமை இப்போதே இப்படியிருக்க 2050-ல் புவியின் வெப்பம் 5 டிகிரி வரை உயரக்கூடுமென்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

சுமார் 4 கோடி மக்களின் வாழ்வாதாரம் கொலராடோ ஆற்றைச் சார்ந்திருக்கிறது. ராக்கி மலைத்தொடரில் தொடங்கி மெக்சிகோ வரையிலும் பயணித்து அங்கே கார்டெஸ் கடலில் அதாவது கலிஃபோர்னிய வளைகுடாவில் கலக்கும் இந்த ஆற்றின் தற்போதைய நீர்மட்டம் சாதாரண மட்டத்துக்கும் குறைவாகச் சென்றுவிட்டது. கடந்த 17 வருடங்களாகவே அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணங்கள் போதுமான நீரில்லாமல் அதிகமான பஞ்சத்தைச் சந்தித்து வருகிறது. மொத்தம் 14 அணைகள், 9 நீர்த்தேக்கங்கள் மூலம் கொலராடோ ஆற்றின் நன்னீர் பாதுகாக்கப்பட்டு கடந்த பத்து ஆண்டுகளாக அளந்துதான் நீர் விநியோகம் செய்துகொண்டிருக்கின்றார்கள். இருப்பினும் நீரின் அளவு குறைந்து வருகிறது. தற்போது வருடத்துக்குக் குறைந்தது 12அடி அளவுக்குக் குறைந்துகொண்டிருக்கும் கொலராடோ ஆற்றின் நீர்மட்டம் அடுத்த 8 ஆண்டுகளில் 1000 அடி குறைந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறது ஒரு ஆய்வுக்குழு. நீர்மட்டம் இன்னும் 40 அடி குறைந்தால் நகரங்களுக்கு நீர் விநியோகிக்கும் குழாய்களுக்கும் கீழே சென்றுவிடும் நிலைதான் இப்போதே. நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் அரசாங்கம் திணறிக்கொண்டிருந்தது.

அமெரிக்கா

நீர்மட்டம் குறைந்துபோன போவெல் ஏரி

1930-களில் ஒருமுறை இதேபோன்ற நன்னீர்ப் பிரச்னை  ஏற்பட்டபோது அமெரிக்க அரசாங்கத்தின் பொறியாளர் பட்டாளமொன்று 1950களில் ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்தது. அத்திட்டத்தின்படி சுப்பீரியர் (Lake Superior), ஒன்டாரியோ ( Ontario), மிச்சிகன் ( Michigan), ஹுரான் ( Huron), எர்ரீ ( Erie) ஆகிய ஐந்து ஏரிகளின் தொகுப்பான கிரேட் ஏரிகள் (The Great Lakes) என்றழைக்கப்படும்  நீர்நிலைகளில் குழாய்கள் வழியாகத் தென்மேற்குப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யலாம் என்பதுதான். கிரேட் ஏரிகள் அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமெரிக்கா கனடா எல்லையில் அமைந்திருக்கிறது. அந்த ஏரிகளின் தண்ணீரைச் சமமாகப் பிரித்துக்கொள்ள இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் உள்ளது. அதனால் அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு கனடாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது அப்போதைய அரசாங்கம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இத்திட்டத்தை வகுத்த பொறியாளர் குழுவைப் பொறுத்தவரையிலும் பல லட்சம் லிட்டர் வீணாகக் கடலில்தானே கலக்கிறது அதைப் பயன்படுத்திக்கொண்டால் எந்தத் தவறுமில்லை.

இது நடந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில் வடகிழக்குப் பகுதியிலிருக்கும் கிரேட் ஏரிகளிலிருந்து மிஸ்ஸிஸிப்பி மற்றும் மிசோரி ஆறுகள் வழியாகக் குழாய்கள் அமைத்துக் கொலராடோ ஆற்றுக்கு நீரை எடுத்துக்கொள்ள அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்காக 86 தண்ணீர்க் குழாய்கள் அமைக்கத்  திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், அதற்குத் தற்போதும் கனடா அரசாங்கம் மறுப்புதான் தெரிவித்துள்ளது. இதன் விளைவாகவே அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வணிக ஒப்பந்தத்தை உடைத்த ஜனாதிபதி டிரம்ப் கனடாவுக்கு இறக்குமதி வரிவிதித்துள்ளார். அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகளுக்குமிடையில் வட  அமெரிக்க இலவச வணிக ஒப்பந்தம் ( North American Free Trade Agreement) 1994-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவும் கனடாவும் தங்களுக்குள் நிகழும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்துக் கொள்ளக்கூடாது. அந்த ஒப்பந்தத்தை டிரம்ப் உடைத்தது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. கனடா அரசாங்கம் இதை வலிமையாகக் கண்டித்தது. அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் கனடாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருள்களுக்கு அதிக வரியினை வசூலித்தது. வரிகட்டாமல் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைத் திருப்பியும் அனுப்பியது.

கொலராடோ ஆறு

வறண்டு கொண்டிருக்கும் கொலராடோ ஆறு

தனது கோரிக்கைகளுக்குச் (கட்டளைகளுக்கு) சம்மதிக்கவில்லையெனில் அந்த நாட்டோடு வணிக ரீதியாக மோதுவது அமெரிக்காவின் பழக்கம். தன்னோடு நீண்டகால உறவுகொண்டிருக்கும் கனடாவிடமே அந்த முறையைக் கையாள்வதற்கு முக்கியக் காரணம் தண்ணீர். அதன் நன்னீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு கிரேட் ஏரிகள் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். 3770 கி.மீ நீளம் கொண்ட சுப்பீரியர் ஏரியிலிருந்து நீர் எடுப்பதன் மூலம் தனது மாகாணங்களுக்கு மட்டுமின்றி மெக்சிகோவிற்கும்  விநியோகம் செய்யலாம். உலகின் மொத்த நன்னீரில் 20% தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த ஏரிகளில் அது சாத்தியமே. ஆயினும் இவர்களை எடுக்கவிட்டால் நமக்கும் இல்லாமல் எடுத்துவிடுவார்கள், பின்னர் வருங்காலத்தில் நாமும் அதே நிலைக்குத் தள்ளப்பட்டுவிடலாம் என்று எண்ணிய கனடா இந்தப் பிரச்னையை  நிலுவையில் போட்டுள்ளது. 900 வருடங்களில் இதுவரை காணாத  பஞ்சத்தையும் நீர் தட்டுப்பாட்டையும் சந்தித்துக்கொண்டிருக்கும் தென்மேற்கு அமெரிக்கா அதுவரை தாக்குப்பிடிக்கும் நிலையில் இல்லை. 6 கோடி ஏக்கர் விளைநிலங்களைக் கொண்டுள்ள தென்மேற்குப் பகுதியில் நீர் தட்டுப்பாடு காரணமாக அமெரிக்காவின் விவசாய உற்பத்தியும் தற்போது பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. அத்தோடு அங்கு வாழும் 22 பூர்வகுடிகளும் எப்போது வேண்டுமானாலும் நீருக்கான தங்கள் உரிமைகளைக் கோரிப் போராடலாம். அதற்கு வழியேற்படுத்தும் வகையில்தான் அமெரிக்காவின் மாகாண நிர்வாகங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. நகரங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் விநியோகிக்கும் அளவுக்கு அவர்களுக்கான நீரைத் தருவதில்லை.

மீட் ஏரி

 
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் இதற்குத் தீர்வுகாண அமெரிக்க அரசாங்கத்தால் முடியும். ஆனால், அதற்கான தொழில்நுட்பங்களை நிறுவ சில ஆண்டுகள் முதல் பத்தாண்டுகள் வரைகூட ஆகலாம். அதற்குள் தென்மேற்கு மாகாணம் முற்றிலுமாக வறண்டுவிடும். வேண்டுமானால், நீரை மிகவும் சிக்கனமாகச் சேமித்துச் செலவு செய்யலாம். கடந்த பத்தாண்டுகளாக எவ்வளவுதான் நீரைத் தேக்கிப் பார்த்துப் பார்த்து செலவு செய்தாலும் குறைந்துகொண்டேயிருக்கிறது கொலராடோ ஆற்றின் நீர்மட்டம். இந்நிலை அதையே நம்பியிருக்கும் அமெரிக்க மாகாணங்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. ஆகவே, தற்போது இருக்கும் ஒரே தீர்வு தி கிரேட் ஏரிகளில் குழாய் வழியாக நீர் எடுப்பதுதான். அதற்காக எந்த எல்லைக்கும் அமெரிக்கா செல்லலாம். சமீபத்தில் மத்திய சபைகளிலும், அமெரிக்க காங்கிரஸிலும் தென்மேற்கு மாகாணங்களின் செல்வாக்கு அதிகமாகி வருவதுகூட இதற்கான ஏற்பாடாகவே அந்நாட்டு அரசியல் வட்டாரங்களால் பார்க்கப்படுகிறது. இதன்மூலம், தி கிரேட் ஏரி குழாய் வழி நீர் விநியோகத் திட்டத்துக்குத் தேவையான ஆதரவுகளைப் பெற முயலுகிறார்கள்.

இது தொடக்கமே.  எண்ணெய் வளத்தின் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்ட அமெரிக்கா அதில் ஆதிக்கம் செலுத்த எத்தனை முயற்சிகளைச் செய்ததோ, அத்தனை  முயற்சிகளையும் தண்ணீர் வளத்துக்காகவும் செய்யும். தண்ணீருக்கான போர் வேறுவிதமானது. அது ஆயுத பலத்தால் நடைபெறாது. வணிக பலத்தால் நடைபெறும்.

மிச்சிகன் ஏரி


இப்போது கேள்வி என்னவென்றால், தண்ணீருக்காக கனடா மீது அமெரிக்கா எப்போது படையெடுக்கும்?


டிரெண்டிங் @ விகடன்